ஒரு திரைப்படத்தில் நாயகப் பாத்திரம் வெற்றி பெற வேண்டுமென்று ரசிகர்கள் எப்போது விரும்புவார்கள்? அதில் ‘பவர்ஃபுல்’லான வில்லன் பாத்திரம் இடம்பெறும்போதுதான்.
அப்படி வில்லனுக்கும் ஹீரோவுக்கும் சமமான முக்கியத்துவம் கொண்ட அல்லது வில்லனுக்கு அதிக கவனத்தைத் தருகிற கதைகள் மிகக்குறைவு.
’அப்படியொரு திரைப்படத்தைப் பார்த்து எவ்வளவு நாளாயிற்று’ என்ற குறையைத் தீர்க்கிறது ‘துடரும்’ மலையாளத் திரைப்படம். இதில் நாயகன் நாயகியாக மோகன்லால், ஷோபனா நடித்துள்ளனர்.
வில்லனாக அறிமுகமாகியிருக்கிறார் பிரகாஷ் வர்மா. இதுபோக பினு பாப்பு, தாமஸ் மேத்யூ, பர்ஹான் பாசில், மணியன்பிள்ளா ராஜு, இர்ஷாத் அலி, ஆர்ஷா சாந்தினி பைஜு உட்படப் பலர் இதில் நடித்துள்ளனர்.
ஆபரேஷன் ஜாவா, சௌதி வெள்ளக்கா தந்த தருண் மூர்த்தி இப்படத்தை எழுதி இயக்கியிருக்கிறார். ஜேக்ஸ் பிஜோய் இசையமைத்திருக்கிறார்.
தற்போது தியேட்டர்களில் வெளியாகியிருக்கிற ‘துடரும்’ ரசிகர்களுக்கு ‘அலாதியான’ திரையனுபவத்தைத் தருகிறதா?
’துடரும்’ கதை!
சண்முகம் (மோகன்லால்) என்கிற பென்ஸ் ஒருகாலத்தில் ஸ்டண்ட் ஆர்ட்டிஸ்டாக இருந்தவர்.
ஒரு படப்பிடிப்பின்போது விபத்தில் சிக்கிவிடாமல் இவரைத் தடுத்து நிறுத்தும்போது நண்பர் ஒருவர் மரணிக்கிறார். தன்னைக் காப்பாற்றிய நண்பனின் மரணம், பிறகு அந்த தொழிலைச் செய்யவிடாமல் சண்முகத்தைத் தடுக்கிறது.
பிறகு, கேரளாவிலுள்ள ரான்னிக்கு இடம்பெயர்கிறது சண்முகம் குடும்பம். மகன் பவி (தாமஸ் மேத்யூ), மகள், மனைவி லலிதா (ஷோபனா) மகிழ்ச்சியாக வாழ்கிறார்.
ஸ்டண்ட் மாஸ்டர் பழனி (பாரதிராஜா) தந்த அம்பாசிடர் காரை உயிர் போலப் பாவிக்கிறார்.
அதனைக் கொண்டு உள்ளூரில் ‘ட்ரிப்’ அடித்து சம்பாதிப்பதே பென்ஸின் தினசரி வேலை.
இந்த நிலையில், மெக்கானிக் ஷெட்டில் வேலை செய்த மணியன் எனும் இளைஞர் செய்த குற்றத்திற்காக, பென்ஸின் காரை பறிமுதல் செய்து காவல்நிலையத்தில் நிறுத்தி வைக்கிறார் சப் இன்ஸ்பெக்டர் பென்னி (பினு பாப்பு).
பென்னியை மணியன் தாக்கிவிட்டுச் சென்றதே அதற்குக் காரணம்.
என்ன செய்தாலும், காரைத் திருப்பித் தர சம்மதிக்க மாட்டேன் என்று முரண்டு பிடிக்கிறார் பென்னி.
நண்பர்கள், தெரிந்த அரசியல்வாதிகள் துணையோடு பென்ஸ் சென்றபோதும் அவரது முடிவில் மாற்றம் நிகழவில்லை. இது அவரது மனைவி, மகன், மகளை வருத்தத்தில் ஆழ்த்துகிறது.
பென்னிக்கு லஞ்சம் கொடுத்து விஷயத்தை முடிக்கச் சிலர் திட்டமிடுகின்றனர். அந்த நேரம் பார்த்து, காவல்நிலையத்தில் இருக்கும் காரை பென்ஸ் கழுவிக் கொண்டிருக்க, பென்னிக்கு ஆத்திரம் தலைக்கேறுகிறது.
உடனே அவரைத் திட்டி, தாக்க முற்படுகிறார். அந்த நாட்களில் இன்ஸ்பெக்டர் அங்கு இல்லை.
அன்றிரவு காவல்நிலையத்திற்குச் செல்லும் பென்ஸ் இன்ஸ்பெக்டர் ஜார்ஜை (பிரகாஷ் வர்மா) முதன்முறையாகச் சந்திக்கிறார். தனது காரை தந்து உதவுமாறு கேட்கிறார்.
’எனக்கும் இந்த வழக்குக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை’ என்கிறார். அதனைக் கேட்டு, அவரும் சம்மதிக்கிறார். ஆனால், பென்னிக்கு அதில் உடன்பாடில்லை.
திடீரென்று கான்ஸ்டபிள் (பர்ஹான் பாசில்) தங்கை கல்யாணத்திற்குச் செல்வோம் என்று பென்னியுடன் பென்ஸ் காரில் ஏறுகிறார் ஜார்ஜ். வேறு வழியில்லாமல் அவர்களை ஏற்றிச் செல்கிறார் பென்ஸ்.
கல்யாண வீட்டில் விருந்து ஒரு பக்கம் நடக்க, ஜார்ஜும் பென்னியும் இன்னொரு பக்கம் மது அருந்துகின்றனர்.
சில மணி நேரம் கழித்து காட்டில் உள்ள கான்ஸ்டபிள் உறவினரின் பண்ணை வீட்டுக்குச் செல்லலாம் என்கிறார் ஜார்ஜ். அதையடுத்து, அருகிலுள்ள மலையை நோக்கி கார் பயணிக்கிறது.
நடுக்காட்டுக்குச் சென்றவுடன், வேறு வழியில் செல்லலாம் என்று பென்னியும் ஜார்ஜும் சொல்கின்றனர்.
அந்த வழியில் தனது அம்பாசிடர் கார் செல்லாது என்று மறுக்கிறார் பென்ஸ். அதையும் மீறி, வலுக்கட்டாயமாக அவரை வண்டியோட்டச் செல்கின்றனர்.
ஒருகட்டத்தில் ‘இதற்கு மேல் இந்த கார் நகராது’ என்று அவர்களோடு மல்லுக்கட்டுகிறார் பென்ஸ். அப்போது, ஜார்ஜ் தனது உண்மை முகம் காட்டுகிறார்.
‘கார் டிக்கியில ஒருத்தனோட பொணம் கிடக்குது. எங்களோடு மல்லுக்கட்டுனா அதோட இன்னொரு பொணமா உன்னையும் இங்க வீச வேண்டியிருக்கும்’ என்கிறார்.
இறந்து போன நபர் யார்? ஜார்ஜும் பென்னியும் அவரைக் கொல்ல வேண்டிய அவசியம் என்ன? இந்த விவகாரத்தில் பென்ஸை ஏன் அவர்கள் இழுத்து விட்டனர்? இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்கிறது ‘துடரும்’ படத்தின் மீதி.
அசத்தும் வில்லன்!
மோகன்லாலுக்கு இது 360வது திரைப்படம். ஆனாலும், ‘அவ்ளோ படம் நடிச்ச பெருமை எல்லாம் எனக்கில்ல’ என்பது போலப் படம் முழுக்க ஒரு பாத்திரமாக வந்து போயிருக்கிறார்.
ஒரு கிராமத்தானாக, சாதாரண மனிதனாக, சராசரி குடும்பஸ்தனாக இதில் நடித்திருக்கிறார்.
ஆனால், அதையும் மீறி அவரது வெறி பிடித்த ரசிகர்கள் ‘கூஸ்பம்ஸ்’ ஆகிற ’ஹீரோயிச மொமண்ட்’களும் இதிலுண்டு. அந்தத் தருணத்தில் திரையில் தீப்பற்றிய ‘எபெக்டை’ உருவாக்கியிருக்கிறார் மோகன்லால்.
ஷோபனா இதில் மோகன்லாலுக்கு ஜோடி. கொஞ்சம் ‘பாபநாசம்’ படத்தில் வருகிற கௌதமி போன்று அவரது ஒப்பனை ஒவ்வாமையைத் தருகிறது.
ஆனாலும், தனது நடிப்பால் அதனை வெகுசீக்கிரம் சரி செய்துவிடுகிறார்.
கிளைமேக்ஸ் பகுதியில் வில்லனைப் பார்க்கிற, கெஞ்சுகிற, முறைக்கிறபோது அவரது கண்கள் ஒளிவீசுகின்றன.
இந்தப் படத்தில் பவி பாத்திரத்தில் தாமஸ் மேத்யூ நடித்திருக்கிறார். அவரது சகோதரியாக வருபவர், நண்பனாக வரும் சங்கீத் பிரதாப்,
ரான்னி ஊரைச் சேர்ந்தவர்களாக வரும் மணியன்பிள்ளா ராஜு, இர்ஷாத் அலி மற்றும் ஆர்ஷா சாந்தினி பைஜு உள்ளிட்ட பலர் இதில் நடித்துள்ளனர்.
கான்ஸ்டபிளாக பர்ஹான் பாசில் நடித்திருக்கிறார். சப் இன்ஸ்பெக்டர் பாத்திரம் ஏற்ற பினு பாப்பு வில்லத்தனத்தில் அசத்தியிருக்கிறார்.
ஆனால், அவரைப் புறந்தள்ளிவிட்டு ‘வில்லன்னா இப்படி இருக்கணும்’ என்பதாகத் தோன்றியிருக்கிறார் பிரகாஷ் வர்மா. இதுதான் அவரது அறிமுகத் திரைப்படம்.
‘இதுநாள் வரை இப்படியொரு வில்லனை எப்படி மிஸ் செய்தது மலையாளத் திரையுலகம்’ என்று பார்த்தால், மனிதர் வெற்றிகரமான விளம்பரப்பட இயக்குநராக இருந்திருக்கிறார்.
வோடபோன் ஜுஜு உள்ளிட்ட பல விளம்பரங்களை உருவாக்கியிருக்கிறார்.
நிச்சயமாக, இந்த ஆண்டு பிரகாஷ் வர்மா பல விருதுகளை அள்ளுவது உறுதி.
ஷாஜி குமார் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார். புனைவென்பதை நினைவூட்டச் சில இடங்களில் க்ளோஸ் அப்பையும், எக்ஸ்ட்ரீம் லாங்ஷாட்டையும் பயன்படுத்தி இருப்பவர் பெரும்பாலான நேரங்களில் மிட்ஷாட்கள் வழியே நாமே திரைக்கதையில் காட்டும் உலகை நேரில் கண்ட உணர்வை ஏற்படுத்துகிறார்.
நிஷாத் யூசுஃப், ஷபீக் இப்படத்திற்கு படத்தொகுப்பு செய்திருக்கின்றனர். திரைக்கதையின் ஓட்டம் மெதுமெதுவாகச் சூடு பிடித்து உச்சம் தொடுவதைக் காட்டுகிறது அவரது பணி.
கோகுல் தாஸின் தயாரிப்பு வடிவமைப்பு, காட்சிகளில் காட்டப்படுகிற களங்களை யதார்த்தமானதாகத் திரையில் காட்ட உதவியிருக்கிறது.
ஜேக்ஸ் பிஜோயின் இசையில் பாடல்கள் காதில் விழுந்து நழுவியோடுகின்றன.
பின்னணி இசையிலோ மனிதர் மிரட்டியிருக்கிறார். அதிலும் ‘அய்யப்பனும் கோஷியும்’ படத்தை நினைவூட்டுகிற வகையில் அமைந்த கிளைமேக்ஸ் பகுதிக்கான பின்னணி இசை மிரட்டுகிறது.
இது தவிர டிஐ, விஎஃப்எக்ஸ், ஆடியோகிராஃபி போன்ற தொழில்நுட்பங்களில் பல கலைஞர்களின் உழைப்பு கலந்திருக்கிறது.
கே.ஆர்.சுனில் இப்படத்தின் கதையை எழுதியிருக்கிறார். அவருடன் இணைந்து இயக்குநர் தருண் மூர்த்தி திரைக்கதை வசனம் ஆக்கியிருக்கிறார்.
எண்பதுகள், தொண்ணூறுகளில் வந்த தமிழ்த் திரைப்பட வெற்றி விழா ஷீல்டுகள், இளையராஜாவின் பழைய பாடல்கள், கம்பம் பகுதியைச் சார்ந்து அமைக்கப்பட்டிருக்கிற மோகன்லாலின் பாத்திர வார்ப்பு என்று நிறைய விஷயங்கள் தமிழ்நாட்டோடு இணைத்துக் காட்டப்பட்டிருக்கின்றன.
சென்னையில் நிகழ்வதாகக் காட்டப்படுகிற காட்சிகளில் பாரதிராஜா, இளவரசு உள்ளிட்ட சில தமிழ் கலைஞர்கள் தோன்றியிருக்கின்றனர்.
‘துடரும்’ திரைப்படம் மிக மெதுவாகத் தொடங்கி, ‘இவ்ளோ மெலோடிராமாவா இருக்கே’ என்று பெருமூச்சு விட வைத்து, மெல்ல வில்லன் பாத்திர அறிமுகம் மூலம் திரைக்கதையில் வேகமெடுக்க வைத்து, பின்னர் பிரதான வில்லனைக் காட்டி நம்மை மூச்சடைக்க வைக்கிறது.
கிட்டத்தட்ட இப்படம் ‘த்ருஷ்யம்’ அனுபவத்தை ஒத்த திரையனுபவத்தைத் தரும். ’அதனை நாங்களே ஒப்புக்கொள்கிறோம்’ என்பது போல அப்படத்தில் வரும் சிறு வசனத்தை மோகன்லால் உதிர்ப்பதாக ஒரு காட்சி இதிலுண்டு.
முன்பாதியில் லேசாகத் தலைகாட்டுகிற சில அம்சங்கள் பின்பாதியில் மிக முக்கியமான திருப்பங்களாக உருமாறும்.
அதனைத் திரைக்கதையில் சரியாக எழுதியிருப்பதோடு, திரையிலும் சரிவரக் காட்சியாக்கம் பெறச் செய்திருக்கிறார் தருண் மூர்த்தி.
ஒரு மூத்த நடிகரைத் திரையில் காட்டும்போது, அவர் நடித்த பழைய படங்களை நினைவூட்டுவது மட்டுமே ‘நோஸ்டால்ஜியா’ ஆகிவிடாது.
அதற்குப் பதிலாக, அப்போது அவர் நடித்த படங்களுக்கு இணையான திரையனுபவத்தை இப்போது ரசிகர்களுக்குத் தர வேண்டும்.
அதற்கேற்ற திரைக்கதை, கதாபாத்திர வார்ப்பு, கலைஞர்களின் ஒத்துழைப்போடு அதனைச் சாதித்திருக்கிறார் இயக்குநர் தருண் மூர்த்தி.
இன்னொருபுறம் ‘எல்2: எம்புரான்’ படத்தில் ஏமாற்றிய மோகன்லால், ‘துடரும்’ வழியாக அதற்குப் பிராயச்சித்தம் செய்திருக்கிறார்.
ஆதலால், இயக்குநர் தருண் மூர்த்தி உள்ளிட்ட ‘துடரும்’ குழுவினருக்குத் தாராளமாக ஒரு பூங்கொத்தைப் பரிசளிக்கலாம்..!
– உதயசங்கரன் பாடகலிங்கம்