சுட்டும் விழிச்சுடர்தான் கண்ணம்மா சூரிய சந்திரரோ?

இங்கிலாந்தின் டெவன்ஷயர் பகுதியின் கோமகளாக இருந்தவர் ஜார்ஜியானா.
ஒருமுறை அவர் ஒய்யாரமாக கோச் வண்டியில் இருந்து இறங்கிய நேரம். ஐயர்லாந்தைச் சேர்ந்த ஒரு துப்புரவுத் தொழிலாளி கோமகளின் அழகில் மயங்கிப்போய் இப்படிச் சொன்னாராம்.
‘ஓ மை லேடி! இது என்ன கண்கள்? உங்கள் கண்கள் மூலம் என் புகைக்குழாயை ஒருமுறை நான் பற்ற வைத்துக் கொள்ளலாமா?’
பிற்காலத்தில் கோமகள் ஜார்ஜியானா இந்த வர்ணனையைச் சொல்லிச் சொல்லி வியந்தாராம்.
‘கவிஞர்னு சொல்லிக்கிட்டு இதுவரை எத்தனையோ பேர் என்னோட கண்ணழகைப் புகழ்ந்திருக்காங்க. ஆனா, அவங்கள்ல யாரும் அந்த ஐரிஸ் துப்புரவுத் தொழிலாளியோட பக்கத்துலே கூட வர முடியாது’ என்றிருக்கிறார் அந்தப் பெண்மணி.
ஆங்கிலக் கவிஞர்களான வில்லியம் ஷேக்ஸ்பியர், டென்னிசன், வேர்ட்ஸ்வொர்த், சாசர், மேஸ்பீல்ட் இவர்கள் எல்லாம் பெண்களின் விழியழகை எந்த அளவுக்கு வர்ணித்திருக்கிறார்கள் தெரியாது.
ஆனால் நமது தமிழ்க் கவிஞர்கள் நிறையவே வர்ணித்திருக்கிறார்கள்.
‘குவளை மலர் இவளது கண்களைப் பார்த்தால் நாமெல்லாம் இவளுக்கு எப்படி ஈக்குவலாக முடியும் என்று படக்கென்று குனிந்து கொள்ளும்’ என்கிறார் நம் வள்ளுவப் பாட்டன்.
‘காணிற் குவளை கவிழ்ந்து நிலனோக்கும் மாணிழை கண்ஒவ்வேம் என்று’
‘நீல மலர் எது? பெண்களின் விழி என்று தெரியாமல் வண்டுகள் திண்டாடும் ஊராம் பூம்புகார்’ இப்படிச் சொல்கிறார் சிலப்பதிகாரம் எழுதிய இளங்கோவடிகள்.
‘மாதரார் கண்ணும் மதிநிழல் நீர் இணை கொண்டு மலர்ந்த நீலப்
போதும் அறியாது வண்டு ஊசலாடும் புகாரே எம்மூர்’
‘வாளார் மதிமுகத்து வாளோ வடுப்பிளவோ? தாளார் கழுநீரோ நீலமோ தாமரையோ
நீள் வேலோ அம்போ கயலோ நெடுங்கண்ணோ’ என்கிறது சீவக சிந்தாமணி.
‘குவளையின் எழிலும், வேலின் கொடுமையும் குழைத்துக் கூட்டி
திவளும் அஞ்சனம் என்ற ஓய்ந்த நஞ்சினைத் தெரியத் தீட்டித்
தவளஒண் மதியுள் வைத்த தண்மைசால் தடங்கண் நல்லார்’ என்கிறார் கம்பர்.
அப்புறம் ‘சுட்டும் விழிச்சுடர்தான் கண்ணம்மா சூரிய சந்திரரோ?’ என்று எழுதி, ‘நிலவு ஊறித் ததும்பும் விழிகளும்’ என்று எழுதிய மகாகவி பாரதி.
‘மையல் மிகத்தந்து மைவிழியால் என் நெஞ்சில்
தையல் இட்டதனால் தையல் எனப் பெயர் பெற்றாள்’ என்று எழுதிய கவியரசு கண்ணதாசன்.
‘ஒரு பெண்ணைப் பார்த்து நிலவைப் பார்த்தேன் நிலவில் குளிரில்லை. அவள் கண்ணைப் பார்த்து மலரைப் பார்த்தேன் மலரில் ஒளியில்லை’ என்று எழுதிய கவிஞர் வாலி.
டெவன்ஷயர் கோமகள் மேடம் ஜார்ஜியானா! அடுத்தமுறை நீங்கள் தமிழ் பெண்ணாக தமிழ்நாட்டில்தான் பிறக்கணும். சரியா?
– மோகன ரூபன் முகநூல் பதிவு 
#வாலி #கண்ணதாசன் #கம்பர் #இளங்கோவடிகள் #வள்ளுவர் #வில்லியம் #ஷேக்ஸ்பியர் #டென்னிசன் #வேர்ட்ஸ்வொர்த் #சாசர்  #vaali #kannadhasan #kambar #ilangovadigal #valluvar #willamshakesphere #tennyson #wordsworth #saasar #பாரதி #bharathi
You might also like