போன சனிக்கிழமை சாயுங்காலம்தான் பால்வண்ணம் நினைவு விருதளிப்பு நடந்தது. அங்கே வச்சுதான் செஞ்சி தமிழினியனை முதல் தடவையா பார்த்தேன். அவர்தான் ‘ஊத்தாம் பல்லா’ நாவலை எனக்குக் கொடுத்தார்.
இதுக்கு முந்தி அவர் நிறைய எழுதியிருந்தாலும், ‘ஊத்தாம் பல்லா’தான் அவருடைய முதல் நாவல். இதுக்கு இந்த வருஷம் ‘சௌமா’ விருது கிடைச்சிருக்கிற அறிவிப்புகூட அன்றைக்குத்தான் வந்திருந்தது.
திடீர்னு, முதல் ஆளாக என்னை மேடைக்கு வரச் சொல்லி ஆறுமுகம் கூப்பிட்டுட்டார். தமிழ்ச்செல்வன் உங்களைத்தான் வரச்சொல்லுதாங்க என்றார். நான் அதை எதிர்பார்க்கவில்லை.
முந்தின நாள் வரைக்கும் அப்படி எந்தத் தகவலும் எனக்கு சொல்லப்படவும் இல்லை. சொல்லாமல் கொள்ளாமல் கூப்பிடுவது எப்போதுமே எனக்குக் கொஞ்சம் சங்கடமா இருக்கும். ஒரு திகைப்பு வந்திரும்.
கையில் செஞ்சி தமிழினியன் கொடுத்திருந்த ஊத்தாம் பல்லா நாவலோடுதான். அது இருக்கும் தைரியத்தில்தான், மேலே போனேன். என் கையில் இருந்த பிடிமானமும் நம்பிக்கையும் அதுதான்.
செஞ்சி தமிழினியனோ, வேறு ஏதோ ஒரு சக படைப்பாளி எழுதின நல்ல புத்தகம் கையில் இருந்தது என்றால், அதை ஊணிக்கிட்டு அல்லது அதன் தோளைப் பிடிச்சுக்கிட்டுக் கொஞ்சம் கொஞ்சமா ஏறி எவ்வளவு உசரத்திற்கும் போய்விடலாம்.
இன்றைக்குத்தான் ‘ஊத்தாம் பல்லா’ நாவலை வாசிக்க எடுத்திருக்கேன். கொஞ்சம் பெரிய நாவல்தான்.
படிக்க ஆரம்பித்த பிறகு பெரிசு என்ன, சிறுசு என்ன, அதோடு அதா கூடவே போய்ப் படிச்சு முடித்துவிட வேண்டியதுதான்.
நன்றி: வண்ணதாசன் முகநூல் பதிவு