’விடுதலை’ முதல் மற்றும் இரண்டாம் பாகம், கருடன், கொட்டுக்காளி என்று கதை நாயகனாக மிரட்டி வரும் நடிகர் சூரி, ஒரு கதாசிரியராகவும் களம் இறங்கியிருக்கிற திரைப்படம் ‘மாமன்’.
‘விலங்கு’ வெப்சீரிஸ் தந்த இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜ் இதன் திரைக்கதை வசனம் எழுதி இயக்கியிருக்கிறார். ஐஸ்வர்யா லெட்சுமி, ராஜ்கிரண், சுவாசிகா, பாபா பாஸ்கர், பாலசரவணன், விஜி சந்திரசேகர், கீதா கைலாசம், நிகிலா சங்கர், ஜெயபிரகாஷ் உள்ளிட்ட பலர் இதில் நடித்துள்ளனர். ஹ்ருதயம், மதுர மனோகர மோஹம் உள்ளிட்ட மலையாளப் படங்கள், குஷி, ஹை நானா உள்ளிட்ட தெலுங்கு படங்களுக்கு இசையமைத்த ஹேஷம் அப்துல் வஹாப் இப்படத்தின் வழியே தமிழில் அறிமுகமாகியிருக்கிறார்.
‘இது ஒரு வழக்கமான சென்டிமெண்ட் மெலோட்ராமாவாக இருக்கும்’ என்ற எண்ணத்தை ஏற்படுத்தியது ‘மாமன்’ ட்ரெய்லர். இப்படம் அப்படிப்பட்ட திரையனுபவத்தைத் தான் தருகிறதா?
பாசத்தில் திளைக்கும் மாமன்!
‘தாயை விட ஒருபடி மேலானது தாய்மாமன் உறவு’ என்று சிலாகிப்பவர்கள் மனம் நெகிழும்படியான காட்சிகளைக் கொண்டது இப்படம். அதுவே இதன் யுஎஸ்பி. அப்படியானால், இதன் கதை எப்படிப்பட்டதாக இருக்கும் என்பதை நாமாக யூகித்துக் கொள்ளலாம்.
முப்பதைத் தொடுகிற ஒரு இளைஞன். அவரது மூத்த சகோதரிக்குத் திருமணமாகிப் பத்தாண்டுகளுக்கும் மேலாகக் குழந்தை பாக்கியம் இல்லை. அதனால் குடும்ப நிகழ்ச்சிகளில் அப்பெண் அவமானங்களுக்கு உள்ளாகிறார்.
ஒருநாள் அப்பெண் கருவுறுகிறார். கணவரைக் காட்டிலும், அப்பெண்ணின் சகோதரர் மிகுந்த மகிழ்ச்சியடைகிறார். அதனைப் பலமாக வெளியே காட்டுகிறார்.
சகோதரியின் வயிற்றில் கரு வளர்வதில் தொடங்கி அக்குழந்தையை ஈன்றெடுத்த பின்னும் கண்ணும் கருத்துமாகப் பார்த்து வருகிறார் அந்த இளைஞன். சகோதரி மற்றும் அவரது குழந்தை மீது பாசத்தைப் பெருமழை எனக் கொட்டுகிற அந்த நபரைக் கண்டு, பழகி ஈர்ப்புக்கு உள்ளாகிறார் ஒரு பெண் மருத்துவர்.
அந்த இளைஞரும் மருத்துவரும் காதல் கொள்கின்றனர். ஐந்தாண்டு காலக் காதலுக்குப் பிறகு, ஒரு நன்னாளில் இருவரும் திருமணம் செய்து கொள்கின்றனர்.
அதுநாள்வரை காலையில் எழுவது தொடங்கி இரவு தூங்குவது வரை தாய்மாமனுடன் நேரம் செலவழித்து வருகிறான் அவரது சகோதரி மகன். அப்படிப்பட்ட குழந்தை, புதிதாக அத்தை என்ற உறவின் முக்கியத்துவத்தை எப்படி உணரும்?
திருமணத்தின்போது மாப்பிள்ளை, மணப்பெண்ணுக்கு நடுவே உட்கார்ந்து கொள்கிற அந்தச் சிறுவன், முதலிரவின் போதும் அதையே செய்கிறார். அடுத்தடுத்த நாட்களும் இதுவே தொடர்கதையாகிறது.
‘இது ஒரு பிரச்சனையாகப் பூதாகரமெடுக்கும்’ என்று அந்த இளைஞன், அவரது மனைவி மட்டுமல்லாமல் அவர்கள் சம்பந்தப்பட்ட அனைவருக்குமே தெரியும். இருந்தாலும், அவர்களால் அந்தச் சிறுவனைச் சமாதானப்படுத்த முடிவதில்லை.
காரணம், பத்தாண்டு காலக் காத்திருப்புக்குப் பிறகு பிறந்த குழந்தை என்பதால் அவர்கள் கொட்டிய அதீத பாசம்.
ஒருகட்டத்தில் மாமன் – மருமகன் உறவு, அந்த புதுமணத் தம்பதியின் இல்லற வாழ்வை கூறு போடுகிற நிலைமையை ஏற்படுத்துகிறது. அதனை அந்தச் சிறுவன் உணராவிட்டாலும் அந்த இளைஞர் உணர்ந்தாரா? அவர் தனது மனைவியோடும் இதர உறவுகளோடும் மகிழ்ச்சிகரமான வாழ்வை மேற்கொள்ள முடிந்ததா என்று சொல்கிறது இப்படத்தின் மீதி.
மொத்தப்படமும் ‘பாசத்தில் திளைக்கிற ஒரு மாமனை’க் காட்டுகிறது. அதேநேரத்தில் சகோதரன் – சகோதரி, மைத்துனன் – மச்சினன், அம்மா – பிள்ளை என்று பல உறவுகளின் அருமையைக் காட்டியிருக்கிறது. அதுவும் கண்ணில் நீர் ஊற்றெடுக்கும் அளவுக்கு ‘செண்டிமெண்ட்’டை வாரியிறைத்திருக்கிறது.
இப்படம் பார்க்கிற சிலருக்கு அது பலமாகவும், சிலருக்கு அதுவே பலவீனமாகவும் தென்படலாம்.
’சென்டிமெண்ட்’ மழை!
முதல் ப்ரேம் தொடங்கி இறுதியாக ‘எண்ட் கிரெடிட்’ வரை படம் முழுக்க சென்டிமெண்ட் மழை தான். அதற்கான கதையை நாயகன் சூரி தந்திருந்தாலும், திரைக்கதையாக்கத்தில் அதனை மட்டுமே பிரதானமாகச் சொல்ல முயன்றிருக்கிறார் இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜ். நாயகன் நாயகி காதலில் திளைக்கும்போது கூட அதனைத் துளியாவது கலந்துவிடுகிறார். அந்த ‘அப்ரோச்’தான் படம் ஒரே திசையில் ஒரே மீட்டரில் பயணிக்க உதவியிருக்கிறது.
வழக்கமாக, இது போன்ற கிராமத்து மாந்தர்களைக் காட்டுகிற திரைப்படங்களில் ‘யதார்த்தம்’ என்ற பெயரில் அந்த சுற்றுப்புறப் பின்னணி மண் வாசனையோடு காட்டப்படும். ஆனால், இப்படத்தில் அதனைத் தவிர்த்திருக்கிறார் இயக்குனர்.
உறவுகளின் மேன்மையைக் காட்ட, நடிப்புக்கலைஞர்களை ‘குளோஸ் அப்’பில் காட்டுவதே வழக்கம். அதற்காக, பளிச்சென்று பிரேம்கள் அமையும் வண்ணம் சினிமாத்தனம் மேலிடுகிற ‘திரைக்கதை ட்ரீட்மெண்ட்’டை கையில் எடுத்திருக்கிறார்.
கூடவே, ’ரிப்பீட் ஆடியன்ஸ்’ வருகைக்கும் அனைத்து தரப்பு ரசிகர்களின் ஈர்ப்புக்கும் அதுவே வகை செய்யும் என்று நினைத்திருக்கலாம்.
அதற்கேற்றவாறு பிரேம்களின் உள்ளடக்கத்தை அமைத்திருக்கிறது ஒளிப்பதிவாளர் தினேஷ் புருஷோத்தமன், கலை இயக்குனர் ஜி.துரைராஜ் கூட்டணி.
படத்தொகுப்பாளர் கணேஷ் சிவாவும் கூட, அந்த ‘செண்டிமெண்ட் டச்’சுக்கு இடமளித்து ஷாட்களை ‘கட்’ செய்திருக்கிறார். அதனால், பின்பாதிக் காட்சிகளில் ‘அதீதமாக’ உறவுகள் சிலாகிக்கப்படும்போது ரசிகர்கள் மனம் விட்டு அழ இடமிருக்கிறது.
இசையமைப்பாளர் ஹேஷம் அப்துல் வஹாப், கிட்டத்தட்ட ‘கருத்தம்மா’ காலத்து ஏ.ஆர்.ரஹ்மானை நினைவூட்டும்விதமாக இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். ’கள்ளாலியே கள்ளாலியே’, ‘அழகே அகரமே’, ‘தெய்வமகனே’, ’கண்ணாலே பேசுமா’, ‘விழுதே’ என அனைத்து பாடல்களுமே ஏற்கனவே கேட்ட உணர்வைத் தருகின்றன. ’வானம் கிழியுதே’ இப்படத்தின் டாப் மோஸ்ட் பாடல்.
அதேநேரத்தில், பின்னணி இசை வழியே நம்மை உருவக வைத்திருக்கிறார் ஹேஷம். அதற்கு ஹேட்ஸ் ஆப்..!
இந்தப் படத்தில் மகேஷ் மேத்யூ அமைத்த சண்டைக்காட்சி ஒன்று ரசிக்கும்படியாக இருக்கிறது. ஆனால், இக்கதைக்கு அது தேவையில்லாத ஆணி.
பாபா பாஸ்கரின் நடன வடிவமைப்பு கொண்டாட்டமான பாடல்கள் மட்டுமல்லாமல் டூயட் பாடலிலும் ஈர்க்கும்படியாக உள்ளது.
இது போக ஆடை வடிவமைப்பு, ஒப்பனை உள்ளிட்டவை யதார்த்தத்தையும் சினிமாத்தனத்தையும் சேர்த்து பிசைந்தாற்போல செம ‘பேலன்ஸ்’ ஆக வெளிப்பட்டிருக்கின்றன.
நடிப்பைப் பொறுத்தவரை, இப்படத்தில் பெரும்பட்டாளமே இருக்கிறது.
ஒரு பக்கம் சகோதரி பாசத்தில் தொடங்கி ‘மாமனாக’த் தன் மருமகனை மனதோடு அணைத்துக் கொள்கிறார் சூரி. அந்த காட்சிகள் தான் ‘சூப்பர்’ என்று நினைத்தால், நாயகி ஐஸ்வர்யா லெட்சுமி உடனான காதல் காட்சிகளில் ‘வாவ்’ சொல்ல வைக்கிறது அவர்களது ‘கெமிஸ்ட்ரி’.
ஐஸ்வர்யா லெட்சுமிக்கு இது நிச்சயம் வித்தியாசமான ‘படம்’. நடிப்பில் பெரிதாக வித்தியாசம் காட்ட முடியாவிட்டாலும் கூட, ஒரு பாத்திரமாக முழுக்க உருமாறியிருப்பது அருமை.
’லப்பர் பந்து’ படத்திற்குப் பிறகு, மீண்டும் ‘சிக்சர்’ அடித்திருக்கிறார் சுவாசிகா. கதையில் அவருக்கென்று இருக்கிற முக்கியத்துவத்தை உணர்ந்து ஓரிரு நொடிகள் தென்படுகிற ஷாட்களிலும் கூட அந்த கதாபாத்திரமாக மட்டுமே உணர வைக்கிற பாவனைகள். அப்பப்பா.. இன்னொரு நடிப்பு ராட்சசி கிடைத்துவிட்டார் என்று சொல்ல வைக்கிறார்.
சுவாசிகாவின் கணவராக வருகிற பாபா பாஸ்கருக்கு இதில் அடக்கி வாசிக்கிற வாய்ப்பு. அப்பாத்திரத்திற்கென்று தனி முத்திரை உண்டு. அதனைப் பயன்படுத்தியிருக்கிறார். ஆனால், இன்னும் கொஞ்சம் வாய்ப்பு தந்திருக்கலாம் எனும்படியாக வந்து போயிருக்கிறார்.
சிறுவனாக வருகிற பிரகீத் சிவன் அழுது அடம்பிடிக்கிற காட்சிகளில் எளிதாக மனதோடு ஒட்டிக் கொள்கிறார். மற்ற காட்சிகளில் ஓகே.
இவர்களோடு கீதா கைலாசம், ஜெயபிரகாஷ், சாயா தேவி, நிகிலா சங்கர், கலைவாணி பாஸ்கர் உட்படப் பலர் இதிலுண்டு. அவர்களுக்கும் முக்கியத்துவம் தருகிற வகையில் சில காட்சிகள் இருக்கின்றன.
பால சரவணன் வருகிற சில ஷாட்கள் நம்மை கிச்சுகிச்சு மூட்டுகின்றன. மிகச்சில இடங்களில் ‘பழையபடி’ சூரி அந்த வேலையைச் செய்திருக்கிறார்.
இவர்களோடு விமலும் ஒரு காட்சியில் வந்து போயிருக்கிறார். அவருக்கான அறிமுகம் சிறப்பு. ‘என்ன மாப்ளே, எங்க கூட சிரிச்சுகிட்டே இருந்த. இப்போ உன்னை சீரியசா ஆக்கிட்டாங்களே’ என்று அவர் பேசுகிற வசனம் அர்த்தம் புரிந்து சிலர் சிரிக்கின்றனர்.
அனைவரையும் தாண்டி இதில் ஈர்க்கும்படியாக இருக்கிறது ராஜ்கிரண் – விஜி சந்திரசேகர் பாத்திரப் படைப்பு. ‘கிளிஷே’வாக தெரிந்தபோதும், அவர்கள் இருவரும் வருகிற அத்தனை காட்சிகளும் சிரிக்க வைக்கின்றன, அழுகையை மழையெனப் பெய்ய வைக்கின்றன.
‘பசங்க’ பாணியில் இதில் ஜெயபிரகாஷ், சூரி உடன் பேசுவதாக ஒரு காட்சி உண்டு. இடைவேளைக்கு முன்னதாக வருகிற அக்காட்சி தான் இப்படத்தின் ஆதாரம்.
அதனைப் புரிந்துகொள்ள முடிந்தால், ‘மாமன்’ படம் நல்லதொரு ‘குடும்பப் படமாக’ தோற்றம் தரும். அவ்வாறில்லாதபோது, ‘இதெல்லாம் ஒரு பிரச்சனையா’ என்று இப்படத்தைக் கழுவி ஊற்றத் தோன்றும். அது அவரவர் விருப்பங்கள், வாழ்வனுபவங்கள் சார்ந்தது.
படம் முழுக்க ‘சென்டிமெண்ட்’ காட்சிகள் மாமழை என நம்மை நனைக்கின்றன. ’ரொம்ப ஓவர்’ என்று சொல்லுமளவுக்கு அது கையாளப்பட்டிருக்கிறது. அதைப் போலவே தென்படுகிற இன்னொரு குறை, மிக மெதுவாக நகர்கிற பின்பாதி. கொஞ்சம் அதற்கு ‘கத்திரி’ போட்டிருக்கலாம்.
அதேநேரத்தில், வெறுமனே ‘மாமன் – மருமகன்’ பாசத்தை மட்டுமல்லாமல் இதர உறவுகளின் அவசியத்தையும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது இப்படம். அதில் முக்கியமானது ஒரு கணவன் தனது மனைவியின் சுய விருப்பங்களுக்கு, மாட்சிமைகளுக்குத் தலை வணங்க வேண்டியதன் அவசியம்.
வெற்றிகரமாக இல்லற உறவைக் கையாள விரும்புகிற ஒரு ஆண் என்ன செய்ய வேண்டும் என்கிற ‘டெக்னிக்’கையும் இதில் சொல்லியிருக்கிறார் இயக்குனர். அது என்ன என்பதனை தியேட்டரில் பார்க்கையில் அறிந்து கொள்ளவும்.
என்னதான் அம்மா, சகோதரி, மகள், மனைவி என்று ஒரு பெண்ணின் பல வாழ்வு நிலைகளைச் சிலாகித்தாலும், படம் முழுக்கவே ஒரு ஆண் பார்வையிலேயே விரிகிறது. அது போன்ற குறைகளைத் தவிர்த்துவிட்டால், ‘சென்டிமெண்ட் சீன் பார்த்தா தாரை தாரையா கண்ணீர் விடுவேன்’ என்பவர்களுக்கு ஏற்றதொரு படமே ‘மாமன்’.
-
- உதயசங்கரன் பாடகலிங்கம்