அதிமுகவில் தனுஷ்: சாத்தியமா, அசாத்தியமா?

நடிகர் தனுஷ் அதிமுகவில் சேரப் போகிறார் என்று பெரும் பேச்சு கிளம்பி இருக்கிறது.

எடப்பாடி பழனிசாமியின் மகன் மிதுன் இது குறித்து தனுஷை சந்தித்துப் பேசியதாகவும் தனுஷ் அதை மறுக்கவில்லை என்றும் தொடர்ந்து ஆலோசனை நடக்கிறது என்றும் சந்தேகங்களுக்கு அப்பாற்பட்ட ஒரு பேச்சு நிலவுகிறது.

அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியும் ”தனுஷ் வந்தால் அவரை வைத்து அதிமுகவை பலப்படுத்துவோம்” என்று ஓப்பன் ஸ்டேட்மென்ட் விடுகிறார்.

தமிழக வெற்றிக் கழகம் சார்பில் அமைச்சர் மரிய வில்சன் அதை ரசிக்கவில்லை என்பது அவர் பதில் சொல்லும் விதத்திலேயே தெரிகிறது.

இந்த இரண்டு சம்பவங்களும் கூட தனுஷ் – மிதுன் சந்திப்பு பொய்யில்லை என்பதைப் புரிய வைக்கிறது.

தனிக்கட்சிக்குத் திட்டமிடுவதாகக் கூறப்படும் தனுஷ் அதிமுகவில் சேருவாரா?

கொஞ்சம், தமிழ் சினிமாவும் தமிழக அரசியலும் என்ற கோணத்தில் பார்த்தால், என்ன நடக்கும் என்பதை ஓரளவு புரிந்துகொள்ள முடியும்.

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரைப் பொறுத்தவரை அவரை அரசியலுக்கு வந்த நடிகர் என்று மட்டும் நினைப்பது நுனிப்புல் மேய்ச்சல்.

ஹீரோ ஆவதற்கு முன்பே அவர் காங்கிரஸ் அபிமானி. முதல் கல்யாணத்தில் கதர் சட்டை அணிந்துதான் தாலி கட்டுவேன் என்று சொன்ன காங்கிரஸ் தொண்டர் அவர்.

பின்னர் அன்றைய திராவிட இயக்கக் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு திமுகவில் சேர்ந்தார். திமுகவை வளர்த்தார்.

கட்சியைப் பாமர மக்களிடம் கொண்டு போவதில் முக்கிய பங்கு எம்.ஜி.ஆருக்குத்தான் என்பது அண்ணாவுக்கு தெரியும்.

அதனால்தான் ”தம்பி முகம் காட்டினால் முப்பது லட்சம் ஓட்டு; நடந்தால் நாற்பது லட்சம் ஓட்டு” என்று எம்.ஜி.ஆரைப் புகழ்ந்தார் அண்ணா.

“நீ நின்றால் மாநாடு; நடந்தால் ஊர்வலம்; பேசினால் பொதுக் கூட்டம்” என்றார்.

ஒருமுறை தேர்தல் செலவுக்கு பணம் தர எம்.ஜி.ஆர் ஆர்வத்தோடு முன்வந்தபோது, “பணம் வேண்டாம்.. மக்களிடம் போய் உன் முகம் காட்டு” என்றார்.

எம்.ஜி.ஆர் மட்டும் இல்லாவிட்டால் திமுக அந்தத் தேர்தலில் ஜெயித்திருக்க அல்லது அவ்வளவு சிறப்பாக ஜெயித்திருக்க முடியாது. சொல்லப்போனால் திமுக அப்போது ஆட்சிக்கு வராமலேயே போயிருக்கலாம்.

அதே சூழலில் அண்ணா இருந்திருந்தால் திமுக கலைஞர் கைக்கு வராமல் கூடப் போயிருக்கலாம்.

எம்.ஜி.ஆரின் அரசியல் எழுச்சிக்கு சினிமா காரணமாக இருக்கலாம். ஆனால், அவர் சினிமா நடிகர் மட்டுமல்ல.

மக்களுக்கு தான் சொல்ல நினைத்ததைச் சொல்ல வேண்டும் என்பதற்காக தயாரிப்பு, இயக்கம் என்று அவர் ஆரம்பித்தபோதே அவர் அரசியல்வாதி ஆகி விட்டார்.

‘அண்ணா என் தலைவர் ; காமராஜர் என் வழிகாட்டி’ என்று சொல்லும் அளவுக்கு அவருக்கு அரசியல் தெளிவு இருந்தது.

சொல்லப் போனால் எம்.ஜி.ஆர். அதிமுகவை ஆரம்பித்த பிறகு கூட பல நடிகர்களை திமுக பயன்படுத்திக் கொண்டது.

அதேநேரம் கலைஞரை அடுத்து அன்றைய நிலையில் திமுகவில் வைகோ இருந்தார். மு.க.அழகிரியும் ஸ்டாலினும் உருவாக்கப்பட்டார்கள். ஸ்டாலினுக்கு சினிமா நடிப்பு வரவில்லை.

அரசியலில் ஒருவர் மக்கள் மத்தியில் பெயர் பெற வேண்டும் என்றால் சினிமா பிரபலம், இல்லாவிட்டால் பேச்சுத் திறமை, அதுவும் இல்லாவிட்டால் போராட்டக் களமாடுதல் போன்றவை முக்கியம்.

சினிமாத்துறை அல்லாதவர்கள் என்று பார்த்தால் அதிமுகவில் அன்று எம்.ஜி.ஆருக்கு அடுத்தபடியாக வேறு யாரும் உருவாகவில்லை.

காளிமுத்து போன்ற ஓர் சிலர் கூட மேடைப் பேச்சில் மின்மினிகளாகத்தான் இருந்தார்கள்.

எனவே தனக்குப் பிறகு இந்தக் கட்சி இருக்கவேண்டும் என்றால் தன்னைப் போல பிரபலமான ஒருவர் கட்சியில் இருக்க வேண்டும் என்று நினைத்துதான் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவை வளர்த்தார்.

அது சரி என்பது போல, ஜானகி அணி – ஜெயலலிதா அணி என்று இரண்டாகப் பிரிந்த பிறகு மக்களின் ஆதரவு ஜெயலலிதாவுக்குத்தான் கிடைத்தது. ஜானகி அம்மையாரும் புரிந்து கொண்டு பெருந்தன்மையாக விலகினார்.

ஏனெனில் தனக்குப் பிறகு அதிமுக இருக்க வேண்டும் என்பதுதான் எம்.ஜி.ஆரின் முக்கிய ஆசை என்பதை ஜானகி அம்மையாரும் உணர்ந்து இருந்தார்.

ஜெயலலிதா விஸ்வரூபம் எடுத்தார்.

தனக்குப் பிறகு யார் என்று எம்.ஜி.ஆர் யோசித்தார். ஆனால், ஜெயலலிதா யோசிக்கக்கூட இல்லை.

எம்.ஜி.ஆர் ஜெயலலிதா இருவருக்குமே உயிரியல் வாரிசுகள் இல்லை. எம்.ஜி.ஆர் திறந்த மனதோடு இருந்தார்.

எனவேதான் பாக்கியராஜை கலை உலக வாரிசு என்று அறிவித்தார். அரசியல் வாரிசு என்று யாரையும் நேரடியாக சொல்லும் அளவுக்கு யாரும் இல்லை. ஜெயலலிதாவுக்கு அப்படி யாரும் உருவாவதிலேயே உடன்பாடு இல்லை.

இன்னொரு பக்கம் சிவாஜி, பாக்யராஜ், டி.ராஜேந்தர், சரத்குமார் ஆகியோர் தனிக்கட்சி ஆரம்பித்து பெருத்த அடி வாங்கி, அரசியலை விட்டு ஒதுக்கினார்கள் அல்லது பெரிய கட்சிகளில் கரைந்தார்கள்.

அதே நேரம் விஜய் – அஜித் இருவரும் சினிமாவில் வளர்ந்தார்கள். விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரன் திமுக ஆதரவாளராக இருந்த காரணத்தால் அதிமுக தரப்பும் அஜித் தரப்பும் ஒருவருக்கு ஒருவர் நேசப்பார்வைப் பார்த்தார்கள்.

அஜித்தை அதிமுகவுக்கு கொண்டு வரலாம் என்ற பேச்சை ஒரேயடியாக முறித்துப் போட்டார் ஜெயலலிதா.

பெரிய நடிகர்கள் சிவப்புக் கம்பள வரவேற்போடு கட்சிக்குள் வருவதை ஜெயலலிதா விரும்பவில்லை.

அவரைப் பொறுத்தவரை குண்டு கல்யாணம், விந்தியா, எஸ்.எஸ்.சந்திரன், போன்ற இரண்டாம் நிலை நடிகர்கள் பிரச்சாரம் செய்வதற்கு மட்டும் அதிமுகவுக்கு போதும் என்பது ஜெயலலிதாவின் நிலைப்பாடு.

ஆனால், அவரே எதிர்பாராமல் விஜயகாந்த் அரசியலில் குதித்து ஜெயித்தார்.

அவரது அரசியல் இன்று விஜய் செய்வது போலவே திமுகவுக்கு எதிராக இருந்த காரணத்தால் அதிமுகவோடு ஓர் இணக்கம் ஏற்பட்டது.

இந்த நேரத்தில்தான் விஜய் சார்பில் அவரது அப்பா எஸ்.ஏ.சந்திரசேகருக்கு அரசியல் ஆசை வந்தது. திமுக ஆதரவாளராக மகனை வளர்க்க வேண்டும் என்பது அவரது திட்டம்.

ஆனால், வேறு யாருக்கும் அமையாத அளவுக்கு விஜய்காந்த் கட்சியில் சுய சாதி மற்றும் சுய (தெலுங்கு) மொழி ஆதிக்கம் வளர்ந்த காரணத்தால் அவரது கட்சி பலவீனமானது.

உண்மையில் ஒரு முதலமைச்சர் வேட்பாளர் எப்போதும் தன்னைச் சுற்றி உள்ள ஆட்களாலேயே வீழ்த்தப்பட்ட அவல அதிசயம் நடந்தது.

சாதி, மொழி உணர்வால் வளர்ந்த கட்சிகள் உண்டு. ஆனால், பெரும்பாலான மொழி மக்களுக்கு எதிரான வேற்று மொழி சாதிய உணர்வால் வீழ்த்தப்பட்ட கட்சி அவருடையதுதான்.

ஜெயலலிதா காலத்தில் தற்காலிக முதல்வராக இருந்த ஒரே தகுதியில் பன்னீர்செல்வம் ஜெயலலிதாவுக்கு அடுத்த இடத்துக்கு வந்தார்.

ஆனால், அவரை அந்த இடத்துக்குக் கொண்டு வந்த சசிகலாவுக்கு அந்த இடத்தை விட்டுக் கொடுக்க அவர் மறுக்க, எடப்பாடி உருவாக்கப்பட்டார். தேர்தலில் வென்று ஆட்சி அமைத்தார்.

கட்சியில் குழப்பங்கள் உருவானது எல்லாம் பெரிய விஷயமில்லை. எல்லா இடத்திலும் உள்ளதுதான்.

ஆனால், எம்.ஜி.ஆர். அளவுக்கோ, ஜெயலலிதா அளவுக்கோ மக்களை ஈர்க்கிற தலைவர்கள் உருவாகவில்லை. எடப்பாடி ஓரளவு தாக்குப் பிடித்தார்.

ஆனால், திமுகவில் கலைஞர் போய் ஸ்டாலின் வந்து அடுத்த உதயநிதியும் பிரபலமானார்.

அவருக்கு எம்.ஜி.ஆர், ஜெயலலிதா பாணியில் (அவர்கள் அளவுக்கு இல்லை என்றாலும்) ஓரளவுக்கு சினிமா செல்வாக்கும் இருந்தது.

ஸ்டாலின் ஆட்சிக்கு வந்த பிறகு அதிமுகவில் தொய்வு ஏற்பட்டது. மீண்டும் அதிமுகவில் அஜித் பேச்சு எழுந்தது. கட்சியில் பலருக்கு அந்த ஆசையும் இருந்தது.

ஆனால், அஜித் ரசிகர் மன்றத்தைக் கலைத்துவிட்டு தன்னை ”தல என்று அழைக்க வேண்டாம்” என்று சொன்னபோது, ‘அதிமுகவில் அஜித்’ என்ற வாதம் தலை இழந்த முண்டமானது.

அதே நேரம் திமுகவில் தெலுங்கு பேசும் சமூக மக்களின் மாபெரும் ஆதிக்கம், கட்சியில் எல்லா மட்டத்திலும் வாரிசு அரசியல் வளர்ந்தது.

புதிய தொண்டர்கள் கட்சியில் தலை எடுக்க முடியாத நிலை, இவற்றால் திமுகவினருக்கே ஒரு சலிப்பு ஏற்பட்டது .

ஆக, அரசியல் ‘போர்’ அடிப்பதாக உணர்ந்த இளையதலைமுறை தங்களுக்குப் பிடித்தமான ஒரு வசீகர நபரைத் தேடியது.

சரியாகப் பயன்படுத்திக் கொண்டு உள்ளே வந்தார் விஜய். எனினும் ஆட்சி பிடிக்கும் அளவுக்கு ஜெயிப்போம் என்று அவர் கூட நம்பவில்லை.

எனவேதான் தேர்தல் முடிவுக்கு முன்பு ‘ஜெயித்தவர்கள் உடனே பனையூருக்கு வர வேண்டும்’ என்று சொன்னார்.

தனது கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை திமுக அல்லது அதிமுக விலைக்கு வாங்கி விடும் என்ற பயம் அவருக்கு இருந்தது.

ஆனாலும் மெஜாரிட்டி கிடைக்கவில்லை என்றாலும் ஓர் வழியாக ஆட்சியை பிடித்தார்.

அவ்வளவுதான்.

புதிதாக நடிகர்கள் யாரையும் அரசியலில் பெரிதாக வளரவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்த – கலைஞர், ஜெயலலிதா, ஸ்டாலின், எடப்பாடி இவர்கள் போட்ட தடைச் சுவர் உடைந்து நொறுங்கியது.

முதல்வர் ஆசையை ஆழ் மனசுக்குள் போட்டுப் புதைத்து வைத்திருந்த நடிகர்கள் பலரும் அதை பாதாளக்கரண்டி போட்டு வெளியே எடுத்தார்கள்.

அப்படி வெளியே எடுத்தவர்களில் முதன்மையானவர் தனுஷ். அடுத்தவர் சிவகார்த்திகேயன்.

தனுஷ் தனது ஆதரவாளர்களை வைத்து கூட்டங்கள் மாநாடுகள் என்று திட்டமிடுகிறார். சிவகார்த்திகேயன் ரசிகர்களை சந்திக்கிறார்.

விஜய்யின் வெற்றி காரணமாக இப்போது திமுக, அதிமுக இரண்டுக்குமே சினிமா நடிகர்கள் பலம் தேவைப்படுகிறது என்றாலும், அதிமுகவுக்கு அதிகமாகவே தேவைப்படுகிறது.

தவிர திமுகவுக்கு போனால் அந்தக் கட்சியின் தலைமை இடத்துக்கு போக முடியாது. அது குடும்ப வாரிசுக் கட்சி. தவிர அங்கே உதயநிதி ஸ்டாலின் என்ற நடிகருமானவர் இருக்கிறார். பெரும் தயாரிப்பு நிறுவனங்கள் இருக்கிறது.

நாளைக்கு இன்ப நிதியைக் கூட அவர்கள் சினிமாவில் இறக்கிக் கொண்டு வருவார்கள். அங்கே போவது மற்ற பெரிய நடிகர்களுக்கு வளர உதவாது.

ஆனால், அதிமுக அப்படி இல்லை. தவிர அதிமுகவில் இப்போது யாருக்கும் வசீகரம் இல்லை. எடப்பாடி பழனிசாமியின் வாரிசு மிதுன் புகைப்படம் கூட அவரது கட்சிக்காரர்கள் பலருக்கும் தெரியாது.

எனவே ஒரு நடிகரை கையில் எடுத்து, தனக்கு அடுத்து முக்கியப் பொறுப்பு கொடுத்து கட்சியை வளர்ப்பது. அந்த நடிகரும் வளரட்டும்.

பின்னர் ஒரு நாளில் முன்பு கலைஞர் எம்.ஜி.ஆர். இடையே பிரச்சனை வந்தது போல இங்கேயும் வந்தால் அப்போது பார்த்துக் கொள்ளலாம் என்று எடப்பாடி தரப்பு நினைக்கிறது.

எம்.ஜி.ஆரை கலைஞரால் வீழ்த்த முடியாததற்கு காரணம் எம்.ஜி.ஆர் திமுகவை கட்டி எழுப்பிய தூண்களில் ஒருவர்.

ஆனால், தனுஷ் அதிமுகவில் சேர்ந்து வளர்ந்தாலும் பெரிதாக அரசியல் தெரியாத தனுஷை அரசியல் சாணக்கியத்தனத்தால் தட்டுவது எளிது என்பது அதிமுகவின் எண்ணமாக இருக்கலாம்.

இன்னொரு விஷயத்திலும் அதிமுகவுக்கு தனுஷ் அவசியமாகிறார்.

விஜய் கட்சி ஆரம்பித்து வென்றதும் திமுகவில் இருந்து பெரிதாக யாரும் தவெகவுக்கு போகவில்லை.

ஆனால், வெல்வதற்கு முன்பே கட்சிமாறி கலிகால அரசியல் சாணக்கியர் ஆனார் அதிமுகவின் செங்கோட்டையன்.

வென்ற பிறகு கும்பல் கும்பலாக அதிமுகவினர் பலரும் தவெகவுக்கு ஓடினார்கள்.

போனவர்கள் எல்லாம் சாதாரண தொண்டர்களோ கிளைக்கழக பொறுப்பாளர்களோ இல்லை. முன்னாள் அமைச்சர்கள், பெரிய பதவிகளில் இருந்தவர்கள்.

அதுவும் கவுரவமாக கம்பீரமாக போய் சேர்ந்தால் கூட பரவாயில்லை. விஜய் படத்துக்கு டிக்கெட் வாங்கிய கூட்டம் தியேட்டர் கதவு திறந்ததும் ஓடுவது போல, விஜய்யின் அலுவலகப் பின் கதவை உடைத்துக் கொண்டு ஒருவர் மேல் ஒருவர் ஏறி, ஓடித் தாவி, சட்டை கிழிந்து கசங்கி அதிமுகவினர் உள்ளே ஓடினார்கள்.

முன்பு ஒரு முறை, ஒரு பட விஷயமாக யாரைச் சந்திக்க விஜய் மூன்று மணி நேரம் காத்து இருந்தாரோ, அந்த கடம்பூர் ஜனார்த்தனமும் அப்படி அந்த கும்பலில் ஓடி தவெகவில் சேர்ந்தவர்களில் ஒருவர்.

அதிமுக சார்பில் ஜெயித்த வேட்பாளர்களை தவெக கட்சிக்கு இழுத்து தொகுதியை காலியாக்கி மீண்டும் தவெக சார்பிலேயே அவரை ஜெயிக்க வைக்கிறார் விஜய்.

இன்னும் பதினைந்து பேர் வருவார்கள் என்று பயமுறுத்துகிறார் செங்கோட்டையன்.

அப்படி மேலும் மேலும் அதிமுகவில் இருந்து தவெகவுக்கு எல்லோரும் போய்க் கொண்டிருந்தால், அதைப் பயன்படுத்திக் கொள்ள அதிமுகவில் எடப்பாடிக்கு எதிராக இயங்கும் அணி தயாராகவே இருக்கும்.

எல்லோரையும், அரவணைத்துப் போகாத காரணத்தால் அதிமுக அழித்துக் கொண்டிருக்கிறார் எடப்பாடி என்று அவர் மேல் பழி சுமத்தி, கட்சியையே அவரிடம் இருந்து அபகரிக்கவும் வாய்ப்பு உண்டு.

இது எல்லாம் நடக்காமல் இருக்க, இப்போது எடப்பாடிக்கும் தனுஷ் தேவைப்படுகிறார்.

தனுஷ் கட்சிக்கு வந்து அவரது ரசிகர்கள் அதிமுக தொண்டர்களானால் தவெக வுக்கு மேற்கொண்டு அதிமுக பிரமுகர்கள் போவது குறையும். காரணம் அவர்களுக்கும் ஒரு ‘நம்பிக்கை’ வரும். அது அதிமுக தொடர்ந்து எடப்பாடி பக்கமே இருக்க உதவும்

எனவே பின்னாளில் என்ன நடந்தாலும் இப்போதைக்கு அதிமுகவுக்கும் எடப்பாடிக்கும் தனுஷ் அவசியத் தேவை.

சரி தனுஷுக்கு அதிமுக அவசியத் தேவையா?

முதலமைச்சர் வேட்பாளர் என்று எதிர்பார்க்கப்பட்ட விஜயகாந்த் முதல், பாக்கியராஜ், ராஜேந்தர், சரத்குமார் எல்லோரும் சோபிக்காததற்கு முக்கியக் காரணம் அவர்கள் எல்லோரும் சினிமாவில் இருந்து திடீரென அரசியலுக்கு வந்தவர்கள்.

தனிக்கட்சி என்று ஜீரோவில் இருந்து ஆரம்பித்தவர்கள். அப்படி ஆரம்பிக்கும் ஒரு கட்சியை வளர்த்து எடுக்கும் ஆற்றலோ அரசியல் அனுபவமோ பொறுமையோ இல்லாதவர்கள்.

விஜய் மட்டும் ஜெயிக்கவில்லையா என்று கேட்கலாம்.

ஜெயித்தாலும் மெஜாரிட்டி இல்லாதது, மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்கள் மூலமே அரசியல் கற்பது, வெளிப்படையான உள்கட்சி சண்டைகள், நிர்வாகக் கோளாறுகள், அமைப்பு ரீதியான குளறுபடிகள் என்று நிறைய பிரச்சனைகள் விஜய்க்கும் தவெக ஆட்சிக்கும் இருக்கிறது.

தனுஷ் தனிக்கட்சி ஆரம்பித்தால் கட்சி நடத்தும்போதே நிலவரம் இன்னும் கலவரம் ஆகும். இந்தச் சூழலில், அவரால் விஜய் அளவுக்கு கூட தாக்குப் பிடிக்க முடியாது.

விஜய் அளவுக்கு தனுஷுக்கு செல்வாக்கு இல்லை என்பது தனுஷுக்கே தெரியும்.

இந்த நிலையில் தனிக்கட்சி என்பது தனுஷுக்கும் பெரிய ரிஸ்க்தான்.

விஜயகாந்த் அளவுக்கு வருவது கூட சிரமம்தான் (விஜயகாந்தின் வீட்டு மொழியும் தனுஷின் வீட்டு மொழியும் ஒன்று என்ற ரிஸ்க்கும் தனுஷுக்கு இருக்கிறது.)

அப்படி தனிக்கட்சி ஆரம்பித்தால் பாக்யராஜ், டி.ராஜேந்தர் வரிசையில் தனுஷ் போவதற்கான வாய்ப்பே அதிகம்.

ஆனால், அதிமுகவில் இன்னும் இரட்டை இலை சின்னத்துக்காகவும் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா முகத்துக்காகவும் ஓட்டுப் போடும் மக்களால்தான் அதிமுக இந்த சட்டமன்றத் தேர்தலில் விஜய் அலையையும் மீறி இவ்வளவு தொகுதிகளில் ஜெயித்தது.

தனுஷ் அதிமுகவில் இணைந்தால் இந்த மக்களின் ஆதரவு அப்படியே தனுஷுக்கு கிடைக்கும். அப்பா, தாத்தா போட்டு வைத்த ‘பிக்சட்’ டெபாசிட் பணம் மாதிரி அது பெரிய பலம்.

வேறு கட்சிகளில் இருந்து கொண்டு “எம்.ஜி.ஆர். ஆட்சியை அமைப்பேன்” என்று சொல்வதற்கும் அதிமுகவில் சேர்ந்து அதே வார்த்தைகளைச் சொல்வதற்கும் எவ்வளவு வித்தியாசம்? எவ்வளவு பலம்.!

ஆட்சியில் இருந்தாலும் தவெக கட்சி அமைப்பில் இன்னும் முறையான வடிவம் புலப்படவில்லை. பூத் கமிட்டி விசயத்தில் கூட அவர்களிடம் தெளிவு இல்லை.

எனவே தனுஷ் அதிமுகவில் சேர்ந்து பணம், புகழ், அதிகாரம் அனைத்தையும் அனுபவித்துக் கொண்டே நிதானமாக அரசியல் பழகலாம். பின்னாளில் முதல்வர் வேட்பாளர் கூட ஆகலாம்.

இதைவிட தனுஷுக்கும் நல்ல சாய்ஸ் இப்போது இல்லை.

அன்று அண்ணாவின் திமுகவால் எம்ஜிஆரும், எம்ஜிஆரால் திமுகவும் பலன்பெற்றது போல, இப்போது தனுஷால் அதிமுகவும் அதிமுகவால் தனுஷும் பலன் பெறுவார்கள்.

எம்.ஜி.ஆர். என்ற மாபெரும் மனிதரால் உருவாக்கப்பட்ட அதிமுகவின் நிலை வருத்தத்துக்குரியதுதான் என்றாலும் இன்று நிலைமை அதுதான்.

பின்னாளில் எடப்பாடி ஒரு கலைஞராகவும் தனுஷ் ஓர் எம்.ஜி.ஆராகவும் மிதுன் ஒரு மு.க.ஸ்டாலினாகவும் ஆக முடியுமா என்பதை எல்லாம் அப்புறம் பேசிக் கொள்ளலாம் அல்லது சிரித்துக் கொள்ளலாம்.

எனவே அதிமுகவில் தனுஷ் சேர்வதற்காக வாய்ப்பு பிரகாசமாகவே இருக்கிறது.

கட்சியில் இப்போது தனுஷுக்கு என்ன பதவி? கட்சியில் இருந்து தனுஷுக்கு கைமாறும் பணம் எவ்வளவு? தனுஷ் தரப்பு ஆட்களுக்கு அதிமுகவில் என்ன பொறுப்பு? என்பதையெல்லாம் பொறுத்தே தனுஷ் அதிமுகவில் சேர்வாரா? சேர்கிறார் எனில் எவ்வளவு சீக்கிரம் சேர்வார் என்பது எல்லாம் தெரியவரும்.

பொறுத்திருந்து பார்ப்போம்!

– சு. செந்தில் குமரன்

You might also like