நினைவை விட்டு அகலாத அந்தச் சிறுமிகள்!

கொஞ்சம் சூடு, கொஞ்சம் கனிவு – 12

எப்ஸ்டீன் ஃபைல்ஸ் என்கிற சொற்றொடர் சர்வதேச அளவில் அண்மையில் கவனிக்கப்பட்டு பல்வேறு சர்ச்சைகளுக்கு வித்திட்டிருப்பது நமக்குத் தெரிந்த விஷயம்தான்.

அதில் இளம் சிறுமிகள், சிறுவர்கள் கொடுமையான பாலியல் சித்ரவதைகளுக்கு உட்பட்ட நிலையில், அதை ரகசியமாகக் கொண்டாடியவர்களாக பல சர்வதேசத் தலைவர்களின் பெயர்கள் அடிபட்டு, அவையும் விவாதப்பொருளாக மாறியிருக்கின்றன.

ஒருவரின் அனுமதி பெறாமல் அவரைத் தொடுவது என்பது எத்தகைய அத்துமீறல் என்பது, போக்சோ சட்டத்தைப் பற்றி தெரியாதவர்கள் கூட உணர முடியும்.

வளரக்கூடிய சின்னஞ்சிறுசுகளைத் தங்களுடைய சுய வக்கிரத்திற்கு இறையாக்குவது எவ்வளவு கனத்தக் கொடுமை?

இதே அனுபவத்தை, அதிலும் தமிழகத்தில், பல ஆண்டுகளுக்கு முன்பு நேரடியாகப் பார்த்து உணர்ந்து ‘அசைடு’ (Aside) ஆங்கில பத்திரிகையில் எழுதிய அனுபவத்தைத் தற்போது காலம் கருதி உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.

கோவில்களுக்கு பெயர்போன நகரமான மதுரையில்தான் அந்தக் கொடூரத்தை நான் சந்திக்க நேர்ந்தது.

எனக்கு நன்கு தெரிந்த சமூக சேவகரான ஒரு நண்பர், தெருவில் அனாதரவாகத் திரியும் குழந்தைகளுக்காக ஒரு காப்பகத்தை நடத்தி வந்தார்.

உறவினர்களால் புறக்கணிப்பிற்கு ஆளாக்கப்பட்டு சிறு வயதிலேயே மனம் வெறுத்துப் போய், வீட்டைவிட்டு வெளியேறிய சிறுவர்களுக்குத் தனிக் காப்பகமும், இளம் சிறுமிகளுக்கு தனிக் காப்பகமும் அவர் நடத்தி வந்தார்.

அப்படி இளம் சிறுமிகளுக்காக அவர் நடத்தி வந்த காப்பகம் ஒரு மாடிப் பகுதியில் இருந்தது.

ஒரு பெரிய ஹால். அதையொட்டி இரண்டு அறைகள், ஒரு சமையலறை என்றிருந்த அந்த மாடியில், பதினைந்திற்கும் மேற்பட்ட பெற்றோரால் கைவிடப்பட்ட அல்லது புறக்கணிக்கப்பட்ட இளம் சிறுமிகள் தங்கியிருந்தார்கள். 

அதில்,  நான்கு பெண் குழந்தைகளை மட்டும் தனித்து அருகிலிருந்த ஒரு அறைக்கு அழைத்து வரச்சொல்லி அவர்களை எதிரிலிருந்த மர பெஞ்சில் உட்கார வைத்தார். எதிரில் நானும் எனது நண்பரும் நாற்காலியில் அமர்ந்திருந்தோம்.

மிகவும் எளிமையாகத் தெரிந்த அந்த சிறுமிகளின் தலைமுடி சரியாகப் பராமரிக்கப்படாமல் பரட்டையாகத் தெரிந்தது.

எட்டு வயதிலிருந்து 10, 12 வயதிற்குட்பட்ட அந்த சிறுமிகள் உடுத்தியிருந்த ஆடையும், மிக எளிமையாக இருந்தது.

அதேசமயம் நண்பர் அவர்களை என்னிடம் அறிமுகப்படுத்தியதும், அந்த நான்கு பேருமே சிரித்த சிரிப்பில் மட்டும் குழந்தைத் தனம் தெரிந்தது.

“சார், நான் சொல்றது உங்களுக்கு ‘ஷாக்’ ஆக இருக்கலாம். பார்த்தால், சின்னஞ்சிறு சிறுமிகளாக இருக்கிற இவர்கள், இந்த வயதிலேயே பல்வேறு பாலியல் பலாத்காரங்களுக்கு உட்பட்டிருக்கிறார்கள் என்று சொன்னால் எப்படி இருக்கும்?

ஆனால், அப்படித்தான் இவர்கள் நடத்தப்பட்டிருக்காங்க. அதிலும் வெளிநாட்டிலிருந்து வரும், டூரிஸ்ட்கள் இவங்கள மாதிரி சிறுமிகளை ஓட்டல்களுக்கு வரவழைத்து அவர்களோடு சில நாட்கள் தங்க வைத்து, பாடாய் படுத்தி, கையில் கொஞ்சம் பணம் கொடுத்து அனுப்பியிருக்கிறார்கள்.

இதற்குமேல் நான் என்ன சொல்வது? அவர்களிடம் நீங்களே கேளுங்கள்” என்று சொல்லிவிட்டு, முதலில் ஒரு சிறுமியின் பெயரைச் சொல்லி, அவரது வயதையும் குறிப்பிட்டு என்னிடம் பேசச் சொன்னார் நண்பர்.

12 வயதான அந்தச் சிறுமி, முதலில் பேசுவதற்கு மிகவும் தயங்கினார்.

“என்ன சார் சொல்றது” என்று நண்பரிடம் கேட்டபோது,

“உனக்கு நடந்ததைச் சொல்லுமா..” என்றார் நண்பர்.

அதன்பிறகு என் முகம் பார்த்து பேச ஆரம்பித்தார் அந்தச் சிறுமி.

அந்தச் சிறுமியின் குரல் மிகவும் வித்தியாசமாக இடையிடையே கீச்சுத் தன்மையுடன் இருந்தது.

“நான் வீட்டைவிட்டு வெளியே வந்தப்ப பத்து வயசிருக்கும். வெளிய வந்து தெரு ஓரத்திலேயே பெரும்பாலும் படுத்திருக்கே. சில டீக்கடைகளில் வேலையும் செஞ்சிருக்கே. அப்பதான் எனக்கு ஒரு ரிக்ஷாக்காரர் பழக்கமானார்.

“என்ன சம்பாதிக்கிற” என்று கேட்டவர், “என் கூட வா, நா ஒரு இடத்துக்குக் கூட்டிட்டுப் போறேன். அங்க நீ நல்லபடியா நடந்துக்கிட்டா உனக்கு நிறைய பணம் கிடைக்கும், நல்ல டிரஸ்ஸம் நீ வாங்கலாம்” என்று என்னை அழைச்சிட்டுப்போனது ஒரு பெரிய ஓட்டலுக்கு.

ரொம்ப பெரிசா இருந்த அந்த ஓட்டல்ல முதல்ல நா போறப்ப, எனக்கு கூச்சமா இருந்துச்சு. உடம்பே கூசுச்சு. ஓட்டல்ல முன்னாடி இருந்த ஒருத்தர்ட்ட பேசினதும், அவர் என்னை 2-வது மாடியிலிருந்து ஒரு ரூமுக்கு அழைச்சிட்டுப் போனார்.

ரூமுக்கு நுழையுற அப்பவே, “பாத்து நடந்துக்குமா, அவுங்க எல்லாம் பெரிய இடம்” என்று சொல்லி உள்ளே குளுரா இருந்த அந்த ரூமுக்குள்ள நான் போனதும், ஒரு வெளிநாட்டுக்காரர் வந்து என்னைப் பார்த்து சிரித்தார்.

நான் போட்டிருந்த டிரஸ்ஸ லேசா தொட்டுப் பார்த்தார்.

பிறகு என்னை அழைச்சிட்டு வந்தவர அனுப்பிச்சிட்டார்.

பிறகு, நானும் அந்த வெளிநாட்டுக்காரரும் மட்டும்தான் இருந்தோம். அந்த ரூமிலிருந்து நல்ல சிவப்பா இருந்த அவர், நல்ல உயரமாவும் கொஞ்சம் குண்டாகவும் இருந்தார்.

என் தலையைத் தொட்டு அங்க இருந்த பாத்ரூமுக்கு அனுப்பினார். உள்ளேயே வந்த அவர், வித்தியாசமா இருந்த ஒரு சோப்பைப் போட்டு நல்லா குளிச்சிட்டு வான்னு சொல்லி துவட்ட துண்டும் கொடுத்துட்டுப் போனார்.

அவர் சொன்னபடியே, நான் குளிச்சிட்டு வெளியே வந்தேன். வந்தவுடனே, என்னைப் பார்த்து, நல்லா இருப்பதாக இங்கிலீஷ்ல அவர் சொன்னார்ங்கிறத மட்டும் என்னால புரிஞ்சுக்க முடிஞ்சது.

அதுக்குமேல என்னாலப் புரிஞ்சுக்க முடியல.

நல்லா இருந்த மெத்தை மேல என்னை உட்காரச் சொன்னபோது, நான் மறுத்தேன். தோளைத் தொட்டு உட்காரச் சொன்னார்.

ஒரு பாட்டிலிலிருந்து ஒரு கிளாசில், சுக்குக் காப்பி நிறத்தில் இருந்த ஒன்றை குடிக்கக் கொடுத்தார். அப்பயும் நா வேணானு மறுத்தேன்.

வம்படியா என்னை குடிக்க வைச்சார். குடிச்சேன். அவ்வளவுதான் நான் மயங்கிப் போயிட்டேன்” என்று சொல்லிவிட்டு, மெல்லிய கீச்சுக் குரலில், அந்தச் சிறுமி கொஞ்சம் அழுதார்.

அதற்குமேல் அவரால் பேச முடியவில்லை.

“என்ன சொல்றதுனே தெரியல, நான் கண்ணு முழிச்சப்ப என் மேல ஒரு கனமான பெட்ஷீட் போர்த்தப்பட்டிருந்துச்சு. என் உடம்புல துணியே இல்ல.

எந்திரிச்சு நா கத்துனப்ப, அந்த வெளிநாட்டுக்காரர் வந்து வாயைப் பொத்திட்டாரு.

எதுவும் பேசக் கூடாதுங்குற மாதிரி இங்கிலீஷில் பேசி கண்ணை உருட்டி எச்சரிச்சார்.

எனக்கு பசிச்சுச்சு, கொஞ்சம் தூரத்துல வைக்கப்பட்டிருந்த அசைவ உணவை எடுத்துட்டு வந்தார். எனக்கு முன்னாடி நீட்டி சாப்பிடச் சொன்னார். வேற வழியில்ல, சாப்பிட்டேன்.

அதுக்குள்ள எனக்கு போட்டுக்கிற வேற கவுன் மாதிரியான டிரஸ்ஸ கொடுத்தார். அவருக்கு முன்னாடியே போட்டுக்கிட்டேன்.

பிறகு, மறுபடியும் ஏற்கனவே எனக்குக் கொடுத்த அதே கிளாஸில் ஒன்றை குடிக்கக் கொடுத்தார்.

மறுபடியும் வற்புறுத்திக் குடிக்க வைச்சு, இப்படியே மூன்று நாட்கள் அதே அறையில், அவர் கூட இருந்தேன்.

கடைசியில், ஒரு நூறு ரூபா நோட்டா அஞ்சு நோட்ட என்கிட்ட கொடுத்து, என்னை வெளிய போகச்சொன்னப்ப எனக்கு காலில் போட ஒரு செருப்பு வாங்கி வைச்சிருந்தார்.

அதைப் போட்டுக்கிட்டு வெளிய வந்த நான், யார்ட்டயும் போய் எதுவும் பேசல. ஒரு வாரத்திற்குப் பிறகு மறுபடியும் அதே ஓட்டல், அதே மாதிரி இன்னொரு வெளிநாட்டுக்காரர். உடம்பு பூராம் அவ்வளவு வலி.

ஏதோ மிருகத்தைப்போல என் உடம்ப யூஸ் பண்ணிக்கிட்டாங்ககிறத நெனச்சா, இப்பக்கூட ஏ மேலேயே எனக்கு கோவமா இருக்கு.

ஏண்டா வீட்டைவிட்டு வந்தோம்ங்கிறது அடிக்கடித் தோணுது, அப்பறந்தா இந்த ஹோம பத்தித் தெரிஞ்சு இங்கே வந்திருக்கே” என்று சொல்லிவிட்டு அந்தப்பெண் முகம் துடைத்தார்.

அப்போது, அந்த இளம் முகத்தைப் பார்ப்பதற்கு சிரமமாக இருந்தது. கசங்கிய முகத்துடன் பேசிய அந்தச் சிறுமிக்கு பிரெஞ்ச், ஜெர்மன் மொழிகளில் சில வார்த்தைகள் தெரிந்திருந்தன.

இதைத் தொடர்ந்து, அடுத்தடுத்து மற்ற சிறுமிகளை பேசச் சொன்னபோது, அவர்களுக்கும் இதே மாதிரியான கனக்க வைக்கும் அனுபவங்கள்.

அதிலும், எட்டே வயதான வளர்ந்தக் குழந்தையைப் போல் இருந்த முகத்தில் குழந்தைத்தனம் மிஞ்சியிருந்த அந்தச் சிறுமியைப் பார்க்கவே மிகவும் பரிதாபமாக இருந்தது.

வீட்டைவிட்டு வெளியே வந்த அந்தச் சிறுமி எட்டு வயதிலேயே, அடுத்தடுத்து மூன்று வெளிநாட்டுக்காரர்களுடன் தங்கிய அனுபவத்தை இடையிடையே மௌனமான இடைவெளியுடன் சொன்னபோது, மனதில் பரவிய படபடப்பைக் குறைக்க முடியவில்லை.

அந்த சின்னசிறு வயதிலேயே பால்வினை நோய்க்கு இரையாகி இருந்தார் அந்தச் சிறுமி. யார் மூலமாகவோ தொற்றுதலுக்கு ஆளாகி அந்தச் சிறுமி மிகவும் சிரமப்படுவதாகச் சொன்னார் உடனிருந்த நண்பர்.

எட்டு வயதிலேயே பல மனிதர்களின் வக்கிரத்தை எதிர்கொண்டு, பால்வினை நோயையும் எதிர்கொண்ட நிலையில், அந்த இளம் சிறுமி தன்னைச் சுற்றியுள்ள மனிதர்களைப் பற்றி எப்படி ஓர் ஆரோக்கியமான மனநிலையைப் பெற முடியும்?

அதிலும், குறிப்பாக அதே மாதிரி பலாத்காரத்திற்கு ஆளான சிறுமி, தன்னுடைய தோள் பட்டையில் துவங்கி, சிலரால் ஏற்பட்ட காயங்களைக் காண்பித்து, மிக மெலிதாக அழுதபோது, அந்தக் கணம் மிகவும் கொடுமையாகத் தோன்றியது.

சுமார், 2 மணி நேரங்களுக்கும் மேலாக அந்தச் சிறுமிகளுடன் பேசி முடித்தபோது, எதையுமே பேச முடியாத அளவுக்கு கனத்த மௌனம் அந்த அறை முழுக்க வியாபித்திருந்தது.

நான் கொண்டு போயிருந்த பிஸ்கட் பாக்கெட்டுகளை மிகவும் வற்புறுத்திய பிறகே அவர்கள் தயக்கத்துடன் பெற்றுக்கொண்டார்கள்.

அவர்களிடமிருந்து, விடைபெறுவதற்குமுன் அந்த நான்கு சிறுமிகளில் ஒரு சிறுமி எனக்கருகில் வந்தார்.

“எங்க கஷ்டங்கள பூராம் கேட்டீங்க, எங்கக் கஷ்டத்தச் சொன்னபோது, நீங்களும் தாங்க முடியாம அழுதீங்க, ரொம்பவும் அன்பா பேசுனீங்க, இப்படி ஒரு அன்பு, எங்க வீட்ல கிடைச்சிருந்தா, நாங்க தெருவுக்கு வந்து இப்படியெல்லாம் இருந்திருப்போமா? சொல்லுங்கங்க” என்று அந்தச் சிறுமி சொன்னதோடு, அடுத்துப் பண்ணிய ஒரு சிறு செயல் மனதை மிகவும் நெகிழ்த்தியது.

என்னுடைய கையைப் பிடித்து கையின் மேற்பகுதியில், குனிந்து உதட்டைப் பதித்தபோது, அந்த இளம் சிறுமியின் முத்தம் சுடு வெயிலைப்போல் சுட்டது.

அந்த இளம் சூட்டின் அழுத்தம் இத்தனை ஆண்டுகள் கழிந்தும் நினைவில் ஒரு வடுவைப் போல பதிந்திருக்கிறது.

– மணா

 
You might also like