தமிழக பள்ளிக் கல்வித்துறை சமீப காலமாக, மாணவர்களிடம் வாசிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில், பள்ளி நூலகத்தை வளப்படுத்தி வருகிறது.
ஆனாலும் நம் பிள்ளைகள் நூலக வாசிப்பில் ஆர்வம் காட்டுவதில்லை. இதற்குப் பல காரணங்கள்.
மாணவர்கள் வாசிக்கச் சிரமப்படுகிறார்கள். ஆசிரியர்களுக்கு பணிச் சுமை. அவர்கள் சிலபஸ் முடித்தாக வேண்டும். ஆகவே, நூலக வாசிப்பு பெரும்பாலான பள்ளிகளில் சடங்காகவே இருந்து வருகிறது.
இன்னொரு முக்கியமான காரணம், சிறுவர்களுக்கான நூல்கள் சுவாரஸ்யமாக இல்லை. அவை
சமகால யதார்த்தங்களைப் பிரதிபலிப்பதாகவும் இல்லை.
தமிழில் சிறார் இலக்கியங்கள் பெரும்பாலும் நீதி போதனைகளாவே இருக்கின்றன. குழந்தைகளுக்கான நூல்கள் நீதியைவிடவும் கற்பனையை வளர்ப்பதாக இருக்க வேண்டும்.
இந்தியாவில் பால புரஸ்கார் வழங்கப்படுவதுபோல், சிறுவர் நூல்களுக்காக புக்கர் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அவை தொகுக்கப்பட்டு நூல்களாகவும் வந்திருக்கின்றன.
அப்படி சமீபத்தில் குழந்தைகளைக் கவர்ந்த ஒரு புனைவு ஈகோ கடனோ எனும் ஜப்பானிய எழுத்தாளரின் kiki’s delivery service.
தனது பூனை ஜிஜியுடன் உலகிற்குள் நுழையும் ஒரு இளம் சூனியக்காரி செய்யும் சாகசங்கள் குழந்தைகளை வெகுவாக கவர்ந்தன.
இதுபோல அயர்லாந்தின் முக்கிய புராணமான ஹீரோ குசுலைன் மற்றும் போர்வீரன் ராணி மேவ் ஆகியோரின் கதைகளைத் தழுவி Alan titley வால் எழுதப்பட்ட the tain புனைவும் சிறுவர்களால் விரும்பப்பட்டது.
உருகுவே தேசத்திலிருந்து வந்த the sword of fire, இந்தோனஷியாவிலிருந்து வெளியான na willa போன்ற படைப்புகள் புக்கரால் அடையாளம் காட்டப்பட்டு உலகக் குழந்தைகளிடம் கொண்டு சேர்க்கப்பட்டன.
இத்தகைய படைப்புகளை பள்ளிக் கல்வித்துறை மொழிபெயர்த்து நம் பிள்ளைகளுக்கு வழங்க வேண்டும்.
குழந்தைகளை முற்போக்கானவர்களாக வளர்ப்பதில், குறிப்பாக சாதி அபிமானங்களைக் களைவதில், பெண்கள் மீது மரியாதையும் அன்பும் கொண்டவர்களாக மாற்றுவதில், சூழலியலில் சிற்றுயிரிகளிடத்து அக்கறை கொண்டவர்களாக வளர்ப்பதில் புத்தகங்களின் பணி மகத்தானது.
ஆகவே, சிறார் இலக்கிய நூல்களை கவனமாக தேர்வு செய்ய வேண்டும். சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் சிறுவர்கள் வாசிக்கும் நூல்களில் இயங்கும் பாலின மற்றும் நிற பேதங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இந்நூல்களின் கதாபாத்திரங்களில் சிறுவர்களைவிட சிறுமி பாத்திரங்கள் எண்ணிக்கையில் குறைவாக இருந்தன.
இவற்றில் வரக்கூடிய பாத்திரங்களில் 88% வெள்ளையர்கள். இரண்டே இரண்டு பழங்குடிப் பாத்திரங்கள் மட்டுமே இப்புனைவுகளில் இருந்தன. ஆசிய, கருப்பு அல்லது மத்திய கிழக்கு முக்கிய கதாபாத்திரங்கள் எதுவும் இந்நூல்களில் இல்லை.
ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நூல்களின் ஆசிரியர்களில் 82 % பேர் வெள்ளையர்கள். 18% வெள்ளையர் அல்லாதவர்கள்.
ஆஸ்திரேலிய சமூகத்தில் 76.8% வெள்ளையர். 10% கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஆசியர்கள். 4.6% தெற்காசியர்கள். 3.1% மேற்கு ஆசியர்கள் 2.8% பழங்குடியினர். 1.5% . மாவோரி மற்றும் பசிபிக் தீவுவாசிகள், 0.7% . ஆப்பிரிக்கர்கள். 0.6% லத்தீன் அமெரிக்கர்கள்.
ஆஸ்திரேலியாவில் வெள்ளையர்கள் பரவலாக வாழ்ந்தபோதும் கூட, அவர்கள் ஆஸ்திரேலியாவின் பனமுகத் தன்மையை, தங்கள் குழந்தைகள் அறிந்து கொள்வதன் வாயிலாகத்தான், சமகால ஆஸ்திரேலியாவை புரிந்து கொள்ள முடியும் என நம்புகிறார்கள்.
நம் தமிழ்க் குழந்தைகள் வாசிக்கும் இலக்கியங்கள் இத்தகைய பன்முகத்தன்மையைக் கொண்டவையாக விளங்க வேண்டும்.
நவீன தமிழ்ச் சமூகத்தை அவர்கள் விளங்கிக் கொள்ள உதவுவதாக அமைய வேண்டும்.
அதற்கு சிறார் இலக்கியங்களைப் பொருட்படுத்தி விவாதிக்கும் அரங்குகளை, பள்ளிக் கல்வித் துறை உருவாக்க வேண்டும்.
நன்றி: முகநூல் பதிவு