கொஞ்சம் சூடு, கொஞ்சம் கனிவு – 9
“இப்படியெல்லாமா சாமியார்கள் இருப்பார்கள்?” என்று தோன்றுகிற அளவுக்கு பல தரப்பட்ட சாமியார்களைக் கடந்த 45 ஆண்டுகால ஊடக வாழ்வில் சந்தித்திருக்கிறேன். அந்த அனுபவங்களில்தான் எத்தனை விசித்திரங்கள்.
ஜெயா தொலைக்காட்சியில் அப்போது நான் இயக்கிக் கொண்டிருந்த ‘திக் திக் தொடர் மர்மங்கள்’ என்ற தொடருக்காக தென் மாவட்டத்தில் உள்ள கிராமத்துக் கோவிலுக்கு கேமரா குழுவினரோடு போயிருந்தேன்.
கிராமத்தைவிட்டுத் தள்ளி வெளியே எளிய வடிவில் இருந்தது அந்தக் கோவில். அந்த சாமியாரைப் பற்றி முன்பே கேள்விப்பட்டுத்தான் அங்கு போயிருந்தாலும் கூட, மனிதர் போனதுமே அசரடித்துவிட்டார்.
“கேமரா ஆனில் இருக்கா?” என்று பொறுப்பான கேள்வியைக் கேட்டவர், தாடி படர்ந்த முகத்தோடு எங்களைப் பார்த்து “ஆரம்பிச்சிடுவா” என்றார்.
கேமரா இயங்கத் தொடங்கியது.
காவி வேட்டி, கழுத்து நிறைய அடர்த்தியான ருத்ராட்ச மாலைகள், ஆங்காரக் குரல் என்று உக்ரமாகக் காட்சியளித்தவர் தலையை நன்றாக விரித்துப் போட்ட நிலையில், உட்கார்ந்திருந்தார்.
என்னை கைநீட்டி அழைத்து தலையைத் தொட்டுப் பார்க்கச் சொன்னார். பெரும்பாலும் கருமை நிறத்திலிருந்த முடியை அள்ளி முடிந்து தலைமேல் கொண்டை போட்ட மாதிரி போட்டுக் கொண்டார். அந்தக் கொண்டை உச்சியின் மீது சற்றே பெரிய கற்பூரக் கட்டியை வைத்தார்கள்.
“பத்தவைங்கடா” என்று அவர் கத்தியதும், தலைமேல் இருந்த கற்பூரத்தைப் பற்ற வைத்தார்கள். உடனே கொண்டையின் மேல் பகுதி திகுதிகுவென்று எரிய ஆரம்பித்தது. எதோ தீ பந்தத்தையே தலையில் ஏற்றியதைப் போலிருந்தது.
எதிரே இருந்த எங்களுக்கெல்லாம், அந்தக் காட்சி அதிர்வை ஏற்படுத்திய நிலையில், கேமராமேனைப் பார்த்து, “என்ன… நல்லா எடுக்குறீங்களா?” என்று கேட்டபோது, தலையாட்டினார் கேமரா மேன்.
கேமராமேனின் போதாத நேரமோ என்னவோ, அந்த நேரத்தில், காற்றடித்து சாமியாரின் தலையில் எரிந்து கொண்டிருந்த தீ சற்றென்று அணைந்துவிட்டது. விடவில்லை அந்த சாமியார்.
“கவலையே படாதீங்க.. மறுபடியும் தீயைப் பத்த வைச்சிரலாம்” என்று ஏதோ சுருட்டை பற்ற வைப்பது மாதிரி மறுபடியும் தலை உச்சியில் கற்பூரத்தை வைத்து திரும்பவும் நெருப்புப் பற்றி எரிந்தது.
சாவகாசமாக பிறகு அணைத்தபிறகு அவரது தலையை மறுபடியும் தொட்டுப் பார்க்கச் சொன்னார்.
சூடான இடியாப்பத்தை தொட்டுப்பார்த்த உணர்வு மேலிட்டது. அதன்பிறகு அந்த சாமியார் செய்த சாகசங்கள் தனி.
***
மேல்மருவத்தூரில் மிகவும் புகழ்பெற்ற பங்காரு அடிகளைச் சந்தித்தது வித்தியாசமான அனுபவம்.
பெரும் மக்கள் கூட்டம் கீழே சூழ்ந்திருக்க அப்பகுதியின் உள்ளே தனி மாடியறையில், இடுப்பில் வேட்டி மட்டும் அணிந்திருந்த நிலையில், அவரைச் சந்தித்து அவருக்கு முன்னால் போடப்பட்டிருந்த நாற்காலியில் நான் அமர்ந்தபோது, விசித்திரமாகப் பார்த்தார்.
”அம்மன்கிட்ட உங்க கடிதத்தைக் குறிப்பிட்டு உங்களைச் சந்திக்கலாமானு அனுமதிக் கேட்டேன். அம்மன் அனுமதி கொடுத்துட்டாங்க” என்று பக்குவமான குரலில் அவர் சொன்னபோது எதிரே அமர்ந்திருந்த நான் மிக மென்மையான குரலில் இப்படிச் சொன்னேன்.
“எனக்குக் கடவுள் நம்பிக்கை இல்லை” பத்திரிகையின் தேவைக்காகத் தான் உங்களைப் பேட்டி காண வந்திருக்கிறேன்” என்று சொன்னபிறகு, கீழே என்னை அழைத்துப்போய் கோயில் கருவறைக்குள் நிறுத்தி எனது வாயில் வேப்பிலையைத் திணித்து சுற்றிலும் சில பெண்கள் அருள் வந்து ஆடியபடி இருக்க எனக்கான சிறப்புப் பூஜைகள் நடத்தினார் சிவப்பாடை உடுத்திய வயதான அம்மாள்.
அதன்பிறகு மேலே அழைக்கப்பட்டு அவருக்கு முன்னால் அமர்த்தப்பட்டு மாலை வரை அவருடன் கழிந்த அந்த அனுபவம் ஆங்கிலப் பத்திரிகையில் வெளியானது.
***
“சர்ச்சைக்குரிய சாமியார்“ என்கிற தலைப்பில், ஒரு வார இதழில் தொடராக வெளியிடுவதற்காக அடுத்தடுத்து 3 மடாதிபதிகளைச் சந்தித்தேன்.
முதலில் மதுரை ஆதீனம். அப்போது ஆதீனமாக இருந்த அருணகிரி சுவாமிகள் ஏற்கனவே எனக்கு அறிமுகமானவர்.
அவரும் பத்திரிகைத் துறையில் பணியாற்றியவர் என்பதால், எப்போதுமே விசேஷ சிரிப்புடன் பேசுவார். எந்தக் கேள்வி கேட்டாலும், சாதுர்யமாக பதில் சொல்வார்.
அரசியல் இயக்கங்களுடன் நெருக்கமாக இருந்த அவர், ஈழப் பிரச்சனைத் தீவிரப்பட்டபோது, மதுரையில் நடந்த கூட்டம் ஒன்றில், மொட்டையடிக்கப்பட்ட தனது தலையில் அணிந்திருந்த, தங்கம் இணைந்த ருத்ராட்ச கொட்டை மாலையை ஆவேசத்துடன் கழற்றி கூட்டத்திற்கு இடையில் வீசி, பரபரப்பை ஏற்படுத்தினார்.
பல மாநாடுகளில், தலைப்புச் செய்தியாக இடம்பெறும் அளவுக்கு பரபரப்பாக பேசக்கூடியவர்.
அவரை மதுரை ஆதீன மடத்தில் இந்தத் தொடருக்காக சந்தித்தபோது, “ஏன் இப்படிப்பட்ட பரபரப்பைத் தொடர்ந்து உருவாக்கிக் கொண்டிருக்கிறீர்கள்?” என்று கேட்டேன்.
அதற்கு அவர் நிதானமாக பதில் சொன்னார்.
“எந்த ஆதீனமும் அதைச் சுற்றியுள்ள சமூகத்தைச் சார்ந்துதான் இருக்கிறது. அவர்கள் துயரப்படும்போது, போராடும் மனநிலையில் இருக்கிறபோதும், ஆதீனமாகிய நாங்கள் மட்டும் சம்பந்தமில்லாமல் தனித்து இருக்க முடியுமா?”
இப்படியே போன உரையாடல்களுக்குப் பிறகு, மதிய நேரம் வந்துவிட்டது. “சாப்பிட்டுவிட்டுதான் போக வேண்டும்” என்று பிடிவாதமாய் சொன்னவரிடம், பலமுறை மறுத்துச் சொன்னபோது விடவில்லை.
ஆதீன மரபுப்படி சட்டையைக் கழற்றிவிட்டு தன்னுடன் அமர்ந்து சாப்பிட்டே ஆக வேண்டும் என்று வற்புறுத்தல் அதிகரித்தபோது, மறுக்க முடியாமல், சட்டையைக் கழற்றியபோது, புன்னகைத்தபடி அவர் சொன்னார்,
“ஏங்க.. உடம்பை நல்லாதான வைச்சிருக்கீங்க. இந்த உடம்ப காமிக்க ஏன் கூச்சப்படுறீங்க? இதோ என் உடம்பையும் பாருங்க, கழுத்துல மாலை போட்டிருந்தாலும், எப்படி ஒல்லியா இருக்கே பாருங்க” என்று கலாட்டா செய்யாத குறையாக அவர் பேசியதெல்லாம், அவருக்கே உரித்தான தனி ரகம்.
***
அடுத்து, குன்றக்குடி மடத்திற்குச் சென்று குன்றக்குடி அடிகளாரைப் பார்த்தேன். அவரும் ஏற்கனவே பரிட்சயமானவர் என்பதால், எப்போதுமே, பாந்தமாகப் பழகுவார். பேச்சில், நட்புணர்வு மிகுந்திருக்கும்.
பெரியாரின் பெயரில் ஒரு முந்திரித் தொழிற்சாலையை நடத்தி வந்த அவரிடம், பெரியாரைப் பற்றி சில சமயங்களில் கேட்டிருக்கிறபோது, பெரியாரின் பல்வேறு வியக்கத்தக்க பண்புகளைப் பற்றி பிரியம் பொங்க விவரிப்பார்.
யாரிடமும் பகைமை பாராட்டாத உணர்வு அவருடைய பேச்சில் மேலோங்கி இருக்கும்.
இந்தத் தொடருக்காக பேசியபோது, ஒரு கேள்விக்கு இப்படி பதில் சொன்னார்,
“மனிதனுக்கு அடிப்படை உணவு அதற்கான தொழில் அல்லது வேலை, நிம்மதியா மனநிலை போதுமான அளவுக்கான பொருளாதாரம் இவையெல்லாம் இருந்தால்தான், மனிதனால் ஆன்மீகத்தைப் பற்றி நினைக்க முடியும். வழிபட முடியும்.
அதற்காகத்தான் குன்றக்குடியில் மடத்தின் சார்பில் செய்யப்பட்ட ஏற்பாடுகளால், வீட்டில் ஒருவருக்கு வேலை என்று கொடுத்திருக்கிறோம்.
குன்றக்குடி ஊராட்சித் தலைவராகவும் நான் நிற்பதால், இந்த ஊர் எல்லைக்குள் எங்கும் சாராயமோ, மலிவு விலை மதுவோ வராதபடி சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இப்படிப்பட்ட சமூகச் செயல்பாடு இல்லாமல், ஆதீனங்கள் செயல்பட முடியுமா?” என்று சிரித்தபடி பதில் கேள்வியை எழுப்பியது நினைவில் எஞ்சி இருக்கிறது.
***
அடுத்து காஞ்சி சங்கராச்சாரியரான ஜெயேந்திர சுவாமிகளை திருப்பரங்குன்றத்தில் உள்ள ஒரு மடத்தில் சந்தித்தேன்.
அங்கிருந்த மண்டபம் ஒன்றில், தரை மீது போடப்பட்ட மரப்பலகையின் மேல் அவர் அமர்ந்திருந்தார். அவருக்கு எதிரே அமரச் சொன்னார்.
அப்போது, அவருடைய சில செயல்பாடுகள் சர்ச்சையை கிளப்பியிருந்தன. மடாதிபதிகளுக்கே உரித்தான தண்டத்தை விட்டுவிட்டு, அவர் வெளியேறி சிறிது காலம் கழித்து திரும்பியிருந்தார். சமூக சேவைக்கான இயக்கம் ஒன்றையும் ஆரம்பித்திருந்தார்.
அவரை அப்போது தான் முதலில் சந்திக்கிறேன் என்பதால், என்னுடைய விசிட்டிங் கார்டை அவரிடம் கொடுத்துவிட்டு, பேச ஆரம்பித்தபோது, இன்னொரு கையில், அவர் ஒரு பேனாவை வைத்திருந்தார்.
பேட்டி ஆரம்பமானதுமே, அவரது பேச்சும் சூடாகிக் கொண்டே வந்தது.
சில கேள்விகளைக் கேட்டதுமே இந்தக் கேள்விகளை நீங்களே தயாரித்தீர்களா? அல்லது உங்களுக்காக வேறு யாராவது தயாரித்துக் கொடுத்து என்னிடம் அனுப்பி இருக்கிறார்களா? என்று கடுகடுத்தபடி அவர் கேட்டபோது, நீதிமன்றத்தில் சொல்கிற மாதிரி, “இவையெல்லாம் என் சொந்தக் சரக்குகள் தான்” என்று நான் உறுதிப்படுத்த வேண்டியிருந்தது.
நான் தண்டத்தைப் பற்றி பேசியபோது கோபப்பட்டார். பேட்டியைத் தொடர்வதற்கான மனநிலையில் அவர் இல்லாததை அவருடைய பேச்சு மொழி வெளிப்படுத்திக் கொண்டிருந்தது.
பேட்டி துவங்குவதற்கு முன்பே அருகில் இருந்தவர்களையெல்லாம் தூரத்தில் இருக்கச் சொல்லிவிட்டதால் பக்கத்தில் யாருமில்லாத கனத்த மௌனமான நிலை.
கையில் வைத்திருந்த பேனாவால், அவரிடம் கொடுக்கப்பட்ட என்னுடைய விசிட்டிங் கார்டு மீது குறுக்கும் நெடுக்குமாக கோடுகள் போட்டபடியே இருந்தார்.
அந்த கோடுகளுக்கிடையில் எனது அலுவலக தொலைபேசி எண் மட்டும் சிதைபடாமல் மிஞ்சியிருந்தது.
அவ்வளவு தூரத்திற்கு 3 மடாதிபதிகளையும் சந்தித்து முரண்பட்ட கேள்விகளை முன்வைத்து உருவான அந்தத் தொடர் ஏனோ வெளியாகவே இல்லை.
– மணா.