இந்திய விண்வெளி வீரரான சுபான்ஷு சுக்லா, நாசாவின் முன்னாள் விண்வெளி வீரரான பெக்கி விட்சன், போலந்து நாட்டைச் சேர்ந்த ஸ்லாவோஸ் உஜ்நான்ஸ்கி-விஸ்னீவ்ஸ்கி மற்றும் அங்கேரி நாட்டைச் சேர்ந்த திபோர் கபு ஆகியோருடன் இன்று விண்வெளிக்குப் புறப்பட்டு சென்றார்.
இதன்மூலம் இந்தியாவில் இருந்து விண்வெளிக்குச் செல்லும் 2-வது வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். அவருக்கு முன்னதாக 1984-ம் ஆண்டு இந்தியரான ராகேஷ் சர்மா விண்வெளிக்கு சென்றுள்ளார்.
இந்திய நேரப்படி இன்று மதியம் 12.01 மணியளவில் சுபான்ஷு சுக்லாவின் விண்வெளிப் பயணம் தொடங்கியது.
அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்திலிருந்து ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பால்கன் 9 ராக்கெட் மூலம் டிராகன் விண்கலம் ஏவப்பட்டது.
நாளை மாலை 4.30 மணிக்கு இந்த ராக்கெட் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சுபான்ஷு சுக்லாவின் இந்த பயணத்துக்காக மத்திய அரசு 550 கோடி ரூபாயை செலவு செய்துள்ளது.
யார் இந்த சுபான்ஷு சுக்லா?

குரூப் கேப்டன் சுபான்ஷு சுக்லா, 1985-ம் ஆண்டு அக்டோபர் 10-ம் தேதி உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள லக்னோவில் பிறந்தவர்.
இந்தியா – பாகிஸ்தான் இடையே கார்கில் போர் நடந்த சமயத்தில் சுபான்ஷு சுக்லாவுக்கு 14 வயது.
போர்க் கதைகளால் ஈர்க்கப்பட்ட அவர், விமானப் படையில் சேர விரும்பினார்.
லக்னோவில் உள்ள மாண்டீஸ்வரி பள்ளியில் படித்த சுபான்ஷு சுக்லா, கடந்த 2006-ம் ஆண்டு ஜூன் 17-ம் தேதி இந்திய விமானப் படையில் இணைந்தார். தனது குடும்பத்தில் இருந்து பாதுகாப்புப் படையில் இணைந்த முதல் நபர் சுபான்ஷு சுக்லா.
தற்போது ஃபைட்டர் காம்பேட் டெஸ்ட் பைலட்டாக இருக்கும் சுபான்ஷு சுக்லா, Sukhoi-30MKI, Mig-21, Mig-29, An-32, Dornier, Hawk, மற்றும் Jaguar ரக விமானங்களை இயக்கிய அனுபவம் கொண்டவர். இவர் 2,000 மணி நேரத்தும் அதிகமாக விமானங்களை இயக்கியுள்ளார்.
காதல் திருமணம்
சுபான்ஷு சுக்லாவின் மனைவி காம்னா ஒரு பல் மருத்துவர். அவருக்கு 4 வயதில் ஒரு மகன் இருக்கிறார். இருவரும் 3-ம் வகுப்பில் இருந்து ஒன்றாகப் படித்தவர்கள். காதலித்துத் திருமணம் செய்துகொண்டவர்கள்.
விண்வெளிக்குச் செல்வதில் ஆர்வம் கொண்ட சுபான்ஷு சுக்லா, இதற்கான திட்டத்தைப் பற்றிக் கேள்விப்பட்டு, அதில் சேர விரும்பினார்.
இத்திட்டத்தில் தன்னை இணைத்துக்கொள்ள கடந்த 2018-19ம் ஆண்டில் விண்ணப்பித்தார். கொரோனா காலகட்டத்தில் ரஷ்யாவுக்குச் சென்ற சுபான்ஷு சுக்லா, இதற்கான பயிற்சிகளில் ஈடுபட்டார்.
இந்திய இனிப்புகளுடன் பறக்கிறார்
விண்வெளிக்குச் செல்லும் வீரர்கள் தங்களுடன் குறைந்த அளவிலான எடையையே எடுத்துச் செல்லவேண்டும் என்ற விதி இருக்கிறது.
ஆனால், அதையும் மீறி இந்திய இனிப்பு வகைகளான கேரட் அல்வா, சிறுபருப்பு அல்வா, மாம்பழத்தில் இருந்து எடுக்கப்பட்ட தேன் ஆகியவற்றை தன்னுடன் எடுத்துச் செல்கிறார்.
செய்தியாளர் சந்திப்பில் இதைப்பற்றி அவர் கூறும்போது, “சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் தற்போது இருக்கும் விண்வெளி வீர்ர்களுக்கு கொடுப்பதற்காக இதை எடுத்துச் செல்கிறேன்.
அங்கே நிறைய உணவுகள் இருந்தாலும், இந்த இந்திய உணவுகளை அவர்களுக்காக எடுத்துச் செல்கிறேன்” என்றார்.
ராகேஷ் சர்மா சொன்ன ஆலோசனை
இந்தியாவில் இருந்து முதன் முதலாக கடந்த 1984-ம் ஆண்டு விண்வெளிக்கு சென்றவர் ராகேஷ் சர்மா.
இவர் சுபான்ஷு சுக்லாவுக்கு பல்வேறு ஆலோசனைகளை சொல்லியிருக்கிறார்.
இதுபற்றி கூறிய சுபான்ஷு சுக்லா, “இந்த பயணத்துக்கு தயாராவது எப்படி என்பது உட்பட பல ஆலோசனைகளை ராகேஷ் சர்மா சொல்லியிருக்கிறார்”
மனைவிக்கு அனுப்பிய தகவல்

விண்வெளிக்குச் செல்வதற்கு ஒரு நாள் முன்னதாக சுபான்ஷு சுக்லா, தனது மனைவி காம்னாவுக்கு இன்ஸ்டாகிராமில் அனுப்பிய செய்தியில்,
“நான் விண்வெளிக்குச் செல்ல உதவிய அனைவருக்கும் எனது நன்றியைக் காணிக்கை ஆக்குகிறேன்.
குறிப்பாக உனக்கு எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். உனது அன்பும் ஆதரவும் இல்லாவிட்டால் நான் இதை சாதித்திருக்க முடியாது.
இந்த பயணத்தை முடித்து நான் வெற்றிகரமாக திரும்பிவர உங்கள் அனைவரின் அன்பும் ஆசிர்வாதமும் தேவை” என்று உருக்கமாக குறிப்பிட்டுள்ளார்.
– பி.எம். சுதிர்