மழைக்காலம் என்பது இயற்கையின் அழகை ரசித்து மகிழும் காலமாக இருந்தாலும், கூடவே சளி, இருமல், செரிமானக் கோளாறுகள் மற்றும் காய்ச்சல் போன்ற நோய்த்தொற்றுகளும் எளிதில் பரவும் காலம்.
எனவே, மழைக்காலத்தில் உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கவும், ஆரோக்கியமாக வாழவும் சிறந்த உணவுகள் மற்றும் சமையலறை தூய்மை முறைகள் குறித்த முழுமையாகப் பார்க்கலாம்.
1. நோய் எதிர்ப்புச் சக்தியை உயர்த்தும் மூலிகைக் குடிநீர்:
உடலின் உட்புற வெப்பத்தை சீராக வைக்கவும், தொண்டைத் தொற்றைத் தடுக்கவும், நோய் எதிர்ப்புச் சத்தியை அதிகப்படுத்த சுடச்சுட அருந்தும் மூலிகை குடிநீர் மழைக் காலத்தில் பெரிதும் உதவுகின்றன.
திரிகடுகு கஷாயம்: சுக்கு, மிளகு, திப்பிலி சேர்ந்த கஷாயம் தொண்டையில் உள்ள கரகரப்பை நீக்கி, நுரையீரலுக்குப் பலம் சேர்க்கும்.
இஞ்சி – எலுமிச்சை தேநீர்: இஞ்சியில் உள்ள ‘ஜின்ஜரோல்’ (Gingerol) என்ற கலவை மூச்சுப் பாதையில் உள்ள அடைப்புகளைச் சரிசெய்யும். செரிமானத்தைத் தூண்டுவதுடன், சிறந்த கிருமி நாசினியாகவும் செயல்படுகிறது.
துளசி – சீரகக் குடிநீர்: துளசி இலைகளையும் சீரகத்தையும் நீரில் கொதிக்க வைத்து அருந்துவது உடலுக்கு உடனடி நோய் எதிர்ப்புத் திறனைத் தரும்.
மஞ்சள் டீ: தண்ணீர் – 2 கப், மஞ்சள் தூள் ,அல்லது இடித்த பச்ச மஞ்சள், இஞ்சி – சிறிய துண்டு, மிளகுத் தூள் – ஒரு சிட்டிகை, இவற்றை கொதிக்க வைத்து மிதமான சூட்டுடன் தேன் அல்லது பனங்கற்கண்டு தேவையான அளவு, எலுமிச்சைச் சாறு – சில துளிகள் சேர்த்து குடித்து வரவேண்டும்.
இதில் உள்ள கிருமி நாசினி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் பண்புகள் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரித்து, சளி, இருமல் மற்றும் தொண்டை வலியைப் போக்க உதவுகிறது.
2. செரிமானத்தைத் தூண்டும் ரசம் மற்றும் சூப் வகைகள்:
மழைக்காலங்களில் உணவில் ரசம் மற்றும் சூப்களுக்கு மிக முக்கிய இடமுண்டு.
பூண்டு மிளகு ரசம்: பூண்டில் உள்ள ‘அல்லிசின்’ (Allicin) மற்றும் மிளகில் உள்ள ‘பைப்பரின்’ (Piperine) ஆகியவை இணைந்து செரிமானப் பாதையைச் சுத்தப்படுத்துகின்றன.
ஆட்டுக்கால் / கோழி சூப்: அசைவப் பிரியர்கள் சுடச்சுட மிளகுத் தூள் தூவிய சூப் அருந்துவது உடலுக்கு உடனடி பலத்தையும் வெப்பத்தையும் அளிக்கும்.
காய்கறிச் சூப்: முட்டைக்கோஸ், கேரட், காளான் போன்றவற்றை நன்றாக வேக வைத்துச் செய்யப்படும் சூப்கள் உடலுக்குத் தேவையான வைட்டமின்களை அளிக்கும்.
3. ஆரோக்கியம் தரும் பாரம்பரியத் துவையல்கள்:
இது மழைக்காலத்திற்கு ஏற்ற வேலை குறைவான சைடிஷ். உணவில் காரமும் மருத்துவக் குணமும் நிறைந்த துவையல்களைச் சேர்த்துக்கொள்வது பசியைத் தூண்டுவதோடு உடலையும் சீராக வைக்கும்.
தூதுவளை துவையல்: சளி, ஆஸ்துமா மற்றும் மூச்சுத் திணறல் பிரச்சினைகளுக்குத் தூதுவளை மிகச்சிறந்த நிவாரணியாகும்.
பிரண்டை துவையல்: வயிற்றுப் பொருமலை நீக்கி, பசியின்மையைப் போக்கும்.
கறிவேப்பிலை – இஞ்சித் துவையல்: செரிமான மண்டலத்தை வலுப்படுத்தி, பித்தத்தைச் சீராக்கும்.
4. மாலை நேரத்திற்கு ஏற்ற சத்தான தானிய சுண்டல்கள்:
மாலை நேர நொறுக்குத் தீனிக்குப் பதிலாக உடலுக்கு நன்மையளிக்கும் தானியங்களைத் தேர்வு செய்யலாம்.
· அவித்த சுண்டல்: பாசிப்பயறு, தட்டப்பயறு, கொண்டைக்கடலை ஆகியவற்றை அவித்து மிளகுத் தூள் மற்றும் பெருங்காயம் சேர்த்துச் சாப்பிடுவது உடலுக்குத் தேவையான புரதத்தைத் தரும்.
· சுட்ட சோளம்: சோளத்தில் உள்ள நார்ச்சத்தும், அதில் தடவப்படும் எலுமிச்சை மற்றும் மிளகாய்த்தூளின் சுவையும் மழைக்காலத்திற்குப் மிகவும் பொருத்தமானதாக இருக்கும்.
5. மழைக்கால சமையலறை எப்படி இருக்க வேண்டும்.
மழைக்காலத்தில் உணவுத் தயாரிப்பிலும் சமையலறை தூய்மையிலும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
காய்கறிகளைக் கழுவுதல்: காய்கறிகள் மற்றும் பழங்களை வெதுவெதுப்பான நீரில் சிறிதளவு உப்பு மற்றும் மஞ்சள் தூள் கலந்து கழுவிய பிறகே பயன்படுத்த வேண்டும்.
காய்ச்சிய குடிநீர்: நீரினால் பரவும் நோய்களைத் தவிர்க்கக் குடிநீரை நன்கு கொதிக்க வைத்து, ஆறவைத்து அருந்த வேண்டும்.
சுடச்சுட சமைத்த உணவு: சமைத்த உணவை நீண்ட நேரம் வைத்திருக்காமல், உடனுக்குடன் சுடச்சுட இருக்கும்போதே உண்பது கிருமித் தொற்றைத் தடுக்க உதவும்.
தவிர்க்க வேண்டிய உணவுகளும் பழக்கங்களும்:
திறந்தவெளியில் விற்கப்படும் உணவுகளில் ஈக்கள் மொய்ப்பதாலும், மாசடைந்த நீரைப் பயன்படுத்துவதாலும் நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் அதிகம். ஆகவே தெருவோரக் கடைகளில் விக்கப்படும் உணவுகளைத் தவிர்ப்பது நல்லது.
பச்சைக் காய்கறிகள் (Raw Salads): மழைக்காலத்தில் பச்சைக் காய்கறிகளில் நுண்கிருமிகள் இருக்க வாய்ப்புள்ளதால், அவற்றை நன்றாக வேகவைத்து மட்டுமே உண்ண வேண்டும்.
அதிக எண்ணெய் மற்றும் கார உணவுகள்: எண்ணெயில் பொரித்த உணவுகள் நாவிற்குச் சுவையாக இருந்தாலும், மந்தமான செரிமான மண்டலத்திற்குக் கூடுதல் சுமையை ஏற்படுத்தும்.
குளிர்ந்த உணவுகள்: குளிர்சாதனப் பெட்டியில் வைக்கப்பட்ட உணவுகள், ஐஸ்கிரீம் மற்றும் குளிர்ந்த பானங்களைத் தவிர்ப்பது நல்லது.
சரியான உணவுக் கட்டுப்பாடு, சுத்தமான குடிநீர் மற்றும் உடலுக்குச் சூடளிக்கும் பாரம்பரிய உணவுகளைப் பின்பற்றுவதன் மூலம் நோய்களைத் தவிர்த்து, மழைக்காலத்தை ஆரோக்கியமாகக் கொண்டாடி மகிழலாம்!
– யாழினி சோமு
