தனக்கு முன்னால் பாடிக் காண்பித்த இயக்குநர் அமீர்!

‘பருத்தி வீரன்’ படப் பாடல் அனுபவதைப் பகிர்ந்த மாணிக்க விநாயகம்.

ஊர் சுற்றிக்குறிப்புகள்:

*

சில தினங்களுக்கு முன்பு மறைந்த பின்னணிப் பாடகரான மாணிக்க விநாயகத்தை முன்பு எடுத்த நேர்காணலை மெகா டி.வி.யில் அஞ்சலி செலுத்தும் விதமாக ஒளிபரப்பினார்கள்.

சுமார் ஒரு மணி நேரம் வரை நீடித்த மாணிக்க விநாயகத்தைப் பேட்டி கண்டவர் உமா பத்மநாபன்.

மிகவும் இயல்பாகத் தன்னுடைய வாழ்வைச் சொல்லிக் கொண்டு போனார் மாணிக்க விநாயகம். இடையிடையே பல பாடல்களை உச்ச ஸ்தாயியில் பாடிக் காட்டினார்.

பிரபலம் என்கிற அகந்தையில்லாதபடி எளிமையாகத் தன்னுடைய குடும்பப் பின்னணியை விவரித்தார்.

பரத நாட்டிய ஆசிரியரான வழூவூர் ராமய்யா அவர்களின் மூன்றாவது மகனாகப் பிறந்து முதலில் பாடுவதைக் கற்றுக் கொள்ளப்போனதைச் சொன்னார்.

அவர் முதலில் பாடுவதற்காகச் சென்ற ஆசிரியர் இசைச் சித்தரான சிதம்பரம் ஜெயராமன்.

கல்லூரிக் காலத்தில் பாட ஆரம்பித்தபோது அவருக்கு முதல் பரிசைப் பெற்றுக் கொடுத்த பாடல்- ‘ராமு’ படத்தில் பி.பி.ஸ்ரீனிவாஸ் பாடிய “நிலவே என்னிடம் நெருங்காதே”.

அதைக் குரலைக் கீழிறக்கிப் பாடியும் காண்பித்தார்.

எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் “பாடும்போது நான் தென்றல் காற்று” என்ற பாடலின் சில வரிகளைப் பாடினார்.

வானொலியில் முதல் கிரேடு பிரிவில் ஆயிரக்கணக்கான பாடல்களுக்கு இசையமைத்ததைப் பற்றிச் சொல்லிக் கொண்டு போனபோது, பாடகி பி.சுசீலா கிருஷ்ணரைப் பற்றிய பாடலைப் பாடிவிட்டு, இவரை அழைத்துப் பாராட்டியிருக்கிறார்.

அப்போது அந்தக் கால ஹார்மோனியம் கிடைத்தால் நன்றாயிருக்கும் என்று சொல்லியிருக்கிறார் மாணிக்க விநாயகம்.

அன்றிரவே பி.சுசீலா அழைத்து, மறுநாள் காலை அந்தக்கால நட்சத்திரமான அஞ்சலி தேவி வீட்டிற்குப் போகச் சொல்லியிருக்கிறார்.

அதன்படி இவர் அஞ்சலிதேவி வீட்டுக்குப் போனபோது, அவரது கணவரும், இசையமைப்பாளருமான ஆதி நாராயணராவ் (“கண்ணாலே பேசிப் பேசிக் கொல்லாதே”- அடுத்த வீட்டுப் பெண்- ஞாபகத்திற்கு வருகிறதா?) பயன்படுத்திய மூன்று ஆர்மோனியப் பெட்டியைக் கொடுத்து, மாணிக்க விநாயகத்தின் தலையில் கை வைத்து ஆசீர்வதித்ததை நெகிழ்ச்சியோடு பகிர்ந்தார்.

ஒரு ஹோட்டலில் நடந்த விழாவில் நாட்டுப்புறப் பாடல்கள் இரண்டைப் பாடிய பிறகு இசையமைப்பாளர் வித்யாசாகரிடமிருந்து இருந்து அழைப்பு.

விக்ரம் நடித்த படத்தில் முதல் பாடலே ஹிட். (“கண்ணுக்குள்ளே வைச்சு”)

அடுத்தடுத்து பல திரைப்படப் பாடல்கள். ‘தூள்’ படத்தில் தூளான பாட்டு.

ஏ.ஆர்.ரஹ்மான் அழைத்து ஒரு பாடலுக்குப் பாடப்போனபோது, அங்கே பாட நள்ளிரவு நேரத்திலும் பாட வந்திருந்தவர் மூத்த இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன்.

அவர் பாடிய பிறகும் தான் பாடுவதை அவர் பார்த்துக் கொண்டிருந்தபோது, லேசான நடுக்கம் இருந்ததைப் பவ்யத்துடன் நினைவுகூர்ந்தார்.

அமீர் இயக்கிய ‘பருத்தி வீரன்’ படத்தில் யுவனின் இசையில், உச்சகட்ட குரலில் “ஏலே ஏலேலே” என்று பிரபலமான பாடலைப் பாடப்போனபோது, ரிக்கார்டிங் தியேட்டரில் இயக்குநரான அமீர் உட்கார்ந்து தன்னுடைய எதிர்பார்ப்பைப் பாடிக் காண்பித்ததை வியப்புடன் தெரிவித்தார்.

கூடவே தெலுங்கில் தான் பாடிய பாடல்களைப் பாடிக்காட்டிய பிறகு, மும்பை அனுபவங்களைச் சொல்லிவிட்டு சில இந்திப் பாடல்களை மிக மென்மையாகப் பாடிக் காண்பித்து ஆச்சர்யப்படுத்தினார்.

எத்தனையோ ஜாம்பவான்கள் இருக்கும் திரையிசையில் தான் பின்னணி பாட வந்ததைப் பற்றிக் குறிப்பிடும்போது, கூடுதலான பணிவு காட்டினார்.

குடும்பத்தில் அவருடைய மனைவி, மகன், மருமகள் என்று பலரும் மாணிக்க விநாயகத்தைப் பற்றிப் பகிர்ந்து கொண்ட அனுபவங்கள், அவரைப் பாசமான குடும்பத் தலைவராகக் காட்டின.

இலங்கையில் பாடுவதற்காகச் சென்றபோது, அங்கிருந்த தேயிலைத் தோட்டத்தில் வேலை செய்யும் ஒரு பெண்மணி அவரைப் பாராட்டியதைச் சொல்லும்போது கண்கலங்கியபடி குரல் தழுதழுக்கச் சொன்னார் மாணிக்க விநாயகம்.

“அதை விட எனக்கு வேறென்ன வேண்டும்?”

-யூகி

28.12.2021 12 : 00 P.M

You might also like