கொஞ்சம் சூடு, கொஞ்சம் கனிவு – 5
சிறு கோவில்களிலும் திறந்த வெளியிலும் தமிழ்நாட்டில் பரவலாக இருக்கும் உயிர்ப்பான சாமிகளுக்குப் பின்னால் இருக்கிற துடிப்புமிக்க வரலாறு நமக்குத் தெரியுமா?
‘தமிழ் மண்ணின் சாமிகள்’ என்கிற தலைப்பில் குமுதம் பக்தி இதழுக்காக நான் தொடராக எழுதியபோது,
தமிழ்நாடு முழுக்க ஆங்காங்கே இருக்கும் சிறு தெய்வங்கள் என்று சொல்லப்படும் பெருவாரியான மக்களின் சாமிகள், அவை உருவான உணர்வுகலந்த பின்னணி குறித்து எழுதியபோது, அதற்கு கிடைத்த வரவேற்பு மகத்தானது.
அதே பெயரில் புத்தகமாகவும் வெளிவந்தபோது, அதே வரவேற்பு கிடைத்தது.
பிறகு அதே தலைப்பில், ஜெயா தொலைக்காட்சியில் காலை நேரத்தில், ப்ரைம் டைம்-ல் காட்சித் தொடராக அதை எழுதி இயக்கும் வாய்ப்பும் எனக்குக் கிடைத்தது.
இந்தத் தொடர் வெளிவந்தபோது, பல ஆச்சர்யங்கள் நிகழ்ந்தன.
கடவுள் நம்பிக்கையற்ற எனக்கு சிறு தெய்வங்கள் தொடர்பான காட்சித் தொடரை இயக்கும் வாய்ப்பு கிடைத்தபோது, அதன் டைட்டில் சாங்கையும் அகில் அரவிந்தன் என்கிற பேரில் நானே எழுதியிருந்தேன்.
அதைத் துடிப்புமிக்கக் குரலில் வீரியத்துடன் பாடியவர் இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த பாடகரான முகேஷ்.
அந்தப் பாடலுக்கு இசையமைத்தவர் கிறித்துவ மதத்தைச் சேர்ந்தவர். இத்தொடருக்கு பின்னணிக் குரல் கொடுத்ததும் (வாய்ஸ் ஓவர்) கிறித்துவ மதத்தைச் சேர்ந்த நண்பர்தான்.
இப்படி மத ஒற்றுமைக்கான கலவையாக அமைந்த டைட்டில் சாங் பெரும் வரவேற்பைப் பெற்றது.
இன்னொரு ஆச்சர்யம் – இத்தொடர் வெளிவருவதற்கு முன்பு பயிலட் எபிசோடு என்கிற மும்மாதிரியான காட்சித் தொகுப்பைத் தயாரித்து அதை ஜெயா டிவிக்கு அனுப்ப, அவர்கள் அதை அப்போதைய தமிழக முதலமைச்சரான ஜெயலலிதாவின் பார்வைக்கு அனுப்பி இருந்தார்கள்.
அந்தக் குறிப்பிட்ட எபிசோடில், சென்னையில் புகழ்பெற்ற கோவிலான பாடிகாட் முனீஸ்வரன் கோவிலைப் பற்றியும் அது உருவான பின்னணி பற்றியும் காட்சிபூர்வமாக விவரித்திருந்தோம்.
அதைப் பார்த்துவிட்டு ஜெயலலிதா எழுதிய சிறு குறிப்பு.
“வெரி குட்”.
இப்படிப்பட்ட அமர்க்களத்துடன் அந்தத் தொடரை இயக்கி மூன்றரை ஆண்டுகளாக தொடர்ச்சியாக அது வெளிவந்தபோது, கிடைத்த அனுபவங்களே தனி ரகம்.
இந்தத் தொடருக்காக தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களிலுள்ள குலசாமிகள் என்று சொல்லப்படுகிற சிறுதெய்வக் கோவில்களுக்குச் சென்றபோது, ஒவ்வொரு கோவிலும் வேறுவேறு விதமான அனுபவங்கள்.
அப்போது அதிமுக ஆட்சிப் பொறுப்பில் இருந்ததால், அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த பல கோவில்களுக்குள் சிரமமில்லாமல் நுழைந்து படம் பிடிக்க முடிந்தது. அப்படி முதன்முறையாக விசுவலாக எடுக்கப்பட்டன பல பிரபலமான கோவில்கள்.
தெற்கே இசக்கியம்மன் கோவிலிலிருந்து மதுரையிலுள்ள மதுரைவீரனின் மூலக்கோவில், சமயபுரத்து மாரியம்மன் என்று பல்வேறு கோவில்களுக்கு போனபோது, தகுந்த ஒத்துழைப்பு இருந்தது.
தொலைக்காட்சிப் பார்வையாளர்கள் மத்தியிலும் அது, உரிய வரவேற்பைப் பெற்றது.
அதேசமயம் நாங்கள் எடுக்க முயன்ற எல்லா கோவில்களிலும் அப்படிப்பட்ட வரவேற்பு இல்லை. சில கோவில்களில் மிகவும் கெடுபிடியான எதிர்வினைகளைச் சந்திக்க வேண்டியிருந்தது.
நெல்லையில் உள்ள ஒரு பிரபலமான கோவிலுக்குப் போய் படம்பிடித்தபோது, அங்குள்ள சிலர் ஆதரிக்க, சிலர் கடுமையாக எதிர்த்தனர்.
நாங்கள் படம்பிடித்துக் கிளம்பும்போது, அங்கிருந்த ஒருவர் சாமியாடியபடியே எங்களுக்கு கடுமையான சாபமே கொடுத்தார்.
“நீங்கள் இந்தக் கோவிலில் எடுத்ததெல்லாம் உங்கள் கேமிராவில் பதிவாகாது. நீங்க பக்கத்துல ஊருக்குப் போறதுக்கு முன்னாடியே, நீங்க வந்திருக்கிற கார் பிரச்சனையாகி நீங்கள் விபத்தைச் சந்திப்பீர்கள். என்ன நடக்குதுன்னு பாருங்க” என்று சாமியடியபடியே சொன்னதும் நாங்கள் வந்தக் காரின் டிரைவர் பதறிப்போய் விட்டார்.
அவரிடம் “அப்படியெல்லாம் நடக்காது, வாங்க..” என்று அழைத்துக் கொண்டு பக்கத்திலுள்ள ஊருக்கு நாங்கள் போய் சேரும்வரை எந்தப் பிரச்சனையும் இல்லை.
கோவிலில் நாங்கள் எடுத்த காட்சிகள் கேமராவில் துல்லியமாக பதிவாகியிருந்தன.
எப்படிப்பட்ட ‘அருள்’ பாருங்கள்.
இதுமாதிரியே சில இடங்களில் பிரச்சனைகளை நாங்கள் சந்தித்தாலும், தமிழகத்தின் வடமாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் நுழைவாயிலிலேயே இருந்தது அந்தத் திறந்தவெளி கோவில்.
சாமியும் பிரம்மாண்டமாக திறந்த வெளியில் ‘வாள்‘ சகிதமாக நின்றிருந்தார்.
ஊர், அந்தக் கோவிலிலிருந்து சற்றுத் தொலைவிலிருந்தது. நாங்கள் காரில் போய் இறங்கி, கேமரா குழுவினரோடு வெளிப்புறக் காட்சிகளைப் படம்பிடித்துக் கொண்டிருந்தபோது, ஊருக்குள் இருந்து ஒரு சிறு கும்பல் ஓடிவருவது தெரிந்தது.
“நிறுத்துங்கடா” என்கிற அதிகாரக் குரல் எங்களைத் தடுத்து நிறுத்தியது.
“யாரைக் கேட்டு இங்க வந்தீங்க?” என்ற ஆவேசப்பட்டவரிடம் எங்களது அடையாள அட்டை உள்ளிட்டவற்றைக் காண்பித்து, “இந்தத் தொடருக்காகத்தான் நாங்கள் வந்திருக்கிறோம்” என மென்மைான படி சொன்னோம்.
இருந்தும் அவர்களுக்குத் திருப்தி இல்லை. ஸ்டாண்டில் போடப்பட்ட கேமராவிற்கு பக்கத்திலிருந்த கேமராமேனை சுட்டிக்காட்டி, “இவர் என்ன சாதி?” என்று கேட்டபோது, எங்களிடம் ஒருவிதப் பதற்றம் தொற்றிக் கொண்டது.
கோவிலுக்கு வெளியே படம் பிடித்தவருக்கு எதிராக இப்படி ஒரு கேள்வி முன்வைக்கப்படுகிறது என்றால், அந்த ஊரில் பரவலாக இருக்கும் சமூகத்தினரின் சாதியம் சார்ந்த பார்வை எப்படிப்பட்ட தீவிரத்துடன் இருக்கும்.
நான் இடையில் புகுந்து தடுத்து குறிப்பிட்ட கேமராமேனின் சாதிப் பற்றி எதையுமே சொல்ல முடியாது. அது தேவையுமில்லை என்று அவர்களிடம் சொன்னபோது, அவர்கள் சொன்ன பதில் கடுமையான வெப்பத்துடன் இருந்தது.
“இப்ப நீங்க நின்னுட்டு இருக்கீங்களே, உங்களுக்கு முன்னால இருக்கிற கோயில் எங்களுடைய சாமி, எங்களுடைய சமூகத்திற்கான கோவில். நாங்க கட்டின கோவில்.
இதுக்குள்ள மத்த கீழ் சாதிக்காரங்கள நாங்க அனுமதிக்கமாட்டோம். இதுவரை அனுமதிச்சதில்ல. இனியும் செய்யமாட்டோம்” என்று அவர்கள் சாதிய மேலுணர்வோடு பேசிக் கொண்டிருந்தபோது, நான் இடைமறிக்க வேண்டியிருந்தது.
“உங்க கோவிலைப் பற்றி நாங்கள் பதிவு செஞ்சா உங்க சாமிக்கும் உங்களுக்கும் தானே பெருமை” என்று சொன்னபோது, அவர்கள் தடாலடியாகச் சொன்ன பதில்,
“நீங்க எங்க கோவிலைப் படம்பிடிச்சு வெளியிட்டா, அதை இங்க உள்ள கீழ் சாதிக்காரர்களின் வீடுகளில் இருக்கிற டிவிகளிலும் தானே தெரியும்?
அதனாலதான் சொல்றோம். நீங்க எங்க கோவிலை எடுக்க அனுமதிக்க மாட்டோம்” என்று வலுவான குரலை அவர்கள் எழுப்பியபோது,
கேமரா குழுவினரைப் பார்த்து, “பேக்கப் பண்ணி எல்லாவற்றையும் காருக்குள்ள எடுத்து வைங்க, இப்படிப்பட்ட வன்மம் தெரிக்கிற கோவிலை நாம் எடுக்க வேண்டியதில்லை. வாங்க கிளம்பலாம்..” என்று சொல்லிவிட்டு, காரில் ஏறிக் கிளம்பினோம்.
சற்று தூரம் சென்று திரும்பிப் பார்த்தபோது, கோவிலுக்கு முன்னால் இருந்தவர்களின் எண்ணிக்கைக் கூடியிருந்தது.
அவர்களுக்குப் பின்னால், திறந்த வெளியில் ஆயுதம் தறித்த கோலத்தில் நின்றுகொண்டிருந்தார் அந்த சாமி.
(அடுத்த வாரம் கோவில்களில் கிடைத்த அனுபவங்கள் தொடரும்…)
– எழுத்தாளர் மணா