டி20 உலகக் கோப்பை – 2026 ஒரு பார்வை!

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நடத்தும் 10வது ஆண்கள் டி20 உலகக் கோப்பைப் போட்டிகள் தொடங்கியுள்ளன.

இன்று (பிப்ரவரி 7ம் தேதி) முதல் மார்ச் 8ம் தேதி நடக்கவுள்ள இந்தப் போட்டிகளை இந்தியாவும், இலங்கையும் இணைந்து நடத்துகின்றன.

இந்தப் பத்தாவது சீசனில் இந்தியா, இலங்கையுடன் பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள், நியூசிலாந்து, தென்னப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான்,

நெதர்லாந்து, அயர்லாந்து, ஜிம்பாப்வே, நேபாளம், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஓமன்,  ஸ்காட்லாந்து, நமீபியா, கனடா, அமெரிக்கா, இத்தாலி என 20 நாடுகள் கலந்துகொள்கின்றன.

2007ம் ஆண்டு முதல் நடந்த வரும் டி20 உலகக் கோப்பையை இதுவரை இந்தியா, இங்கிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள் ஆகிய அணிகள் இரண்டு முறையும், பாகிஸ்தான், ஸ்ரீலங்கா, ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் ஒருமுறையும் வென்றுள்ளன.

இந்தமுறை வெல்லப் போவது யார் என்கிற பரபரப்பு இப்போதைய ரசிகர்களைத் தொற்றிக் கொண்டுவிட்டது.

  • டி20 வரலாறு:

டி20 உலகக் கோப்பையைப் பொறுத்தவரை 2007ம் ஆண்டு முதல் நடந்துவருகிறது. ஆனால், டி20 கிரிக்கெட் என்கிற ஒரு ஃபார்மெட் தொடங்கியது 2003ம் ஆண்டு.

இங்கிலாந்தில் 1972ம் ஆண்டு முதல் பென்சன் அண்ட் ஹெட்ஜஸ் என்கிற கவுன்டிகளுக்கான முதல்தர ஒருநாள் போட்டிகள் நடந்துவந்தன. இது 2002ம் ஆண்டுடன் நிறைவடைந்தது.

இந்நிலையில் ஒருநாள் போட்டிகளுக்குக் குறைந்துவரும் பார்வையாளர்கள் மற்றும் ஸ்பான்சர்ஷிப் காரணமாக இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் போர்டு பார்வையாளர்களை அதிகரிக்க என்ன வழியென யோசித்தது.

பின்னர் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் குறைந்த ஓவர்கள் கொண்ட போட்டி ஒன்றை நடத்த முடிவெடுத்தது. அதுவே டி20 கிரிக்கெட்.

அப்படியாக இங்கிலாந்து கவுன்டிகளுக்குக் இடையே முதல்முறையாக டி20 போட்டிகள் 2003ம் ஆண்டு நடத்தப்பட்டன.

இன்றும் இந்தப் போட்டிகள் டி20 பிளாஸ்ட் என நடத்தப்பட்டு வருகின்றன. அன்று இந்தப் போட்டி ஓரளவு வெற்றியைக் கொடுத்தது.

இதனையடுத்து 2004ம் ஆண்டு, டி20 கிரிக்கெட்டின் முதல் போட்டி லாட்ஸ் மைதானத்தில் மிடில்செக்ஸ், சர்ரே ஆகிய இரண்டு கிளப்புகளுக்கு இடையே நடந்தது.

இதற்கு நிறைய பார்வையாளர்களும், அமோக வரவேற்பும் கிடைத்தது. அங்கிருந்து டி20 கிரிக்கெட்டின் பயணம் வேகமெடுத்தது.

பின்னர் 2005ம் ஆண்டு முதல் சர்வதேச ஆண்கள் டி20 கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையே ஆக்லாந்து நகரில் நடந்தது.

இதில் ஆஸ்திரேலிய அணி வெற்றியை ஈட்டியது. இதனையடுத்து சர்வதேச கவனத்தை டி20 கிரிக்கெட் பெற்றது.

ஒவ்வொரு அணிகளும் இதற்கென அதிரடி வீரர்களைத் தயார்படுத்தின. 2007ம் ஆண்டு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தும்படியாக உலகக் கோப்பைப் போட்டிகள் தொடங்கப்பட்டன.

  • உலகக் கோப்பைப் போட்டிகள் இதுவரை…

2007ம் ஆண்டு ஐசிசி உலக டி20 என்ற பெயரில் இந்தப் போட்டி ஆரம்பிக்கப்பட்டது. பிறகு 2021ம் ஆண்டிலிருந்தே ஐசிசி ஆண்கள் டி20 உலகக் கோப்பை எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

முதன்முதலில் உலக டி20 போட்டியை 2007ம் ஆண்டு தென்னாப்பிரிக்கா நடத்தியது. இதன் இறுதிப் போட்டியில் இந்தியாவும், பாகிஸ்தானும் மோதின.

தோனி தலைமையிலான இந்திய அணியை முதல் டி20 உலகக் கோப்பையைக் கைப்பற்றி சாதித்தது.

இந்த உலகக் கோப்பையில் இந்திய வீரர் யுவராஜ் சிங், இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட்டின் ஒரே ஓவரில் ஆறு சிக்சர்கள் அடித்தது இன்றும் ரசிகர்களிடையே வைரல்தான்.

அவர், 12 பந்துகளில் 50 ரன்களை எட்டி டி20 கிரிக்கெட்டில் புதிய சாதனையையும் படைத்தார்.

2009ம் ஆண்டில் இரண்டாவது உலக டி20 கோப்பையை இங்கிலாந்து நடத்தியது.

இதன் இறுதிப் போட்டியில் பாகிஸ்தானும், இலங்கையும் மோதின. இதில் பாகிஸ்தான் கோப்பையைத் தட்டிச் சென்றது.

தொடர்ந்து 2011ம் ஆண்டு மூன்றாவது உலக டி20 நடந்திருக்க வேண்டும். ஆனால், அப்போது ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி நடத்த வேண்டியிருந்ததால் முன்கூட்டியே 2010ல் நடத்தப்பட்டது.

பின்னர் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி நான்கு ஆண்டுகளாக மாற்றப்பட்டது தனிக்கதை.

இந்த மூன்றாவது உலக டி20 கோப்பையை மேற்கிந்தியத் தீவுகள் நடத்தியது. இதன் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் மோதின. இதில் இங்கிலாந்து முதல்முறையாக டி20 கோப்பையை வென்றது.

தொடர்ந்து நான்காவது கோப்பையை 2012ம் ஆண்டு இலங்கை நடத்தியது. இதில் மேற்கிந்தியத் தீவுகள் அணியும், இலங்கை அணியும் இறுதிப் போட்டியில் மோதின. இதில் மேற்கிந்தியத் தீவுகள் அணி முதல்முறையாகக் கோப்பையை வென்றது.

பிறகு 2014ம் ஆண்டு ஐந்தாவது உலக டி20 போட்டியை பங்களாதேஷ் நடத்தியது. இதன் இறுதிப் போட்டியில் இந்தியாவும், இலங்கையும் மோதியது. இதில் இலங்கை முதல்முறையாக கோப்பையைத் தட்டிச் சென்றது.

2016ம் ஆண்டு ஆறாவது உலக டி20 போட்டிகள் நடந்தன. இதனை இந்தியா நடத்தியது. இதன் இறுதிப் போட்டியில் இங்கிலாந்தும் மேற்கிந்தியத் தீவுகளும் மோதின.

இதில் மேற்கிந்தியத் தீவுகள் அணி இரண்டாவது முறையாக உலக டி20 கோப்பையைக் கைப்பற்றியது.

இதன்பிறகு 2018ம் ஆண்டு நடக்கவேண்டிய ஏழாவது உலக டி20 கோப்பை நடத்தப்படவில்லை. முக்கியமான நாடுகள் வெவ்வேறு கிரிக்கெட் போட்டிகளில் பிஸியாக இருந்ததால் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

இதன்பிறகு ஐசிசி ஆண்கள் டி20 உலகக் கோப்பை எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

2020ம் ஆண்டு ஏழாவது சீசன் நடக்க வேண்டிய நேரத்தில் கொரோனா வந்தது. இதனால் 2021ம் ஆண்டு போட்டிகள் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடத்தப்பட்டன.

இதன் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவும் நியூசிலாந்தும் மோதின. இதில் ஆஸ்திரேலியா முதல்முறையாகக் கோப்பையை வென்றது.

தொடர்ந்து 2022ம் ஆண்டு எட்டாவது டி20 உலகக் கோப்பைப் போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்தது.

இதன் இறுதிப்போட்டியில் இங்கிலாந்தும், பாகிஸ்தானும் மோதின. இதில் இங்கிலாந்து இரண்டாவது முறையாக கோப்பையைக் கைப்பற்றியது.

இதனையடுத்து 2024ம் ஆண்டு ஒன்பதாவது டி20 உலகக் கோப்பைப் போட்டியை அமெரிக்காவும் மேற்கிந்தியத் தீவுகளும் இணைந்து நடத்தின.

இதில், இறுதிப் போட்டியில் இந்தியாவும், தென்னாப்பிரிக்காவும் மோதின. ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி இரண்டாவது முறையாக டி20 உலகக் கோப்பையை வென்று சாதனை படைத்தது.

இப்போது பத்தாவது உலகக் கோப்பைப் போட்டிகள் இந்தியாவிலும், இலங்கையிலும் தொடங்கி விறுவிறுப்பைக் கூட்டியுள்ளன.

இதில் எந்த அணி கோப்பையைக் கைப்பற்றும் என்பது மார்ச் 8ம் தேதி தெரிந்துவிடும். 

  • கவின்
You might also like