மனதின் குரல்:
தற்போது திமுக தமிழகத்தில் ஒரு கோடிக்கும் அதிகமான பெண்களின் வங்கிக் கணக்கில் 5000 ரூபாய் செலுத்திய தகவல், தேர்தல் நெருங்கும் வேளையில் ஒரு பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது உண்மை.
அதற்கான நிதி ஆதாரத்தையும் அவர்கள் திரட்டியிருக்கிறார்கள் என்பதும் உண்மை.
அதே சமயத்தில் தமிழகத்தில் பல்வேறு தரப்பினர், வெவ்வேறு கோரிக்கைகளோடு போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
சில எதிர்பார்ப்புகளையும், அரசிடம் சில கோரிக்கைகளையும் முன்வைத்தபோது, அரசு தரப்பில் தெரிவித்த பதில், “போதுமான நிதி ஆதாரம் இல்லை..”
இப்படிப்பட்ட நிலையில் சென்னையில் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள், கடந்த 11 நாட்களாக போராட்டம் நடத்தி வருகிறார்கள். நள்ளிரவில் கூட அவர்களுடைய போராட்டம் இருக்கிறது.
அவர்கள் என்ன கோரிக்கையை முன்னிறுத்தி இந்தப் போராட்டத்தை இவ்வளவு நாட்களாக நடத்திக் கொண்டிருக்கிறார்கள்?
தங்களுக்கென்று வேலைவாய்ப்பில் குறிப்பிட்ட இட ஒதுக்கீட்டை வலியுறுத்திய நிலையில்தான் அவர்கள், பல்வேறு தடுமாற்றங்களுக்கிடையில் இத்தகைய போராட்டத்தைத் தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
இட ஒதுக்கீட்டுக்காக குரல் கொடுத்து அதை நடைமுறைப்படுத்தியிருக்கிற திராவிடக் கட்சி ஆட்சியில் இருக்கும் நிலையில், பார்வையற்ற எளிய மக்களின் கோரிக்கைகளை பரிசீலிக்கவில்லை என்றால், வேறு எந்த அரசு பரிசீலிக்கும்?
பார்வையற்றவர்களின் குரலை சமநீதிப் பார்வை உள்ளவர்கள் கவனிக்க வேண்டாமா?
– ஆனந்த செல்வி