மே – 21: இன்று சர்வதேச தேநீர் தினம்
காலையில் எழுந்தவுடன் முதலில் வயிற்றுக்குள் போகும் உணவு என்றால் டீ, காபி தான். பொதுவாக காபியை விடவும் டீக்குத்தான் இங்கு மவுசு அதிகம். மக்கள் புழக்கத்தில் அதிகம் உச்சரிக்கப்படுவது காபி கடைகளை விடவும் டீ கடை தான் அதிகம் பேசப்படுகிறது.
மழைக்காலம், கோடை காலம் என்றாலும் ஆண்கள் அதிகம் இருக்கும் கடை என்றால் அது டீ கடையாகத்தான் இருக்கும்.
அலுவலக பணியாளர் என்றாலும் சரி, ஆட்டோ ஓட்டும் நபராக இருந்தாலும் சரி ‘காலை உணவுக்கும் மதிய உணவுக்கும் இடைவெளி டீ டைம் என்றுதான் சொல்லப்படுகிறது.
அது போலவே மாலை 4 மணி ஆகிவிட்டால் சோர்வைக் குறைப்பதற்கு பெரும்பாலான நபர்களின் தேர்வு தேநீர்.
வேலை நேரத்தில் நண்பர்களுடன் ஜாலியாக ஒரு டீ, மாலை வேளையில் ஒரு டீ என பலரது வாழ்க்கையில் தவிர்க்க முடியாத ஒரு உணவுப் பொருளாக மாறிவிட்டது இந்த தேநீர்.
நாம் புதிதாக சந்திக்கும் விரும்பும் நபரை டீ கடைகளில் தான் பெரும்பாலான முதல் சந்திப்பு நடைபெறும்.
அந்த அளவுக்கு தேநீர் கடை முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது.
அப்படிப்பட்ட இந்த தேநீரின் சிறப்பை பெருமைப்படுத்தும் விதமாக மே 21-ம் தேதி சர்வதேச தேநீர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
தேநீரின் பிறப்பிடம் என்று பார்த்தால் தென்கிழக்கு ஆசியா என்கின்றனர். ஆனால் பெரும்பாலும் இந்தியா, பர்மா, சீனாவில் தான் தேயிலை அதிகம் பயிர்விக்கப்படுகிறது.
உலக அளவில் அதிக அளவு தேயிலைகளை உற்பத்தி செய்யும் நாடுகளில் இந்தியா 2ம் இடத்தில் இருக்கிறது.
மேலும் ஜப்பான், கொரியா, தாய்வான் ஆகிய நாடுகளில் ஒரு பாரம்பரிய சடங்காகவும், கலையாகவும் தேநீர் சடங்கு கொண்டாடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
உலக அளவில் தண்ணீருக்கு அடுத்தபடியாக உட்கொள்ளும் பானங்களில் தேநீர் தான் அதிகம் என்று சில ஆய்வுகள் கூறுகின்றன.
பொதுவாக தேநீரில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் அதிகம் இருப்பதால் தோல் சுருங்காமல் இது நம்மை இளமையாக வைத்திருக்க உதவுகிறது.
மேலும் செரிமானத்திற்கும் கார்டியோவாஸ்குலர் என்ற நோய் ஏற்படாமல் தடுப்பதற்கும் இந்த தேநீர் உதவுகிறது.
தேநீர் வகைகள்:
தேநீரில் பல வகை இருந்தாலும் ஒவ்வொன்றுக்கும் ஒரு சுவை இருக்கும். கருந்தேநீர், ஊலாங்கு தேநீர், பசுந்தேநீர், வெண் தேநீர், புவார் தேநீர், மூலிகைத் தேநீர், பீச் தேநீர், மிளகுக்கீரை தேநீர், செம்பருத்தி தேநீர், புவார் தேநீர், கிரீன் டீ, ரூயிபோஸ் தேநீர், டார்ஜிலிங் தேநீர் இப்படி பட்டியல் அடுக்கிக்கொண்டே போகலாம்.
உலக அளவில் பிரபலமான உயர்ந்த விலை டீத்தூள்கள்:
இதில் முதலிடத்தில் இருப்பது டாஹாங்பாவ்.
ஒரு கிலோ 1.2 மில்லியன் ஆகும். இது சீனாவின் தேசிய பொக்கிஷமாக பார்க்கப்படுகிறது.
உலகிலேயே மிகவும் விலை உயர்ந்த டீ என்றால் அது இதுதான்.
ஆய்வின்படி உலக அளவில் இந்த டீயின் தாய் மரங்கள் மொத்தம் 6 மரங்கள் தான் உள்ளது. 2005-ம் ஆண்டில் 20 கிராம் டீ தூள் 30,000 டாலர்களுக்கு ஏலம் போனதாக கூறுகின்றனர்.
பாண்டா டங்க்: இந்த டீயின் செடியை பாண்டாவின் கழிவை உரமாகப் பயன்படுத்தி வளர்கின்றனர்.
இந்தக் கழிவில் நிறைய ஆரோக்கியமான நன்மைகளும், ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் உள்ளதால் மக்கள் இதை விரும்பி வாங்குகின்றனர். இதன் விலை 1 கிலோ 70,000 டாலராகும் என்பது குறிப்பிடத்தக்கது.
எல்லோ கோல்டு டீ தூள்: மிக அரிதான டீத்தூள் என்பதால் இதன் விலை சற்று அதிகம் தான். இந்த டீ தூள் ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே அறுவடை செய்யப்படுவதால் இதை தங்க கத்தரிகள் கொண்டு வெட்டப்படுகிறது.
இந்தத் தேயிலை இலைகளை நேரடியாக சூரிய ஒளியில் உலர்த்தி எடுப்படுகிறது.
தேயிலை இலைகளை உலர்த்திய பின் 24 கேரட் சாப்பிடக்கூடிய தங்கத் துகள்களைத் தூவுவார்கள்.
இதன் விலை 1 கிலோ 7800 டாலர்களாகும். இந்த வகையான டீ தூள்கள் சிங்கப்பூரில் மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது. இந்த டீயை குடிப்பதால் தோல் சுருக்கம் ஏற்படுவதை தவிர்க்க முடியும் என்கின்றனர்.
சில்வர் டிப் இம்பீரியல்: இது டார்ஜிலிங்கில் மக்காய்பாரி டீ எஸ்டேட்டில் விலையக்கூடியது. அதை முழு நிலவு தோன்றும் நாளில் தான் அறுவடை செய்கின்றனர். 2014 ஆம் ஆண்டில் இந்த டீத்தூளின் விலை 1 கிலோ 1850 டாலர்கள் ஆகும். இதுதான் இந்தியாவில் அதிக விலை உயர்ந்த டீ தூள் இதுதான்.
எப்போது எல்லாம் தேநீர் குடிக்க கூடாது?
ஒரு நாளைக்கு 2 கப் தேநீர் ஆரோக்கியமானது என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
சமீபத்தில் இந்திய மருத்துவ ஆய்வுக் கழகத்தின் கூற்றுப்படி உணவிற்கு 1 மணி நேரத்திற்கு முன்பும், பின்பும் தேநீர் குடிக்கக் கூடாது என மருத்துவர்கள் என அறிவுறுத்தியுள்ளனர்.
எனவே சர்வதேச தேநீர் தினமான இன்று முதல் நமக்கு பிடித்த தேநீராக இருந்தாலும் அதை எப்போது சாப்பிட்டால் ஆரோக்கியம் கிடைக்கும் என தெரிந்து கொண்டு அளவுடன் எடுப்போம் என்று உறுதிமொழி எடுத்துக் கொள்வோம்.
– யாழினி சோமு