எல்லையோரத்தில் மீண்டும் நீடிக்கும் பதற்றங்கள்!

அண்மையில் காஷ்மீரில் பஹல்காமில் நடந்த தீவிரவாதத் தாக்குதலுக்கு இலக்காகி, அங்கு சுற்றுலாவிற்குச் சென்றிருந்த 26 பேர் உயிரிழந்திருப்பது இந்தியாவில் மட்டுமல்ல, சர்வதேச அளவிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

பல நாடுகள் இந்த பயங்கரவாதச் செயலைக் கடுமையாகக் கண்டித்திருக்கின்றன. ஐ.நா.வும் கண்டனம் தெரிவித்திருக்கிறது.

இந்தியாவிலும் பரவலாக இந்தச் சம்பவத்திற்கு எதிரான கண்டனங்கள் வலுத்திருக்கின்றன. உள்துறை அமைச்சரும், பாரதப் பிரதமரும் கடுமையான எச்சரிக்கைகளை விடுத்திருக்கிறார்கள்.

பாதுகாப்பு அமைச்சரும் அத்தகைய எச்சரிக்கையைக் கடுமையாக விடுத்திருந்த நிலையில், கடந்த இரண்டு நாட்களாக பாகிஸ்தானிய எல்லையோரம் சில பதற்றமூட்டும் தாக்குதல்கள் நிகழ்ந்து, உயிரிழப்பும் நடந்திருக்கிறது.

தொடர்ந்து இந்த நிலையை வேகப்படுத்தி, பாகிஸ்தானுக்குள் சென்று பயங்கரவாதிகள் ஊடுருவி இருக்கும் இடங்களின் மீது, தாக்குதல்களை நடத்த வேண்டும் என்று இங்குள்ள ஒரு சாரார் கருத்து தெரிவிக்கிறார்கள்.

மீடியாவிலும் இத்தகைய உணர்ச்சிவசப்பட்ட எதிர்ப்புகள் அதிகப்பட்டிருப்பதைப் பார்க்க முடிகிறது.

காஷ்மீரில் நடந்திருக்கும் பெரும் உயிரிழப்புக்குத் தகுந்த எதிர்வினையை இந்தியா ஆற்ற வேண்டும் என்பது ஒரு நியாயமான ஒன்றுதான்.

யார் இந்தப் பயங்கரவாத நிகழ்வுக்குப் பின்புலமாக இருந்தார்களோ அவர்களை சரிவர ஆராய்ந்து, அந்த இயக்கத்தை அழிக்க முனைவதை யாரும் கண்டிக்க மாட்டார்கள்.

காங்கிரஸ் தலைமைப் பொறுப்பில் இருக்கும் ராகுல்காந்தி உட்பட அனைவரும் மத்தியில் ஆளும் பாஜக எடுக்கும் எந்த முடிவிற்கும் நாங்கள் உடன்பட்டு தோழமையோடு நிற்போம் என்று அறிவித்திருப்பது, இங்குள்ள கட்சி கடந்த ஒரு ஒற்றுமை சாத்தியப்பட்டிருப்பதை உணர்த்துகிறது.

கட்சி சார்பற்ற முறையில் நாட்டின் பாதுகாப்பு கருதி உருவான இத்தகைய மனநிலை இன்றைய சந்தர்ப்பத்தில் மிகவும் அவசியமானதும் கூட.

இதே பாகிஸ்தான் மீது பல்வேறு விதத்தில் நல்லுறவு நிலவ வேண்டும் என்று இன்றைய பாஜகவின் மூத்த தலைவர்களான வாஜ்பாயும், அத்வானியும் முழு முயற்சி எடுத்திருக்கிறார்கள். அங்கு பயணமும் செய்திருக்கிறார்கள். அதெல்லாம் அந்தக் காலகட்டத்தில் இரு நாடுகளுக்கு இடையிலான உறவு மேம்படுவதற்காக எடுக்கப்பட்ட நல்முயற்சிகள்.

புல்வாமா போன்ற தாக்குதல்கள் நடந்த நிலையில், நீண்ட இடைவெளிக்குப் பிறகு, காஷ்மீரில் தற்போது இந்தத் தாக்குதல் நடந்திருக்கிறது.

ஆனால், காஷ்மீர் மக்கள் தங்கள் மாநிலத்தில் நடந்த இந்த நிகழ்வுக்கு எதிரான மனநிலையோடுதான் இருந்திருக்கிறார்கள்.

இதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர்கள் தங்களால் இயன்ற அளவுக்கு உதவி இருப்பதை, அங்கு சென்ற சுற்றுலாப் பயணிகள் உறுதிப்படுத்தி இருக்கிறார்கள்.

ஒரு சிலர் விதிவிலக்காக எதிரான மனநிலையில் இருந்திருக்கலாம். ஆனால், அதை வைத்து காஷ்மீர் மக்களைப் பற்றியே நாம் பொதுவான ஒரு முடிவுக்கு வந்துவிட முடியாது.

இதே நிலைதான் பாகிஸ்தானிலும். பாகிஸ்தானில் இருக்கிற மக்கள் அனைவரும் இந்தத் தாக்குதலை விரும்பக்கூடிய மன நிலையில் இருக்கிறார்களா என்பதை கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

பாகிஸ்தானிய அரசும் அங்குள்ள வெவ்வேறு அமைப்புகளும் இந்தத் தாக்குதலைக் கண்டித்திருக்கின்றன. அந்நாட்டின் பிரதமர் பேச்சுவார்த்தை துவக்க அழைப்பு விடுத்திருக்கிறார்.

அங்கிருந்து பயங்கரவாதக் குழு செயல்பட்டிருப்பது அதிகாரப்பூர்வமாக இனிமேல் தெரியவரும் பட்சத்தில் அவற்றைத் தடுப்பது பற்றி கறாரான முடிவை இந்திய அரசு எடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம்.

அதே சமயம், பாகிஸ்தானும் தன்னுடைய ராணுவ வலிமையை வெளிப்படுத்தும் வேலையை தற்போது செய்து கொண்டிருக்கிறது.

பாகிஸ்தானுக்கு ஆதரவாக சீனா உள்ளிட்ட பல நாடுகள் அதன் பின்னணியில் இருக்கின்றன.

அண்மையில், இந்தத் தாக்குதலை அடுத்து சிந்து நதியை பாகிஸ்தானுக்குள் நுழைய விடுவதற்கான ஒப்பந்தத்தை நிறுத்துவது குறித்தும் பேசப்பட்டிருக்கிறது.

உண்மையில் பார்த்தால் சீனாவின் திபெத் பகுதியிலிருந்து உருவாகிற நதி தான், சிந்து நதி.

தற்போது பாகிஸ்தானுக்கு ஆதரவாக இருக்கிற சீனா ஏற்கனவே இந்தியாவுக்கு எதிராக பல்வேறு சிறுசிறு சச்சரவுகளுக்கு ஆளான சில சம்பவங்களை நிகழ்த்திய நிலையில்,

தற்போது சிந்து நதி தொடர்பாக அந்த நாடும் திபெத்திலிருந்து இந்தியாவிற்குள் சிந்து நதி நுழைவதற்குத் தடை விதித்தால், அது பல்வேறு பிரச்னைகளுக்கு வழிவகுக்கும்.

இந்தியாவுக்கு ஆதரவாக சில நாடுகளும், பாகிஸ்தானுக்கு ஆதரவாக சில நாடுகளும் களமிறங்கினால், அது சர்வதேச அளவில் ஒரு பெரும் பிரச்னையை உருவாக்கும் வாய்ப்பை ஏற்படுத்திவிடும்.

இந்தியாவில் உள்ள பெரும்பான்மை மக்களும், பாகிஸ்தானில் உள்ள பெரும்பான்மை மக்களும் அத்தகையதொரு போருக்கானச் சூழல் உருவாவதை ஒருபோதும் விரும்ப மாட்டார்கள்.

அப்படி ஒரு சூழ்நிலை உருவானால், அதனால் நிகழும் உயிரிழப்புகளும், பொருளாதார இழப்புகளும் இரு நாடுகளும் தாங்கிக் கொள்ள முடியாத அளவிற்கு ஒரு தீவிரத்துடன் இருக்கும்.

ஏற்கனவே பொருளாதார அளவில் சரிவைச் சந்தித்துக் கொண்டிருக்கின்ற நமது நாட்டில், இத்தகைய போருக்கான ஆயத்தங்கள் பல்வேறு விதமான தாக்கங்களை உருவாக்கிவிடும்.

ஏற்கனவே உக்ரைன் போரினால் ஏற்பட்டிருக்கக்கூடிய சர்வதேச அளவிலான சலசலப்பை நாம் எதிர்கொண்டிருக்கிறோம்.

இந்த நிலையில், ஒரு சமாதானமான ஒரு சூழ்நிலையையும் அதே சமயத்தில், இம்மாதிரி கொடுஞ்செயலில் ஈடுபட்டிருக்கிற பயங்கரவாதிகளைக் களையெடுக்கிற வேலையையும் ஒருசேர செய்ய வேண்டியிருக்கிறது.

எதிர்வினை ஆற்ற வேண்டாம் என்று தடுத்துவிட முடியாது. அதே சமயத்தில், இதனால் மேலும் இந்தியாவில் எத்தகைய பாதிப்புகளும் வராதபடி, அதாவது ஒரு போர்ச்சூழல் உருவாகாதபடி தடுக்க வேண்டிய கடமையும் நமக்கு இருக்கிறது என்பதை நினைவில் கொள்வோம்.

காஷ்மீர் தாக்குதலுக்குப் பின்புலமாக இஸ்லாமிய அடிப்படைவாதத்தை முன்வைத்து இயங்கும் அமைப்புகள் இந்தத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்றாலும்கூட, இந்தத் தாக்குதலை பெரும்பான்மையாக இந்தியாவில் வசிக்கும் இந்திய முஸ்லீம்கள் விரும்பவில்லை என்கின்ற எதார்த்தத்தையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

எந்த விதத்திலும் இது இந்தியாவில் உள்ள இந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்கும் இடையில் விரோத மனப்பான்மையை வளர்ப்பதற்கு வழிவகுத்து விடக்கூடாது.

– யூகி

You might also like