ஓபிஎஸ், சசிகலா முடிவுக்கு யார் காரணம்?

என்னதான் நீண்ட நாட்களாக அரசியல் அனுபவப் பின்னணி இருந்தாலும், தேர்தல் நெருங்கும் சமயத்தில் ஓபிஎஸ் அடுத்து என்ன முடிவெடுக்கப் போகிறார் என்கின்ற கேள்வி பொதுவெளியில் இருந்தது உண்மை.
 
தமிழ்நாட்டின் முதலமைச்சராக மூன்று முறை பொறுப்பேற்ற அனுபவமும், அதிமுக என்கின்ற இயக்கத்தின் பல்வேறு உயர்நிலைப் பொறுப்புகளிலும் அங்கம் வகித்த பின்னணி இருந்தாலும், சமீப காலங்களில் அவரது அரசியல் நிலைப்பாடு என்பது கேள்விக்குறியாகவே இருந்தது.
 
திரும்பத் திரும்ப அதிமுகவில் எந்த நிபந்தனையுமற்று தன்னை இணைத்துக் கொள்ள அவர் தொடர்ந்து முயற்சி செய்துவந்தார்.
 
அவரை இணைப்பதற்கான முயற்சிகளையும் அதிமுகவிலேயே சிலர் முன்னெடுத்தபோதும், அதிமுகவின் தற்போதைய பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமி அவரை இணைத்துக் கொள்வதைத் திட்டவட்டமாக மறுத்து வந்தார்.
 
ஓபிஎஸ்ஸின் ஆதரவாளர்களான மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் உள்ளிட்ட பலர் அடுத்தடுத்து திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டார்கள்.
 
இந்த நிலையில், என்ன முடிவெடுப்பது என்பது குறித்த தர்மசங்கடம் ஓபிஎஸ்ஸிடம்  இருந்ததை அவருடைய வெவ்வேறு பேச்சுக்கள் வெளிப்படுத்தின.
 
இறுதியில், “தன்னை எதாவது மடத்தில் சேர்ந்து கொள்ள சொல்கிறீர்களா?“ என்னும் அளவுக்கு பேச்சில் தன்னுடைய விரக்தியை வெளிப்படுத்திய ஓபிஎஸ், தற்போது திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார்.
 
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அண்ணா அறிவாலயத்தில் சந்தித்தபோது, பூங்கொத்துடன் அவர் வரவேற்கப்பட்டார். பொன்னோடை போர்த்தப்பட்டார்.
 
அந்தச் சந்திப்பின்போது அவரைச் சுற்றிலும் மலர்ந்த முகங்கள் வரவேற்க அவர் மறுபடியும் உரிய மதிப்பைப் பெற்றதாக உணர்ந்த அவர், செய்தியாளர்களிடம் பேசுகையில்,
 
“மிகவும் மனமகிழ்ச்சியோடு இருக்கிறேன். தளபதி அவர்களின் ஆட்சியை மிகவும் மதித்த நிலையில் நான் திமுகவில் என்னை இணைத்துக் கொண்டிருக்கிறேன். யாருடைய அழுத்தம் காரணமாகவும் நான் இந்த முடிவை எடுக்கவில்லை” என்று தெரிவித்தார்.
 
அதே சமயம், எடப்பாடி பழனிசாமியை ஒரு சர்வாதிகாரி என்று விமர்சித்த அவர், “ஈபிஎஸ் தனது பிடிவாதத்தினால் அதிமுகவை அழித்துக் கொண்டிருக்கிறார்” என்கின்ற குற்றச்சாட்டையும் முன்வைத்தார்.
 
ஓபிஎஸ்ஸின் இந்த இணைப்பு தமிழகத்தின் ஊடகங்களில் பெரும் பேசுபொருளாக மாறியிருக்கிறது.
 
ஒரு கட்டத்தில், சென்னை கடற்கரையில் தர்மயுத்தம் என்கிற பெயரில், தன்னுடைய எதிர்ப்புக் குரலை வெளிப்படுத்தியவர், தற்போது திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டிருப்பது பலருக்கு வியப்பை அளித்திருக்கலாம்.
 
பல்வேறு கேள்விகளையும் எழுப்பி இருக்கலாம். ஆனால், இத்தகைய இணைப்பிற்கு மூல காரணமாக இருந்திருப்பவர் யார்?
 
இதற்கிடையே, சென்ற வாரத்தில் அதிமுகவின் முக்கிய அங்கமாகவும் முன்னாள் முதல்வரான ஜெயலலிதாவின் உடன்பிறவா சகோதரியாகவும் சொல்லப்பட்ட சசிகலா, கமுதி சென்று ஜெயலலிதாவின் பிறந்தநாளின் போது புதிய கட்சியை ஆரம்பிப்பதாகத் தெரிவித்து அதற்கான கொடியையும் அறிமுகப்படுத்தினார்.
 
அத்துடன் எடப்பாடி பழனிசாமியை பேர் குறிப்பிடாமல் சொன்னவர், “தான் அவரை முதலமைச்சர் பதவியில் அமர்த்திவிட்டு பெங்களூர் சிறைக்குச் சென்ற பிறகு, அவர் தமக்கு என்னென்ன விதமான தொந்தரவுகளெல்லாம் கொடுத்தார் என்பதை அவர் பொதுமக்களிடையே விளக்கிச் சொன்னபோது, எதிரேயிருந்த மக்களிடம் அந்தப் பேச்சு ஏற்படுத்திய உணர்வு நிலையை உணரமுடிந்தது.
 
அந்தக் கூட்டத்திலும் அவர், தன்னை 5 ஆண்டுகளுக்கு மேல் தான் வளர்த்த அதிமுகவிலிருந்து தன்னை ஒரு காகிதத்தைப் போல எப்படித் தூக்கி எறிந்தார்கள் என்பதை அவர் விளக்கியபோது, அந்தப் பேச்சு அதிமுக தொண்டர்கள் மத்தியில் எத்தகைய அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கும் என்பதை விளக்க வேண்டியதில்லை.
 
எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் பொறுப்பிற்கு அமர வைத்த சசிகலா, புதிய கட்சியைத் துவக்குவேன் என்று அறிவித்ததற்கு யார் காரணம்?
 
தான் பொதுச்செயலாளராக ஆன பிறகு, கட்சியில் யாரையெல்லாம் தனக்கு போட்டியாளர்களாகவோ, எதிரானவர்களாகவோ கருதினாரோ அவர்களெல்லாம் அடுத்தடுத்து அதிமுகவை விட்டு நீக்கினார். 
 
சசிகலா தொடங்கி ஓபிஎஸ், செங்கோட்டையன் வரை தனக்கு எதிரானவர்களாகக் கருதிய பல முக்கியப் புள்ளிகளை அடுத்தடுத்துக் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்கள்.
 
அதோடு, பொதுக்குழுவின் ஆதரவோடு அவர்களை நீக்கியதாகவும் அடிக்கடி வெளிப்படுத்தியிருக்கிறார்.
 
இந்த நீக்கங்கள், மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போன்றவர்களால் வளர்க்கப்பட்ட அதிமுக எனும் பேரியக்கத்திலிருந்து ஒவ்வொரு செங்கலாகச் சரிப்பதைப் போன்ற உணர்வைத் தொண்டர்களிடையே ஏற்படுத்தியது.
 
இந்தவிதமான நீக்கமும் அவர்களை நீக்குவதில் எடப்பாடி பழனிசாமி காட்டிய அந்த மன இறுக்கமும் பிடிவாதமும் தொண்டர்களால் ரசிக்கப்படவில்லை.
 
இதன் விளைவாக, ஒரு காலத்தில் தனித்து நின்று பெரும் வெற்றிகளைப் பெற்ற அதிமுக இயக்கம் தற்போது தொடர் தோல்விகளைச் சந்தித்து வருகிறது.
 
இவ்வளவு தூரத்திற்கு அதிமுக தன் அசலான பலத்தை இழந்த நிலையிலும் அதிமுக தொண்டர்கள் அமைதியுடனும் ஒருவிதமான மன தத்தளிப்புடனும் நடந்தவற்றையெல்லாம் பார்வையாளர்களாக கவனித்துக் கொண்டிருந்தார்கள்.
 
இந்த சமயத்தில் மிக முக்கியமான ஒன்றைச் சொல்ல வேண்டும்.
 
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோது, சில தலைவர்கள் ஏதோவொரு அதிருப்தியுற்று வெளியேறியபோது,
 
குறிப்பாக எஸ்.டி.சோமசுந்தரம் போன்றவர்களின் வெளியேறியபோது அவர்களுடைய  வீட்டுக்கே சென்று அவர்களை அரவணைத்து மீண்டும் கட்சியில் சேர்த்துக் கொண்டவர் எம்.ஜி.ஆர்.
 
இப்படி பல விதமான எதிர்ப்புக் குரலை வெளிப்படுத்திய தன்னை விமர்சித்த மதுரை முத்து போன்றவர்களை கட்சியில் இணைத்து மிக முக்கியப் பொறுப்புகளை வழங்கியிருக்கிறார்.
 
பொதுவெளியில் தொடர்ந்து அவரை விமர்சித்து வந்த கவிஞர் கண்ணதாசன் போன்றவர்களுக்கும் அரசவையில் உரிய பொறுப்புகளை வழங்கினார்.
 
அந்தவிதமான இணக்கமான, யாரையும் அரவணைத்துச் செல்கின்ற பரந்த மனப்பான்மை அவருக்கு இருந்ததுதான் அதிமுக என்கிற இயக்கம் பேரியக்கமாக பலம்பெற மூலக்காரணமாக இருந்தது.  
 
இதேவிதமான அணுகுமுறை எம்.ஜி.ஆருக்குப் பிறகு அதிமுகவின் பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதாவுக்கும் இருந்தது.
 
அவரை எதிர்த்த மூத்தத் தலைவர்களான நெடுஞ்செழியன் துவங்கி காளிமுத்து, பி.எச்.பாண்டியன் என்று பலரை அரவணைத்துக் கட்சியில் இணைத்து அவர்களுக்கு முக்கியப் பொறுப்புகளை வழங்கினார்.
 
அதைப் போலவே ஒரு காலத்தில் தன்னை தீவிரமாக எதிர்த்த மூத்த அமைச்சரான ஆர்.எம்.வீரப்பனைக் கூட தன்னுடைய அமைச்சரவையில் சேர்த்துக் கொள்ளும் அளவுக்கு அவர் நடந்துகொண்டதால்தான் அதிமுக என்கிற பேரியக்கம் தொடர்ந்து வளர்ந்து அடுத்தடுத்து ஆட்சிப் பொறுப்பில் அமரவும் முடிந்தது.
 
ஆனால், இன்று அத்தகைய இணக்கமான மனப்பான்மையும் பலரையும் அரவணைத்துச் செல்லும் ஆளுமைமிக்கப் பண்பும் எடப்பாடி பழனிசாமியிடம் இருக்கிறதா?
 
வெறுமனே கட்சியைத் தன் வசப்படுத்த வேண்டும் என்கின்ற நோக்கம் மட்டுமே அவர் காட்டும் இறுக்கத்தில் வெளிப்படுகிறது. இது அதிமுகவின் பலத்தை வீழ்ச்சியடையச் செய்துள்ளது.
 
அவருக்குப் பின்னிருக்கிற தொண்டர்களின் மனநிலையை அவர் எந்தளவுக்கு புரிந்து கொண்டிருக்கிறார் என்பதே கேள்விக்குறியாகி இருக்கிறது.
 
இந்த நிலையில் அதிமுக – பாஜக கூட்டணியில் பலர் வர எத்தனித்தபோதும் சிலரை வரவிடாமல் தடுத்தத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு முக்கிய பங்கிருக்கிறது.
 
பாஜக தலைமையும் சிலரை சேர்ப்பதில் விருப்பம் காட்டியபோதும் அத்தகைய விருப்பத்தைக் காட்டாதாகவே எடப்பாடி பழனிசாமி இருந்தார்.
 
ஆக ஏதோவொரு தலைவரின் தனிப்பட்ட முறையிலான விருப்பு, வெறுப்பு என்று சொல்லிவிட முடியாது. அவர், பொன்விழா கண்ட அதிமுக என்கிற பேரியக்கத்தின் பொதுச் செயலாளர் பொறுப்பில் தற்போது இருந்து கொண்டிருக்கிறார் என்பதையும்
 
அவரை நம்பி ஏராளமான தொண்டர்கள் இருக்கிறார் என்பதையும் அவர் உணராததாலும், தொண்டர்களின் மனநிலையைச் அவர் சரிவர உணரவில்லை என்பதாலும்தான்
 
செங்கோட்டையன், ஜே.சி.டி பிரபாகரன் சரி தற்போது ஓபிஎஸ், சசிகலா மற்றும் பண்ருட்டி ராமச்சந்திரன் போன்றவர்களின் வெளியேற்றத்திற்கு மூல காரணமாக அமைந்திருப்பது எடப்பாடி பழனிசாமி என்கின்ற தலைமைப் பொறுப்பில் தற்போது இருக்கிறவர் காட்டிய மன இறுக்கம் தான்.
 
தன்னுடைய மன இறுக்கம் அதிமுக என்கிற பேரியக்கத்தை எந்தளவுக்கு பலவீனப்படுத்திக் கொண்டிருக்கிறது என்பதை இனிமேலாவது எடப்பாடி பழனிசாமி உணர்வாரா?
 
அப்படியே உணர்ந்தாலும் இந்தக் காலதாமதம் அதிமுக என்கிற பேரியக்கத்தை பலப்படுத்தும் அளவுக்கு வலிமை கொண்டதாகுமா என்பதையும் அவர் யோசிக்க வேண்டும்.
 
எந்தக் கட்சியாக இருந்தாலும் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள் தன்னுடைய சுயநலத்தை மட்டும் முன்னிலைப்படுத்தக் கூடாது.
 
தமது இயக்கத்தின் நலன், தொண்டர்களின் நலன் உள்ளிட்ட அம்சங்களையும் கருத்தில் கொண்டால் மட்டுமே அந்த இயக்கம் வேர் விடவும் கிளை பரப்பவும் முடியும்.
  •  யூகி
You might also like