கோலிக்குண்டு தேர்தல் மூலம் புரட்சி செய்த நாடு!

பத்திரிகையாளர் டி.வி.சோமு

எலக்ட்ரானிக் வோட்டு மிஷின், இணையம் மூலம் வாக்குப்பதிவு என உலகம் போய்க்கொண்டு இருக்க, இன்றும் பளிங்கு கற்கள் மூலம் ஒரு நாடு தங்கள் அதிபரை தேர்ந்தெடுக்கிறது!

விரல் நாடு!

உலக வரைபடத்தில் தேடினால், ஆப்பிரிக்காவின் மேற்கு மூலையில் அட்லாண்டிக் பெருங்கடலை முத்தமிட்டபடி, செனகல் நாட்டுக்குள் ஒரு நீண்ட விரலை நுழைத்தது போல் இருக்கும் சிறிய தேசம்தான் காம்பியா.

காம்பியா’ நதி பாயும் பாதையையே தனது நிலப்பரப்பாகக் கொண்டிருப்பதால் இதற்கு இந்தப் பெயர்.

ஏறத்தாழ 480 கி.மீ நீளமும், வெறும் 25 முதல் 50 கி.மீ அகலமும் கொண்ட ஒரு விசித்திரமான வடிவம் கொண்டது.

மொத்த பரப்பளவு வெறும் 11,295 சதுர கிலோமீட்டர்தான்.

(நமது திருவண்ணாமலை மாவட்டத்தைப் போல சுமார் இரண்டு மடங்கு). மொத்த மக்கள் தொகை சுமார் 28 லட்சம்.

பல நூற்றாண்டுகள் போர்த்துகீசியர்கள் மற்றும் ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்தில் இருந்த இந்நாடு, 1965 பிப்ரவரி 18 அன்று விடுதலை பெற்றது. 1994-ல் ஒரு ராணுவப் புரட்சி மூலம் அதிகாரத்தைக் கைப்பற்றிய யாஹ்யா ஜாமே, 22 ஆண்டுகள் சர்வாதிகார ஆட்சி நடத்தினார்.

விசித்திர தேர்தல்!

1947-ல் பிரிட்டிஷ் ஆட்சியில் முதல் தேர்தல் நடந்தாலும், அப்போது படித்தவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை இருந்தது. வாக்குச் சீட்டு முறைதான்.

1960-களில் நாடு தழுவிய தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதுதான் உலகை திரும்பிப் பார்க்க வைத்தது.

மக்களில் பெரும்பாலானோர் எழுதப் படிக்கத் தெரியாதவர்கள். ஆகவே, வாக்குச் சீட்டில் சின்னங்களைப் பார்த்து குழப்பமடையக் கூடாது என்பதற்காக, ‘கோலிக்குண்டு முறை’ அறிமுகப்படுத்தப்பட்டது.

வாக்காளர் அடையாள அட்டையுடன் வாக்குச் சாவடிக்கு வரவேண்டும். பெயர் சரிபார்க்கப்பட்டதும், இடது கை விரலில் அழியாத மை வைக்கப்படும்.

பின்னர் அதிகாரியிடம் இருந்து ஒரு கோலிக்குண்டு வழங்கப்படும். 

போட்டியிடும் ஒவ்வொரு வேட்பாளருக்கும் ஒரு தனித்தனி இரும்பு டிரம் வைக்கப்பட்டிருக்கும்.

வாக்காளர் தங்களுக்குப் பிடித்த வேட்பாளரின் டிரம்ஸில் குண்டைப் போட வேண்டும். குண்டு விழுந்ததும் உள்ளே இருக்கும் மணியில் ‘டிங்’ என்று ஒரு சத்தம் கேட்கும்.

ஒருவருக்கு மேல் சத்தம் கேட்டால், யாரோ ஏமாற்றுகிறார்கள் என்று அர்த்தம்! கள்ளவாக்கை தடுக்க இப்படி ஓர் யுக்தி. 

வாக்குகளை எண்ணுவது இன்னும் சுவாரஸ்யமானது. துளைகள் இடப்பட்ட ஒரு மரப்பலகையைப் பயன்படுத்துவார்கள்.

டிரம்ஸில் உள்ள குண்டுகளை அந்தப் பலகையில் கொட்டினால், அவை துளைகளில் அமர்ந்துவிடும். இதனால் ஆயிரக்கணக்கான வாக்குகளைச் சில நிமிடங்களிலேயே துல்லியமாக எண்ணிவிடலாம்.

சர்வாதிகாரியை வீழ்த்திய கோலிகள்!

2016 டிசம்பரில் நடந்த தேர்தலில், 22 ஆண்டுகாலச் சர்வாதிகாரி யாஹ்யா ஜாமேவை எதிர்த்து அடாமோ பரோ களம் இறங்கினார்.

இதே கோலிக்குண்டு முறையில்தான் தேர்தல் நடந்தது. முடிவில் ஜாமே படுதோல்வி அடைந்தார்.

முதலில் தோல்வியை ஏற்றுக்கொண்ட ஜாமே, ஒரு வாரம் கழித்து, “தேர்தலில் முறைகேடு நடந்துள்ளது, நான் பதவியை விட்டு விலக மாட்டேன்” என்று அடம்பிடித்தார்.

ஜனவரி 19, 2017 அன்று, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய அதிபரான அடாமோ பரோவின் பதவியேற்க வேண்டிய நாள். ஆனால், பழைய சர்வாதிகார அதிபர் ஜாமே அரண்மனையை விட்டு நகரவில்லை.

ஆகவே, புதிய அதிபரான அடாமோ பரோ அண்டை நாடான செனகலுக்குச் சென்று, அங்குள்ள காம்பியா தூதரகத்தில் வைத்து அதிபராகப் பதவியேற்றார்.

அதே நாள், ஜனநாயகத்தைக் காக்க மேற்கு ஆப்பிரிக்க நாடுகளின் கூட்டமைப்பில் (ECOWAS) உள்ள நாடுகள் களம் இறங்கின. 

காம்பியாவை மூன்று பக்கமும் சூழ்ந்திருப்பதால், செனகல் ராணுவம் தரைப்படை மற்றும் வான்வழித் தாக்குதலுக்குத் தயாராக எல்லைக்குள் நுழைந்தது.

நைஜீரியா, தனது அதிநவீன போர் விமானங்களைத் தயார் நிலையில் வைத்ததோடு, கடற்படைக் கப்பல்களைக் காம்பியா கடற்கரையில் நிறுத்தியது.

கானா, தனது வீரர்களைத் தரைப்படை உதவிக்கு அனுப்பி வைத்தது.

மொத்த படையும், காம்பியாவின் தலைநகரான, பஞ்சுல் நகருக்குள் நுழைந்தது.

வேடிக்கை என்னவென்றால், சொந்த நாட்டு ராணுவமே அண்டை நாட்டுப் படைகளை எதிர்க்காமல் வரவேற்றது!

இறுதியில், தனியார் விமானத்தில் எக்குவடோரியல் கினியா நாட்டிற்குத் தப்பி ஓடினார், ஜாமே.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய அதிபரான அடாமோ பரோ, நாட்டுக்கு வந்து அதிபராக பதவியேற்றுக் கொண்டார். 

உலக வரலாற்றில் ஒரு நாட்டின் தேர்தலை மதிப்பதற்காக, அண்டை நாடுகள் ஒன்று சேர்ந்து ராணுவத்தை அனுப்பியதும், போரின்றி ஒரு சர்வாதிகாரியை விரட்டியதும் இதுவே முதல்முறை.

பாடம் கற்பிக்கும் பாமரர்கள்!

காம்பியாவில் கடைசியாக கடந்த 2021-ல் அதிபர் தேர்தல் நடந்தது. இதில் பத்து லட்சத்துக்கும் அதிகமான மொத்த வாக்காளர்களில் 89.34% பேர் வாக்களித்து சாதனை புரிந்தனர்.

காம்பியாவின் அடுத்த அதிபர் தேர்தல், வரும் 2026 டிசம்பர் 5 அன்று நடைபெறும் என்று அந்த நாட்டின் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

அன்றைய தினமும், வாக்குச்சாவடிகளில் இரும்பு டிரம்கள் வரிசையாக நிற்கும்… மக்கள் கையில் கோலிக்குண்டுகளுடன் செல்வார்கள்…

சர்வாதிகாரத்தை வீழ்த்திய அந்த ‘டிங்’ சத்தம் மீண்டும் காம்பியா நதிக்கரையில் எதிரொலிக்கும்!

You might also like