புத்தகங்களின் வாசனை சூழ வளர்ந்தவன் நான். அது என் அப்பாவின் வாசனையும் கூட. அவர் (சாமி பழனியப்பன்) பாரதிதாசன் கவிதா மண்டலத்தைச் சேர்ந்த கவிஞர். அதனாலேயே எனக்கு அவர் பாரதி என்று பெயர் சூட்டினார்.
என் சின்னஞ்சிறு வயதில் அவர் ‘வாடா’ என்று என்னை அழைத்துக் கொண்டு போனால், அந்தப் பாதைகள் போய் சேர்கிற இடம் அச்சகம், பதிப்பகம், நூலகம், பழைய புத்தகக் கடை இப்படித்தான் இருக்கும். அவர் ஒரு புத்தகம் வாங்கினால் எனக்கொன்றும் வாங்கித் தருவார்.
ஒருநாள் அப்பாவின் விரல் பிடித்துக்கொண்டே நடக்கும்போது, “கவிதை என்றால் என்ன?” என்று கேட்டேன். அவர் ஒன்றுமே பேசவில்லை. அந்நேரம் மிகுந்த மகிழ்ச்சியோடு அவர் என்னைப் பார்த்த முகம் கவிதைமயமானது.
வீட்டுக்கு வந்ததும் பாரதியார், பாரதிதாசன் கவிதைகளை எடுத்துத் தந்து “படி” என்றார்.
அந்தப் ‘படி’கள்தாம் என்னை ஷெல்லி, கீட்ஸ், விட்மன், மாயகோவ்ஸ்கி, அன்னா அக்மதோவா, ஷார்ல் போத்லெர், பாப்லோ நெரூதா, ழாக் பிரெவர் இப்படித் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் உலகக் கவிஞர்களை எல்லாம் நான் காணும்படி என்னைக் கொண்டுவந்து சேர்த்திருக்கிறது.
கவிதைகளுக்குப் பிறகு நான் விரும்பி வாசிப்பது வாழ்க்கை வரலாறுகளைத்தான். அந்த ருசியை எனக்கு முதலில் ஊட்டியது கண்ணதாசனின் ‘வனவாசம்.’
– நன்றி: இந்துதமிழ் திசை
#கவிஞர்பழநிபாரதி #பாரதிதாசன் #கண்ணதாசன் #வனவாசம் #பாரதியார் #kavignarpalanibharathi #bharathidasan #kannadhasan #vanavaasam