தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. இதில் அரசு பள்ளிகள் ஆதி திராவிடர் நலத்துறை பள்ளிகள், வனத்துறை பள்ளிகள் உள்ளிட்ட அரசுத் துறைகளின் பள்ளிகளில் தேர்ச்சி விகிதத்தை தேர்வுத்துறை வெளியிட்டுள்ளது.
அதன்படி அரசு பள்ளிகள் – 91.35 சதவீதம்; ஆதி திராவிடர் நலத்துறை பள்ளிகள் – 90.52 சதவீதம் பழங்குடியினர் நலத்துறை பள்ளிகள் – 93.56 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.
மொத்தம் உள்ள 206 ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளில் 97 பள்ளிகளில் 100 சதவீதம் தேர்ச்சி அடைந்தனர். 12ம் வகுப்பு பொதுத்தேர்விலும் ஆதிதிராவிடர் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 96 சதவீதத்தை எட்டியுள்ளது.
கடந்த ஆண்டு ஆதிதிராவிடர் பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் 84.68 சதவீதமாக இருந்தது. அதேபோல், கடந்த ஆண்டு 92.45 சதவீதமாக இருந்த பழங்குடியினர் நலப்பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் இந்த ஆண்டு 93.56 சதவீதமாக அதிகரித்துள்ளது.
இதற்கிடையே, இந்த தேர்ச்சி விகித உயர்வு மகிழ்ச்சியளிப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், “ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களின் தேர்ச்சி இதுவரை இல்லாத உச்சத்தை அடைந்துள்ளது என்றும் இது, கல்வியில் சமூகநீதிக்கான வெற்றி என்றும் உயர்கல்வியிலும் இந்த உயரத்தை உறுதிசெய்து வருகிறோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.