மனதை அறிவியலின் எல்லைக்குள் கொண்டு வந்த ஃபிராய்ட்!

தத்துவவாதிகள், ஆன்மிகவாதிகள், உளவியலாளர்களின் கட்டுப்பாட்டிலிருந்த ‘மனம்’ என்கிற ஆழ்கடலை அறிவியல் மருத்துவத்தின் எல்லைக்குள் கொண்டுவந்த பெருமை ஆஸ்திரியா நாட்டைச் சேர்ந்த மனநல மருத்துவரான, நவீன மனநல மருத்துவத்தின் தந்தை சிக்மண்ட் பிராய்டையே (Sigmund Freud) சாரும்.

உள்மனம் (unconscious mind) பற்றிய கோட்பாடுகள், அடக்குதலுக்கு எதிரான பாதுகாப்பு நெறிமுறை, மனநல பாதிப்புகளைப் பாதிக்கப்பட்டவருடன் பேசியே குணப்படுத்தும் உளப்பகுப்பாய்வுச் சிகிச்சைமுறை போன்றவற்றை நிறுவியவர் அவர்.

பாலுணர்வு விருப்பு என்பதை மனித வாழ்வின் முதன்மையான உந்து ஆற்றல் என அழுத்தமாகப் பதிவு செய்த பிராய்ட் குறித்த முக்கிய தகவல்கள்:

1856-ம் ஆண்டில், தற்போது செக் குடியரசில் இருக்கும், முன்னர் ஆஸ்திரியா பேரரசில் அடங்கியிருந்த பிரிபார் என்னும் இடத்தில் மே 6 அன்று சிக்மண்ட் பிராய்ட் பிறந்தார்.

இவருடைய அபார அறிவாற்றல் காரணமாக, வீட்டில் இருக்கும் மற்ற பிள்ளைகளைக் காட்டிலும் இவருக்குக் கூடுதல் சலுகைகள் பெற்றோரிடமிருந்து கிடைத்தன.

குடும்பம் வறுமையில் வாடியபோதும், சிக்மண்ட் பிராய்டுக்கு நல்ல, தரமான கல்வியைப் பெற்றோர் வழங்கினர்.

1857-ம் ஆண்டில் நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக, பிராய்டின் தந்தைக்கு வணிகத்தில் பெரிய இழப்பு ஏற்பட்டது. வறுமையின் காரணமாக அவர்களின் குடும்பம் வியன்னாவில் குடியேறியது.

அங்கும் பிராய்டை முன்னணிப் பள்ளியில் அவருடைய பெற்றோர் சேர்த்துப் படிக்க வைத்தனர். பள்ளியில் படிக்கும்போதே இத்தாலி, ஆங்கிலம், ஸ்பானிஷ், ஹீப்ரூ, லத்தீன், கிரேக்கம், பிரெஞ்சு உள்ளிட்ட பல மொழிகளைக் கற்றுத் தேர்ந்தார்.

பள்ளியில் சிறந்த மாணவராகத் திகழ்ந்த பிராய்ட், 1873-ல் பள்ளிக் கல்வியை வெற்றிகரமாக முடித்தார். பின்னர் வியன்னா பல்கலைக்கழகத்தில் சேர்ந்து மருத்துவம் படித்தார்.

1881-ம் ஆண்டு மருத்துவப் பட்டம் பெற்று வெளியே வந்த அவர் மனிதர்களின் உடலியல், நரம்பியல், மனவியல் பற்றிய ஆய்வில் தீவிரமாய் ஈடுபட்டார்.

நரம்பியல் பற்றிய ஆய்வுக்காக ஒரு உளவியல் மருத்துவமனையில் ஆய்வு மருத்துவராகவும் பணிபுரிந்துள்ளார்.

செரிப்ரல் பால்ஸி, அபேஸியா போன்ற மூளை பாதிப்புகள் தொடர்பாக வியன்னா பொது மருத்துவமனையில் 1895-ல் ஆராய்ச்சிகளை மேற்கொண்டார்.

அங்கே பேராசிரியராகவும் பணிபுரிந்தார். பின்னர் தனியாக மருத்துவமனை தொடங்கி, மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்குச் சிகிச்சை அளித்தார்.

சுயநினைவின்மை பற்றிய இவரது கோட்பாடுகள், மனநோய்கள் குறித்த விளக்கங்கள், நோயாளி – மருத்துவர் உரையாடல் சிகிச்சை முறை ஆகியவை மூலம் பிராய்ட் மிகவும் பிரபலமடைந்தார்.

ஹிஸ்டீரியா குறித்து ஆராய்ந்தார். அதன் வெளிப்பாடுகள், ஆழ்மனத் தொடர்புகளைக் கண்டறிந்து அவற்றை வகைப்படுத்தினார்.

கனவுகள் குறித்து ஆராய்ச்சி மேற்கொண்டவர், “கனவுகள் ஒழுங்கற்றவை, உள்மன ஆசைகளின் வெளிப்பாடே கனவு” என்று கண்டறிந்து கூறினார்.

உளவியல் என்பது மனம் குறித்த திட்டவட்டமான வரையறை அல்ல, அது தொடர்ந்து மாறும் இயல்புடையது என்று வரையறுத்த பிராய்ட், அதற்கு ‘உயிரோட்டமுள்ள உளவியல்’ (Dynamic Psychology) என்று பெயரிட்டார்.

மனிதர்களின் குண இயல்புகளில் ஏற்படும் மாற்றங்களை விளக்குவதே ‘உயிரோட்டமுள்ள உளவியல்’.

மனிதர்களின் ஆளுமைக்கும் அவர்களுடைய சிகிச்சைக்கும்கூட இதைப் பயன்படுத்த முடியும் என்பதைக் கண்டுபிடித்தது இவரது மிகப் பெரிய சாதனையாக இன்றும் கருதப்படுகிறது.

மனிதர்களின் மனத்தை உணர்வு மனம் (Conscious Mind), உணர்வுக்கு அப்பாற்பட்ட மனம் (Sub-Conscious Mind), தொலை நோக்கு மனம் என மூன்று பகுதிகளாக சிக்மண்ட் பிராய்டு பிரித்தார்.

கவிஞர்களுக்கும் சிந்தனையாளர்களுக்கும் உணர்வுக்கு அப்பாற்பட்ட மனம் அதிகம் உண்டு என்று இவர் கண்டறிந்து கூறினார்.

அதே போன்று மனிதர்களின் குண இயல்புகள், உணர்வால் உந்தப்படும் இயல்பு (Id), முனைப்பால் உந்தப்படும் இயல்பு (Ego), அகத்தால் உந்தப்படும் இயல்பு (Super Ego) ஆகிய மூன்று சூழ்நிலை உணர்வுகளாலேயே ஏற்படுகிறது என்றும் கூறினார்.

இந்த மூன்று குணநலன்களுக்கு இடையில் நடக்கும் போராட்டமே மனிதர்களின் ஆளுமையை நிர்மாணிக்கும் என்றும் கண்டறிந்து கூறினார்.

மனிதர்களின் விசித்திரமான செயல்பாடுகள். மனநோய்களின் பாதிப்புகள், பாலியல் பாகுபாடுகள், எவருக்கும் தெரியாமல் நடக்கும் மனக் கொந்தளிப்புகள், அடக்கப்படும் தீராத விருப்பங்களால் சமூகத்தை எதிர்கொள்வதில் மனிதர்களுக்கு ஏற்படும் தடுமாற்றங்கள், அவர்களின் கோபதாபங்கள், குழந்தை வயதிலேயே முளைத்தெழும் பாலியல் எண்ணங்கள், உந்துதல்கள் என மனித மனங்களின் உருமாற்றங்கள் தொடர்பான அவருடைய கோட்பாடுகள் இன்றும் கொண்டாடப்படுகின்றன.

தன்னுடைய ஆராய்ச்சிகளின் அடிப்படையிலும், தனது சிகிச்சை முறைகள் குறித்தும் ஏராளமான கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். பல புத்தகங்களையும் எழுதியுள்ளார்.

  • நன்றி : இந்து தமிழ் திசை
You might also like