கல்வியே மனிதனை மாமனிதனாக்கும்!

நூல் அறிமுகம்:

“ஒரு குழந்தை, ஒரு பேனா, ஒரு புத்தகம் போதும் இந்த உலகை மாற்ற” என்றவர் மலாலா.

மலாலா என்பது இன்றொரு மந்திரச் சொல்லாக மாறிவிட்டது. குறிப்பாக, உலகம் முழுவதிலுமுள்ள பல லட்சம் மாணவர்களுக்கு மலாலா ஓர் உத்வேகமூட்டும் முன்னுதாரணமாக, நம்பிக்கை நட்சத்திரமாக, வலிமையான வழிகாட்டியாக மாறியிருக்கிறார்.

வரலாற்றில் இப்படிப்பட்ட அதிசயங்கள் அபூர்வமாகத்தான் நிகழும்.

பலரும் நினைப்பதைப்போல் தாலிபனால் சுடப்பட்டதாலோ, மரணத்தோடு போராடி மீண்டு வந்ததாலோ மலாலாவுக்கு வரலாற்றில் இந்த இடம் கிடைத்துவிடவில்லை.

நோபல் அமைதிப் பரிசு கிடைத்ததால் மட்டும் அவர் மீதான நம் மதிப்பு கூடிவிடவில்லை. இவையெல்லாம் முக்கியம் என்றாலும் மலாலா தொட்டிருக்கும் உயரம் இதையெல்லாம்விட அதிகமானது.

பாகிஸ்தானில் கல்வி உரிமைகள் மறுக்கப்பட்ட பெண் குழந்தைகளுக்காக மலாலா விடுத்த போராட்ட அறைகூவல் அவரை உலக அரங்கின் மையத்தில் நிறுத்தியிருக்கிறது.

ஆப்கனிஸ்தான், பாகிஸ்தான் தொடங்கி உலக வல்லரசான அமெரிக்காவுக்கே ஒரு பெரும் சவாலாகத் திகழும் தாலிபனைத் தனியொரு நபராக மலாலா எதிர்கொண்டபோது அவர் ஓர் அதிசயப் பிறவியாக உலகத்தால் பார்க்கப்பட்டார்.

தாலிபனின் துப்பாக்கியைக் காட்டிலும் வலிமையான ஆயுதம் கல்வி; ஒவ்வொரு குழந்தைக்கும் இந்த ஆயுதம் கிடைத்தாகவேண்டும் என்று அவர் முழங்கியபோது உலகமே அவரைத் திரும்பிப் பார்த்தது.

ரஞ்சனி நாராயணின் இந்தப் புத்தகம் மலாலாவின் வாழ்வையும் அவர் இயங்கிய பின்னணியையும் எளிமையாக அறிமுகப் படுத்துகிறது.

இனி மலாலாவைப் பற்றி…

உலகமே வியந்து பார்க்கும் உன்னதத்தை 15 வயதிலேயே நிகழ்த்தி காட்டியவள்; இளம் வயதில் நோபல் பரிசு வென்ற இளகிய மனம் படைத்தவள்; கல்வி மட்டுமே ஒருவனை மனிதனாக்கும் என்பதை உலக அரங்கில் கர்ஜித்தவள் என அடுக்கிக்கொண்டே போகலாம் மலாலாவின் பெருமைகளை.

மலாலாவின் தந்தை ஜியாவுதீன் பள்ளி ஒன்றை பாகிஸ்தானின் ஸ்வாட் நகரத்தில் நடத்தி வந்தார். இதன் காரணமாகவே மலாலாவிற்கு இயல்பிலேயே படிப்பின் மீது ஆர்வம்.

குறிப்பிட்ட வயதை எட்டியவுடன் பெண்கள் பள்ளிக்கு செல்ல கூடாது என்ற தாலிபன்கள் கட்டுப்பாட்டை மீறி தன் மகள் மலாலாவை பள்ளிக்கு அனுப்புகிறார் தந்தை ஜியாவுதீன்.

மலாலாவை ஸ்வாட்டில் நடக்கும் தாலிபன்களின் அட்டூழியங்களை பிபிசியில் புனைப்பெயரில் பதிவிட வைக்கிறார். இந்நிகழ்வே மலாலாவை வெறுப்பதற்கான பொறியாக அமைந்தது தாலிபன்களுக்கு.

2012-ம் ஆண்டு அக்டோபர் 9-ம் நாள் ஆசையாக பள்ளிக்கு சென்று கொண்டிருந்த மலாலாவை துப்பாக்கி முனையில் வீழ்த்தினர் தாலிபன்கள்.

ஒன்றுக்கு மூன்று குண்டுகளை செலுத்திய பின்பும் மலாலாவின் உயிரை அவ்வளவு சுலபத்தில் எடுக்க முடியவில்லை அவர்களால்.

இத்துயரச் சம்பவத்திற்கு பிறகு பாகிஸ்தானின் ராணுவம் தாலிபன்களை விரட்டி விட்டது, என்று அறிக்கையை வெளியிட்டது. இதன் பின்னர் பெண்கள் பள்ளிக்கு செல்ல ஆரம்பித்தனர்.

மலாலா மேற்சிகிச்சைக்காக இங்கிலாந்து சென்றாள். அங்கேயே தங்கி தன் படிப்பினை தொடர்ந்தாள். அதோடு மட்டுமல்லாது பெண்களுக்கான கல்வி அவசியம் மட்டுமல்ல அத்தியாவசியம் என்பதை பல மேடைகளில் உரக்க கூறி வந்தாள்.

தன் உயிரையும் பொருட்படுத்தாது பெண் குழந்தைகளின் கல்விக்காகப் போராடும் மலாலாவின் இச்செயலைப் பாராட்டி 2015-ல் நோபல் பரிசு வழங்கப்பட்டது.

தாலிபன்களின் அராஜகம் ஒரு பக்கம் பாகிஸ்தான் ராணுவத்தின் கட்டுப்பாடு மறுபக்கம் என ஒரு நகரமே தாக்குதலுக்கு உள்ளானது.

மலாலாவிற்கு எதிரான குரல்கள் மதத்தை சார்ந்து அவளது தாய் மண்ணில் ஒலித்துக் கொண்டுதான் இருக்கின்றன.

இருப்பினும் கூட தன்னையொத்த சிறுமிகளின் கல்விக்காக போராடி தன் உயிரையும் விட துணிந்த மலாலா என்றுமே போற்றுதலுக்குரியவள்.

ஆண்டுகள் பல கடந்திடினும் மலாலாவின் வீர தீர செயலைப் பாராட்டாமல் இருக்க முடியாது. எழுத்தாளர் ரஞ்சனி நாராயணன் எழுதிய “மலாலா ஆயுத எழுத்து” என்ற இப்புத்தகம் மலாலாவின் வாழ்க்கை வரலாறை தீர்க்கமாக விவரிக்கிறது.

  • தரணி

நூல்: மலாலா ஆயுத எழுத்து!
ஆசிரியர்: ரஞ்சனி நாராயணன்
கிண்டில் பதிப்பகம்

பக்கங்கள்: 104

You might also like