கமலின் வெற்றிப் படங்களுக்கு வித்திட்ட கிரேஸி மோகன்!

சங்கர் படங்களுக்கு எப்படித் தூணாக எழுத்தாளர் சுஜாதா இருந்தாரோ, அது போல கமல்ஹாசனுக்கு நகைச்சுவைப் படங்கள் என்றால் அது கிரேஸி மோகன் அவர்கள் தான். இவர்கள் இருவர் கூட்டணியில் காமெடியில் கலக்கும் எனக்கு மிகவும் பிடித்த சில படங்கள்..

காதலா காதலா:

சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கத்தில் கிரேசி மோகன் கதை வசனத்தில் உருவான படம்தான் ‘காதலா காதலா’. கமல்ஹாசன், பிரபுதேவா, சௌந்தர்யா, ரம்பா, எம்எஸ் விஸ்வநாதன், வடிவேலு, நாகேஷ், சோ என நகைச்சுவைப் பட்டாளமே நடித்திருந்தது.

ஜூனியர் விகடனந்தாவாக கிரேசி மோகன் நடித்திருந்தார். படத்தில் காமெடிகள் எந்தவொரு காட்சியையும் மிச்சம் வைக்காமல் உச்சம் பெற்றிருந்தது. இப்படம் 1998 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியானது.

அபூர்வ சகோதரர்கள்:

சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கத்தில் கமல்ஹாசன், ஜெய்சங்கர், நாகேஷ், கௌதமி, ரூபிணி, மனோரமா மற்றும் பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் அபூர்வ சகோதரர்கள். இப்படத்தில் வசனங்களை கிரேசி மோகன் எழுதி இருந்தார்.

இது பழிவாங்கும் கதையாக இருந்தாலும் காமெடிக்கு குறைவிருக்காது. இப்படத்தில் அப்பு கதாபாத்திரத்தில் கமல் குள்ளமாக நடித்திருந்தது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

இப்படத்தில் கார் உரிமையாளராக கிரேசி மோகன் சில காட்சிகளில் நடித்திருந்தார்.

மைக்கேல் மதன காமராஜன்:

கமலஹாசன் நான்கு வேடங்களில் நடித்து, சிங்கீதம் சீனிவாச ராவ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் மைக்கேல் மதன காமராஜன். இப்படத்தின் வசனங்களை கிரேசி மோகன் எழுதியிருந்தார்.

இப்படத்தில் கமல்ஹாசனுக்கு ஜோடியாக ஊர்வசி, ரூபினி, குஷ்பு ஆகியோர் நடித்திருந்தனர். இப்படத்தில் ப்ராவிஷன்ஸ் ஸ்டோர் உரிமையாளராக கிரேசி மோகன் நடித்திருந்தார். படத்தில் வரும் “திருப்பு” காமெடி இன்றளவும் பிரபலம்.

அவ்வை சண்முகி:

கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் கமல்ஹாசன், மீனா, நாகேஷ், ஜெமினி கணேசன், டெல்லி கணேஷ், நாசர் ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் அவ்வை சண்முகி. இதில் பெண் வேடமிட்டு கமலஹாசன் நடித்த அவ்வை சண்முகி கதாபாத்திரம் ரசிகர்களை மிகவும் கவர்ந்தது.

இப்படத்தின் கதை மற்றும் வசனத்தை கிரேசி மோகன் எழுதியிருந்தார். படம் முழுக்க காட்சிக்குக் காட்சி நகைச்சுவை சரவெடி தான்.

பஞ்ச தந்திரம்:

கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்ரன், ரம்யா கிருஷ்ணன், ஜெயராம், சேது ரமேஷ் அரவிந்த், நாகேஷ் மற்றும் பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் பஞ்ச தந்திரம்.

நண்பர்கள் பெங்களூர் செல்லும்போது அங்கு ஒரு பிரச்சனையில் மாட்டிக்கொண்டு அதிலிருந்து எப்படி மீண்டு வருகிறார்கள் என்பதை நகைச்சுவையாக சொன்ன படம் பஞ்ச தந்திரம்.

இப்படத்தின் வசனங்களையும் கிரேசி மோகன் எழுதி இருந்தார். படத்தில் வரும் “முன்னாடி பின்னாடி” காமெடி இப்போது பார்த்தாலும் சிரிக்காமல் இருக்க முடியாது.

வசூல்ராஜா எம்பிபிஎஸ்:

சரண் இயக்கத்தில் கமல்ஹாசன், பிரபு, சினேகா, பிரகாஷ்ராஜ், நாகேஷ் மற்றும் பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் வசூல் ராஜா எம்பிபிஎஸ். இப்படத்தின் வசனகர்த்தா கிரேஸி மோகன்.

அதுமட்டுமல்லாமல் இப்படத்தில் பேராசிரியர் மார்க்கபந்துவாக கிரேசி மோகன் நடித்திருந்தார். கமலுக்கு பதிலாக இவர் பரிட்சை எழுதுவது என பல காட்சிகள் ரசிகர்களை ஈர்த்தது.

பிரகாஷ் ராஜ் & கிரேஸி மோகன்  இடையேயான நகைச்சுவைக் காட்சிகள் அபாரமாக இருக்கும்.

உதாரணங்கள் சில:

“சூட்கேஸ் தெரியும்.. அது என்ன பூட்டகேஸ்”?

“ஒரு வேளை பூட்டு போட்ட சூட்கேஸா இருக்குமோ”?  

பம்மல் கே. சம்பந்தம்

2002-ம் ஆண்டு வெளியான பம்மல் கே.சம்பந்தம் திரைப்படம், மௌலி இயக்கத்தில் கிரேஸி மோகன் எழுதியது. இப்படத்தில் சிம்ரன், அப்பாஸ் மற்றும் சினேகா ஆகியோருடன் கமல்ஹாசன் முக்கிய வேடத்தில்.

மீடியா ட்ரீம்ஸின் கீழ் பி.எல்.தேனப்பன் தயாரித்த இப்படத்திற்கு தேவா இசையமைத்துள்ளார். கமல் கிரேஸி மோகன் சேர்ந்தாலே காமெடிக்கு பஞ்சம் இருக்காது, கூட மௌலியும் இணைந்தால்..?  நூறு சதவீதம் சிரிப்பு உறுதி.

– நன்றி: முகநூல் பதிவு

You might also like