நிலம் பெயர்ந்தாலும் சொன்ன சொல் தவறாதே!

சங்கப் புலவர்கள் பொன்னுரை – 14

 ******

“நிலம்பெயரினும் நின்சொற் பெயரல்”

        – புறநானூறு, பாடல் எண்-3, அடி 14.

பாடியவர்: இரும்பிடர்த் தலையார்
பாடப்பட்டோர்: பாண்டியன் கருங்கை ஒள்வாள் பெரும்பெயர் வழுதி
திணை : பாடாண்
துறை : செவியறிவுறூஉ; வாழ்த்தியலும் ஆம்

நில நடுக்கம் ஏற்பட்டு, இடம் பெயர்ந்தாலும் நீ சொன்ன சொல்லில் இருந்து தவறிச் செல்லாதே என்கிறார் புலவர்.

இது மன்னனுக்கான அறிவுரை என்றாலும் அனைத்து மக்களுக்குமான அறிவுரையுமாகும்.

இப்பாடல் மூலம் நாம் அறிய வரும் சொற்களையும் பார்ப்போம்.

இப்பாடலின் முதல் அடி “உவவுமதி யுருவின் ஓங்கல் வெண்குடை” என்பதாகும்.

அஃதாவது முழு நிலவின் வட்ட வடிவம் போன்ற உயர்ந்த வெண்கொற்றக் குடை என்கிறார்.

முதற் சொல்லாகிய உவவு மதி என்பது முழுநிலா நாளைக் குறிப்பிடுகிறது. உவவு, உவா என்பன நிலவைக் குறிக்கும். வெள்ளுவா என்பது இன்றைக்குப் பெளர்ணமி எனப்படுகிறது. காருவா என்பது இன்றைக்கு அமாவாசையைக் குறிக்கிறது.

உவவு மதி என்றாலும் உவா மதி என்றாலும் நிறை நிலாவையே குறிக்கின்றன. திங்கள் சுழற்சியை அடிப்படையாகக் கொண்டுதான் மாதக் கணக்கு மதிப்பிடப்படுகிறது. இவ்வாறு காலத்தை மதிப்பிட உதவுவதால் இதனை மதி என்றனர்.

மதியின் அடிப்படையிலான காலத்தை மாதம் என்றனர். இவ்வாறு தமிழ்ச் சொற்கள் அறிவியல் அடிப்படையிலேயே குறிக்கப் பெற்றுள்ளன.

சங்கக்காலம் தொகுக்கப்பட்ட காலத்திற்கு முற்பட்டவர்களே புலவரும் வேந்தரும். ஆதலின் இப்புலவரின் இயற்பெயர் அறிய இயலாமல் போய்விட்டது.

“பாண்டிய அரசன் கருங்கை ஒள்வாள் பெரும்பெயர் வழுதி யானையின் ‘இரும்பிடர்த் தலையிருந்து’ மருந்தில் கூற்றம் என்னும் நாட்டுப் பகுதியைக் கைப்பற்றினான்” என்று புலவர் தம் பாடலில் (அடி 11-12) குறிப்பிட்டுள்ளார்.

புலவரின் இயற்பெயர் தெரியாத நிலையில் புறநானூற்றைத் தொகுத்தவர் இப்பாடலில் வரும் இவ்வடிகளைக் கொண்டு இப்புலவருக்கு இரும்பிடர்த் தலையார் என்று பெயர் சூட்டியுள்ளார்.

சொன்ன சொல் தவறாமை என்பது பழந்தமிழ் வேந்தர்களின் அரிய பண்பாகும்.

 “நிலம் திறம் பெயரும் காலைஆயினும்,
கிளந்த சொல் நீ பொய்ப்பு அறியலையே”

            பதிற்றுப்பத்து – 63, அடிகள் 6 – 7.

என நிலம் பெயர்ந்தாலும் – நில நடுக்கம் ஏற்பட்டாலும் – சொன்ன சொல் பொய்க்கும் படி நடக்காதவன் எனச் சேரலாதன் அந்துவஞ் சேரல் பண்பைக் கபிலர் பாராட்டுகிறார்.

நிலப்பெயர்வு போன்று ஆட்சி மாறும் சூழல் ஏற்பட்டாலும் வாக்கு தவறாதே என்கிறார்.

இன்றைய அரசியலாளர்கள், பதவி போவதாக இருந்தாலோ, ஆட்சி இழக்கப்படும் சூழல் வந்தாலோ, செல்வ இழப்பிற்கு வாய்ப்பு இருந்தாலோ, சொன்னதையாவது காக்க வேண்டியதாவது அதையெல்லாம் தூக்கி எறி என்று உடனே தடம் புரளுவார்கள். ஆனால், சொன்ன சொல்லைக் காக்க வேண்டும் என்ற அறஉணர்வு அனைவருக்கும் வேண்டும்.

“அம்ம வாழி, தோழி!-காதலர்
நிலம் புடைபெயர்வதாயினும், கூறிய
சொல் புடைபெயர்தலோ இலரே”

             – மருங்கூர்ப் பட்டினத்துச் சேந்தன் குமரனார், நற்றிணை 289 : 1 – 3

இப்பாடலில் இந்நிலம் தன் நிலையினின்று பெயர்வதாயிருந்தாலும் உன் காதலர் தாம் சொன்ன சொல்லைத் தவறமாட்டார் என்கிறார் தோழி தலைவியிடம்.

எனவே, சொல்தவறாமை என்பது வேந்தர்களுக்கு மட்டுமல்ல, தனி மனிதருக்கும் உரிய பண்பே என உணரலாம்.

நிலம் பெயர்ந்தாலும் சொல் தவறாமை வேண்டும் என்பது குறித்துக் கூறுவதுபோல் புறநானூற்றில் (34 : 5 – 7) ஆலத்தூர் கிழார்,

“நிலம் புடை பெயர்வதாயினும் ஒருவன்
செய்தி கொன்றோர்க்கு உய்தி இல்”

என்கிறார்.

செய்தி கொன்றோர் என்றால் செய்ந்நன்றி மறத்தலையே அனைவரும் குறிப்பிடுகின்றனர்.

சொன்ன செய்தியைக் கொல்லுதல் என்பது சொன்ன வாக்குறுதியிலிருந்து தவறுதல் என்பதையும் குறிக்கும்.

நிலம் பெயர்தல் என்பது கண்டப்பெயர்ச்சி (continental drift) ஆகும். கண்டப்பெயர்ச்சி என்னும் கருதுகோள் முதன்முதலில் 1596ஆம் ஆண்டு அபிரகாம் ஓர்டிலீயசு (Abraham Ortelius) என்பவரால் முன்மொழியப்பட்டது.

தியோடர் கிறிசுடோஃபு (இ) லிலியென்டல் (Theodor Christoph Lilienthal,1756), அலெக்குசாண்டர் வான் அம்போல்ட்டு (1801, 1845), அந்தோனியோ சுனைடர்-பெல்லெக்குரினி (Antonio Snider-Pellegrini,1858) முதலியோரும் கண்டப் பெயர்ச்சி குறித்து ஆய்வுரை வழங்கியுள்ளனர்.

பின் 1912ஆம் ஆண்டு ஆல்பிரடு வேகனர் (Alfred Wegener) என்பவரால் கோட்பாடாக விளக்கப்பட்டது.

இக்கண்டப்பெயர்ச்சியைத்தான் 3000 ஆண்டுகளுக்கு முன்னரே சங்கப் புலவர்கள் சங்க இலக்கியங்களில் நிலம் புடை பெயர்தல் எனக் குறிப்பிட்டுள்ளனர்.

இத்தகைய இயற்கை நிகழ்வைக் கொண்டு புலவர்கள் கூறியதுபோல், நாமும் நிலமே பெயர்ந்தாலும் சொன்ன சொல் தவறாமல் இருப்போம்!

– இலக்குவனார் திருவள்ளுவன்

You might also like