சென்னை மட்டுமல்ல, தமிழ்நாடு முழுவதிலும் மழைக்கால பாதிப்புகள் தொடங்கி விட்டன.
வடகிழக்குப் பருவமழை துவங்கிவிட்டதாக வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்ததில் இருந்தே, வெவ்வேறு காற்றழுத்தத் தாழ்வு மண்டலங்களும் புயல் அறிவிப்புகளும் தொடர்ந்து வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
இத்தகைய அறிவிப்புகளை மக்களுக்கான எச்சரிக்கைகளாக மட்டும் அறிவிப்பதை விடுத்து அவற்றை பீதி கலந்த ஒன்றாக மாற்றிக் கொண்டிருக்கின்றன இங்குள்ள காட்சி மற்றும் சமூக வலைதள ஊடகங்கள்.
வானிலை ஆய்வு மைய அறிவிப்பின்படியே 2027-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை இதைவிட கடுமையான விதத்தில் புயல், பெருமழை, நிலச்சரிவு கடலோரங்களில் கடலின் பெரும் சீற்றம் போற்றவற்றை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று எச்சரிக்கப்பட்டாலும் அதற்கு முன்னோடியாக சில நிகழ்வுகளை இப்போதே நாம் சந்தித்துக் கொண்டிருக்கிறோம்.
ஒரேநாளில் பெய்கிற மழையின் செண்டிமீட்டர் அளவு அண்மையில் கூட 11 செண்டிமீட்டர் அளவுக்கு உயர்ந்திருக்கிறது.
அதனால் சென்னையின் பல பகுதிகளில் நீர் பெருகி வாகனங்கள் மிகவும் தடுமாறிச் செல்லக் கூடிய அளவுக்கு சூழ்நிலை உருவானது. நகரின் பல பகுதிகளில் மின்வெட்டைச் சந்திக்க வேண்டியுள்ளது.
இதனால் ஓட்டல்கள் சிறு கடைகளை வைத்திருக்கும் வியாபாரிகள் என பலரும் பாதிக்கப்பட்டார்கள்.
அதேசமயம் தற்போது தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் தவெக அரசும் தன்னால் முடிந்த அளவுக்கு மீட்புப் பணிகளை முன்னெடுத்திருக்கிறது.
வெள்ளம் பாதிக்கும் பகுதிகளாகச் சொல்லப்படும் பகுதிகளில் முன்னேற்பாடாக படகுகளும் டிராக்டர்களும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இனியும் இத்தகைய பெரு மழைக்கான சாத்தியக் கூறுகள் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் நேரத்தில் – எத்தகைய பேரிடரும் வரும்பட்சத்தில் அவற்றை எப்படி நாம் எதிர்கொண்டாக வேண்டும் என்பதை கவனிக்கிற விதத்தில் தவெக அரசும் முதலில் ஒரு காரியத்தைச் செய்ய வேண்டும்.
சென்ற திமுக ஆட்சியில் இதேவிதமான பேரிடர் பாதிப்புகள் நிகழ்ந்தபோது அவற்றை ஆய்வுக்கு உட்படுத்தி அடுத்து என்ன செய்யலாம் என்பதை நெறிப்படுத்தும் விதத்தில் ஓர் ஆய்வறிக்கையை தேசிய பேரிடர் மேலாண்மை அனுபவத்தில் தேர்ந்தவரான திருப்புகழ் அவர்களின் தலைமையில் ஒரு குழு உருவாக்கப்பட்டு, அந்தக் குழு ஆய்வறிக்கையையும் சமர்ப்பித்தது.
ஆனால், அந்த ஆய்வறிக்கை இதுவரை திமுக அரசால் வெளியிடப்படவில்லை. மீண்டும் பேரிடர் நெருக்கடிகள் நெருங்கி வரும் இந்த நேரத்திலாவது அந்த ஆய்வறிக்கையை வெளிப்படையாக மக்களுக்கு முன்னால் தவெக அரசு முன்வைக்குமா?
அப்படி முன்வைத்து அதற்குரிய நடவடிக்கையை மேற்கொண்டால், பல பேரிடர் நெருக்கடிகளை நாம் சந்திக்க நேர்ந்தாலும் அதை பொறுப்புடன் எவ்வாறு எதிர்கொள்வது என்கிற நடைமுறையை நாமும் அரசும் கற்றுக்கொள்ள முடியும்.
பேரிடர் விஷயத்தில் ஒளிவுமறைவற்ற வெளிப்படைத்தன்மைதான் இப்போதைய தேவை.
– லியோ
#வடகிழக்குப்பருவமழை #வானிலைஆய்வுமையம் #காற்றழுத்தத்தாழ்வு #புயல் #பெருமழை #நிலச்சரிவு #கடல்சீற்றம் #பேரிடர்மேலாண்மை #பேரிடர்நெருக்கடி #NortheastMonsoon #MeteorologicalDepartment #LowPressure #Cyclone #HeavyRainfall #Landslide #RoughSea #DisasterManagement #DisasterCrisis #WeatherForecast #ExtremeWeather #Flood #FloodWarning #NaturalDisaster #TamilNaduWeather
