சினிமவில் எழுத்தாளர்கள், கவிஞர்கள் பொதுவெளியில் ஃபேமஸ் ஆக வேண்டும் என்றால் அவர்களது வரிகள் அந்த அளவு ஆழமாக மக்களால் ரசிக்கப்பட வேண்டும். வைரமுத்து, வாலி, கார்க்கி, தாமரை, நா.முத்துக்குமார் போன்றவர்களுக்கு ஈடாகத் தமிழ் சினிமாவில் ஒரு கவிஞர் இருக்கிறார் என்றால் அது சினேகன்.
’பாண்டவர் பூமி’ படத்தில் இடம்பெற்ற ”அவரவர் வாழ்க்கையில்”, “தோழா, தோழா” போன்ற பாடல்கள் மூலம் பட்டித் தொட்டி எங்கும் பிரபலமானார் சினேகன்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் அவரது பாடல்களும் பிரலமடைந்தன. பிறகு நடிகராகவும் களத்தில் இறங்கினார் சினேகன்.
உலக நாயகன் கமலஹாசன் மீது தீராப் பற்று கொண்டிருக்கும் இவர், கமல் கட்சி தொடங்கியபோது, அதில் தன்னையும் இணைத்துக் கொண்டு தேர்தலிலும் போட்டியிட்டார்.
திரைப்படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வந்தவர், தற்போது ஒரு சீரியலில் கதாநாயகனாக நடித்து வருவதாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையில் கடந்த 2021-ம் ஆண்டு தனது 8 வருட காதலியான சின்னத்திரை நடிகை கன்னிகாவை திருமணம் செய்து கொண்டார் சினேகன்.
உலக நாயகன் கமல்ஹாசன் தாலி எடுத்துக் கொடுக்க இவர்களது திருமணம் கோலாகலமாக நடைபெற்றது. தொடர்ந்து இருவரும் சேர்ந்து சோசியல் மீடியாவில் தங்களது காதலைப் பகிர்ந்து கொள்ளும் வீடியோக்கள் வைரலாகி வந்தன.
3 வருடங்களுக்கு பிறகு இந்தத் தம்பதிக்கு கடந்த ஜனவரி மாதம் 25-ம் தேதி இரட்டைப் பெண் குழந்தைகள் பிறந்தன.
இந்தக் குழந்தைகளுக்கு கமல்ஹாசன் காதல், கவிதை என பெயர் சூட்டியிருந்தார். சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் கன்னிகா – சினேகன் தம்பதி குழந்தைகளின் முகங்களைப் பொதுவெளியில் மறைத்து வந்தனர்.
இந்த நிலையில், 4 மாதங்கள் கழித்து குடும்பத்துடன் ஃபோட்டோ ஷூட் நடத்தி, அதன் மூலம் குழந்தைகளை ரசிகர்களுக்கு காண்பித்துள்ளனர் இந்தத் தம்பதி.
சமூக வலைதளங்களில் குழந்தைகளுடனான புகைப்படங்களைப் பதிவிட்டுள்ள சினேகன் – கன்னிகா தம்பதி,
”எங்கள் இரட்டை மகள்கள் காதல் கன்னிகா சினேகன், கவிதை கன்னிகா சினேகன் இருவரையும் உங்களுக்கு அறிமுகம் செய்வதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறோம்.
எங்களை நேசிக்கும் உங்கள் அன்பு… எங்கள் மகள்களையும் நேசிக்கட்டும்…” எனப் பதிவிட்டுள்ளனர்.
இந்தப் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.