சாதனைப் பெண்களின் முன்னோடி..!

இந்தியாவின் முதல் பெண் மருத்துவரான டாக்டா் முத்துலட்சுமி ரெட்டி புதுக்கோட்டை மாவட்டத்தில் 1886-ம் ஆண்டு பிறந்தார்.  திண்ணைப் பள்ளியில் படித்த அவர், பெண் கல்விக்கு எதிரான காலத்திலேயே பல்வேறு எதிர்ப்புகளைத் தாண்டி, புதுக்கோட்டை மன்னர் கல்லூரியில் சேர்ந்து படித்தார்.
 
அவருடைய தாயார் சந்திரம்மாள் நோயால் சிரமப்பட்டு உயிாிழந்ததை நேரில் கண்டதால், எப்படியும் மருத்துவர் ஆக வேண்டும் என்றும், நம்முடைய தாயைப் போன்று நோயால் அவதிப்படும் ஏழைகளுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணமும் சிறு வயது முதலே அவருக்குள் ஆணிவேராக வளர்ந்தது.
 
1907-ம் ஆண்டு சென்னை மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த இவர், படிப்பில் சிறந்து விளங்கியதால் பல்வேறு சான்றிதழ்களையும், தங்கப் பதக்கங்களையும் பெற்றார்.
 
1912-ம் ஆண்டு முத்துலட்சுமி, இந்தியாவின் முதல் பெண் மருத்துவராக பட்டம் பெற்றபோது, ‘சென்னை மருத்துவக் கல்லூரி வரலாற்றில் ‘இது பொன்னான நாள்’ என்று எழுதினார் அறுவை சிகிச்சைத்துறை பேராசிரியர் கர்னல் ஜிப்போர்டு.
 
பின்னர் எழும்பூர் மருத்துவமனையில் முதல் பெண் மருத்துவராகப் பணியில் சேர்ந்தார். லண்டனில் உள்ள செல்சியா மருத்துவமனையில் தாய்சேய் மருத்துவம் மற்றும் புற்றுநோய் பற்றியும் ஆராய்ச்சிகள் செய்தார்.
 
1926-ம் ஆண்டு பிரான்ஸ் தலைநகர் பாரீசிலும், 1933-ம் ஆண்டு அமெரிக்காவின் சிகாகோவிலும் நடைபெற்ற சர்வதேசப் பெண்கள் மாநாடுகளில் இந்தியப் பிரதிநிதியாக கலந்துகொண்டார்.
 
இந்திய மாதர் சங்கத்தின் முதல் தலைவராகவும், சென்னை மாநகராட்சியின் முதல் துணை மேயராகவும் பணியாற்றி, அன்றைய சென்னை மாகாண சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணி என்ற பெருமையைப் பெற்றார்.
 
பின்னர் 1925-ம் ஆண்டு சட்டசபைத் துணைத் தலைவராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
 
இவரது ஐந்தாண்டு பதவிக்காலத்தில் சில புரட்சிகரமான சட்டங்களை நிறைவேற்ற அரும்பாடுபட்டார்.
 
அவற்றில், தேவதாசி முறை ஒழிப்பு, இருதார தடைச்சட்டம், பெண்களுக்கான சொத்துரிமை வழங்கும் சட்டம், பால்ய விவாக தடைச்சட்டம் போன்றவை குறிப்பிடத்தக்கவை.
 
ஆதரவற்றோா்களுக்காக சென்னை அடையாறில் அவ்வை இல்லத்தைத் தொடங்கினார்.
 
1954-ல் தென்னிந்தியாவில் முதல் புற்றுநோய் சிகிச்சை மையம் அமைத்த பெருமை இவரையேச் சாரும்.
 
1956-ம் ஆண்டு மத்திய அரசு இவருக்கு பத்மபூஷண் விருது வழங்கி கவுரவித்தது.
 
பெண்கள் முன்னேற்றத்துக்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட இவா், 1968-ம் ஆண்டு தனது 81-வது வயதில் காலமானார்.
 
இவரது நினைவைப் பெருமைப்படுத்தும் விதமாக தமிழக அரசால் ‘டாக்டர் முத்துலட்சுமி மகப்பேறு நிதி உதவித்திட்டம்’ ஏழை கர்ப்பிணிகளுக்காகத் தொடங்கப்பட்டது.
 
2018-ம் ஆண்டு முதல் பேறுகால உதவியாக ரூ.18 ஆயிரம் தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது.
 
மேலும், 2019 முதல் டாக்டர் முத்துலட்சுமி பிறந்தநாளான ஜூலை 30-ம் தேதியை அரசு மருத்துவமனைகளில் ‘மருத்துவமனை தினமாக’ கொண்டாடப்படும் எனவும் தமிழக அரசு அறிவித்துள்ளது.
 
You might also like