‘வைக்கிங்’குகளின் வரலாறு இன்னும் முடியவில்லை!

முன்னொரு காலத்தில் ஐரோப்பா கண்டத்தில் வைக்கிங் என்ற கடற்கொள்ளையர்கள் வாழ்ந்து வந்தார்கள்.

‘எல்லா நதியிலும் எங்களது ஓடம்’ என்பதுபோல, ஐரோப்பா கண்டத்தில் வைக்கிங்குகளின் பாய்மரக் கப்பல்கள் நுழையாத ஆறுகளோ கடல்களோ இருக்காது. ஒடுகலான அவர்களது

கப்பல்கள் சின்னச்சின்ன ஆறுகளில் கூட ஊடுருவி வந்துவிடும்.

சென்னை மாநகரத்தின் நடுவே கூவம் ஆற்றில் ஒரு பாய்மரக்கப்பல் திடுதிடுப்பென வந்து நின்றால் எப்படி இருக்கும்? அப்படித்தான் சீன் ஆற்றின் வழியாக பிரான்ஸ் நாட்டின் தலைநகரமான பாரிஸ் நகரத்துக்கு வந்து அந்த நகரத்தை சூறையாடக் கூடியவர்கள் வைக்கிங்குகள்.

வைக்கிங் கடற்கொள்ளையர்கள் கி.பி.800 முதல் கி.பி.1100 வரை, 300 ஆண்டுகாலம் கொட்டமடித்துத் திரிந்தார்கள். ஐரோப்பா கண்டத்தை பயத்தில் அலற விட்டார்கள்.

சரி. இப்போது வைக்கிங்குகளை விட்டுவிட்டு வேறொரு விடயத்துக்கு வருவோம்.

பெட்ரோலிய எண்ணெய் வளமிக்க லத்தீன் அமெரிக்க நாடான வெனிசுவேலாவுக்கு எதிராக அமெரிக்கா இப்போது ஒரு கடல்முற்றுகையை நடத்தி வருகிறது.

உலகின் மிகப்பெரிய விமானந்தாங்கி கப்பலான யு.எஸ்.எஸ்.ஜெரால்ட் ஆர் ஃபோர்ட் உள்பட பல்வேறு போர்க்கப்பல்களை நிறுத்தி வெனிசுவேலா நாட்டை மிரட்டி வருகிறது.

ஏன்? என்ன காரணமாம்?

வெனிசுவேலா நாடு அந்த நாட்டில் இருந்த அமெரிக்க எண்ணெய் நிறுவனங்களைத் தடை செய்து அந்த நிறுவனங்களின் சொத்துகளை சூறையாடி விட்டதாம்.

அப்படி பறிக்கப்பட்ட எண்ணெய், நிலம், இதர சொத்துகளை வெனிசுவேலா நாடு திருப்பித்தர வேண்டுமாம்.

இதை வலியுறுத்தி வெனிசுவேலா நாடு மீது அமெரிக்கா ஏற்கெனவே பொருளாதாரத் தடைவிதித்திருந்தது. பாவம் வெனிசுவேலா.

அந்த நாட்டின் முதன்மை வருமானமே எண்ணெய் ஏற்றுமதிதான். ஒருநாளைக்கு 10 லட்சம் பீப்பாய் எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடு அது. அதில் 80 விழுக்காடு ஏற்றுமதியாகிறது.

அமெரிக்கா விதித்த பொருளாதார தடையால் எண்ணெய் ஏற்றுமதி தடைபட்டு, நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது வெனிசுவேலா. திருட்டுத்தனமாக கப்பல்களில் எண்ணெய்யை ஏற்றி ஏற்றுமதி செய்ய வேண்டிய நிலை.

இப்படி அனுப்பப்படும் கப்பல்களை அமெரிக்கா சிறைப்பிடித்து வருகிறது. ஸ்கிப்பர் என்ற கப்பல் அண்மையில் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது.

போதாக்குறைக்கு வெனிசுவேலா நாடு போதைக் கடத்தல் கும்பல்களுக்கு உதவியாக இருப்பதாகக் கூறி, அந்த நாட்டின் படகுகள், கப்பல்களை அமெரிக்க கடற்படை மூழ்கடித்து வருகிறது.

இந்த மாதிரியான தாக்குதல்களில் இதுவரை கரிபியன் கடலில் 95 பேர் பலியாகி இருக்கிறார்கள்.

அமெரிக்காவின் நோக்கம் என்ன?

வெனிசுவேலா நாட்டில் ஆட்சிமாற்றம் வர வேண்டுமாம். அந்த நாட்டின் அதிபர் நிகோலாஸ் மடுரோ நாட்டைவிட்டு ஓட வேண்டுமாம். இப்படி வெளிப்படையாகவே தனது விருப்பத்தை வெளிப்படுத்துகிறது அமெரிக்கா.

வெனிசுவேலா நாட்டின் எண்ணெய் வளம் அலுங்காமல் குலுங்காமல் அமெரிக்காவின் கைகளுக்கு வரவேண்டும் என்பது அமெரிக்காவின் மறைமுக அஜெண்டா.

பிடிக்காதவர்களை ஆட்சியை விட்டு அகற்ற அமெரிக்கா சில டெம்பிளேட் குற்றச்சாட்டுகளை கூறுவது வழக்கம்.

அந்த குற்றச்சாட்டுகள் வருமாறு:

1. எதிரியை கம்யூனிஸ்ட் என்று குற்றம் சாட்டுவது. 2. போதைப் பொருட்கள் கடத்தல் செய்கிறார் என்ற குற்றச்சாட்டு. 3. சூனிய வித்தை செய்கிறார் என்று பழிபோடுவது. 4. பேரழிவு ஆயுதம் வைத்திருக்கிறார் என்பது. 5. பயங்கரவாத இயக்கங்களுக்கு உதவுகிறார் என்று குற்றம்சாட்டுவது.

வெனிசுவேலா நாட்டின் அதிபர் நிகோலாஸ் மடுரோ, இந்தப் பட்டியலில், 2ஆவது மற்றும் 5ஆவது குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி இருக்கிறார்.

வரலாற்றில் வைக்கிங் கடற்கொள்ளையர்களின் ஆட்டம் கி.பி.1100ஆம் ஆண்டுடன் முடிந்துவிட்டது என்று நினைக்காதீர்கள்.

நம் காலத்திலும் வைக்கிங்குகளின் வரலாறு வேறு வடிவத்தில் தொடர்கிறது.

– மோகன ரூபன் முகநூல் பதிவு 

You might also like