பெருந்தலைவர் காமராஜருக்கு மிகவும் நெருக்கமாக இருந்தவரான ‘சின்னக் குத்தூசி’ என்ற திருவாரூர் இரா.தியாகராஜன், காமராஜரின் நிர்வாகத் திறன், பழகும் தன்மை, திட்டமிட்ட செயல்பாடு பொது வாழ்வில் காட்டிய எளிமை என்று அவரது அரியப் பண்புகள் குறித்து அவர் தொகுத்து எழுதிய நூல் சாந்தா பதிப்பக வெளியீடாக ‘மறக்க முடியாத மாபெருந் தலைவர்’ என்ற தலைப்பில் வெளிவந்திருக்கிறது.
அந்த நூலுக்கு சின்னக் குத்தூசி எழுதிய முன்னுரை மட்டும் உங்கள் பார்வைக்கு:
“பெருந்தலைவர் காமராஜரின் அன்புக்கும் நம்பிக்கைக்கும் உரிய ஆயிரக்கணக்கான தொண்டர்களில் ஒருவனாகச் சிலவருடகாலங்கள் செயல்பட்டு வந்தேன் நான்.
பெருந்தலைவர் – அவரது இனிய நண்பர்களான எம்.பி. தாமோதரன், முருக தனுஷ்கோடி ஆகிய மூவரின் விருப்பத்திற்கிணங்க சிலகாலம் ‘நவசக்தி’யில் தலையங்க எழுத்தாளனாகவும் பணியாற்றினேன்.
காலம் – பெருந்தலைவரின் இன்னுயிரைப் பறித்துக் கொண்டது. அப்போது பெருந்தலைவரோடு நெருங்கிப் பழகியவர்கள், பெருந்தலைவரால் பயன் பெற்றவர்கள் என்று பல பிரமுகர்களைச் சந்தித்து – பெருந்தலைவரின் அரியகுணங்கள் பற்றிக் கருத்துகள் சேகரித்தேன்.
பெருந்தலைவரின் மனிதாபிமானம், நிர்வாகத் திறமை, மக்களை நேசிக்கும் பாங்கு ஆகியவை பற்றியெல்லாம் அவர்கள் பல நிகழ்ச்சிகளை நினைவு கூர்ந்து எடுத்துச் சொன்னார்கள்.
அது அப்போது – ‘அலைஓசை’ நாளிதழில் ‘மறக்க முடியாத பெருந்தலைவர்’ என்ற தலைப்பில் ஏறத்தாழ இரண்டு மாத காலம் தொடர்ந்து பிரசுரம் ஆகியது.
பொதுவாக – நான் கடந்த முப்பதாண்டு காலமாகத் தினசரிப்பத்திரிகைகளிலேயே – பெரும்பாலும் – தினசரி கட்டுரைகள் எழுதுபவனாக ஆகிவிட்டதால் – நான் எனது கட்டுரைகளை எல்லாம் சேர்த்து வைப்பது கிடையாது!

நண்பர் ராஜ்மோகன் – மறக்க முடியாத பெருந்தலைவர் கட்டுரைத் தொடர் வெளி வந்து 8 ஆண்டுகளுக்குப் பிறகு – என்னிடம் வந்து அதைப் புத்தகமாக வெளியிடுகிறோம் என்று கேட்டபோது அந்தத் தொடர் என்னிடம் இல்லை.
திருவாரூரில் லெனின் பெயரால் புத்தகக்கடை வைத்திருக்கும் நண்பர் கோவிந்தராஜன் – தம்மிடம் ஒருசில கட்டுரைகள் இருப்பதாகத் தெரிவித்தார்.
அவர் தந்து உதவிய கட்டுரைகளே இன்று நூல்வடிவம் பெற்று இருக்கின்றது.
கட்டுரைகளை ‘அலை ஓசை’யில் வெளியிட்டு உதவிய முன்னாள் மேயர் திரு. வேலூர் நாராயணன் அவர்களுக்கும் இதனைப் புத்தகமாக வெளியிட முன்வந்த நண்பர் ராஜ்மோகனின் மாமனார் பெரியவர் திரு. கணபதி அவர்கட்கும் பெருந்தலைவரைப் பற்றி இவ்வளவு நிகழ்ச்சிகளை நினைவுகூர்ந்து உதவிய அன்பர்கள் அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்து கொள்கிறேன்.
அன்பன் திருவாரூர் இரா.தியாகராஜன்
26-06-1986
சென்னை