டென் ஹவர்ஸ் – ‘த்ரில்’லோடுகிற கதை!

பெரும்பாலான நேரங்களில் ஒரு திரைப்படத்தைக் காணத் தூண்டுதலாக இருப்பது அதன் ‘டைட்டில்’ தான். அந்த பெயரே பாதி கதையைச் சொல்லிவிடும்; அதில் யார் யார் இடம்பெற்றிருக்கின்றனர் என்ற தேடுதலைத் தந்துவிடும். பிறகு டீசர், ட்ரெய்லர் மற்றும் ஆடியோ வெளியீடுகள், படம் சம்பந்தப்பட்டவர்களின் பேட்டிகளில் இருந்து அந்த ஆர்வம் மேலும் உயரக்கூடும்.

அந்த வகையில், டைட்டில் வழியே ஈர்ப்பைத் தந்தது ‘டென் ஹவர்ஸ்’ திரைப்படம். இளையராஜா கலியபெருமாள் இயக்கியுள்ள இப்படத்திற்கு கே.எஸ்.சுந்தரமூர்த்தி இசையமைத்துள்ளார்.

சிபிராஜ், கஜராஜ் திலீபன், ஜீவா ரவி, ராஜ் அய்யப்பா, சுஜாதா பாபு உள்ளிட்ட பலர் இதில் நடித்துள்ளனர்.

‘டென் ஹவர்ஸ்’ படம் எப்படிப்பட்ட திரையனுபவத்தைத் தருகிறது?

’டெ.ஹ.’ கதை!

சேலம் வட்டாரத்திலுள்ள ஒரு காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக இருக்கிறார் கேஸ்ட்ரோ (சிபிராஜ்). நியாயத்தையும் நீதியையும் நிலைநாட்ட எந்த எல்லைக்கும் செல்கிற துணிச்சல் கொண்டவர்.

சபரிமலை ஐயப்பனை வணங்க மாலை அணிந்திருந்தால் கூட, குற்றவாளிகளை விசாரிக்கையில் கையில் லத்திக்குப் பதிலாக கிரிக்கெட் பேட்டை கையிலெடுப்பவர். ரத்தத் தெறிப்புகளைச் சுத்தப்படுத்திவிட்டு ‘சுவாமியே சரணம்’ என்றவாறு அடுத்த பிரச்சனையை விசாரிக்கக் கிளம்பிச் செல்பவர்.

அப்படிப்பட்ட கேஸ்ட்ரோ, சபரிமலைக்குப் பயணிப்பதற்கு முந்தைய நாள் ஒரேநேரத்தில் சில வழக்குகளைக் கையாள நேர்கிறது.

அவரது காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் ஒரு இளம்பெண் காணாமல் போகிறார். அவரது தாத்தாவும் தாயும் வந்து புகார் கொடுக்க, உடனே அப்பெண் படிக்கிற பயிற்சி நிலையத்திற்குச் செல்கிறார். அதற்கு முன்னதாகவே, வழியில் கிடைக்கும் சில தடயங்களைக் கொண்டு அப்பெண் கடத்தப்பட்டிருப்பதாக உணர்கிறார். அந்த கும்பலைத் துரத்திப் பிடிக்க முயல்கிறார். ஆனாலும், அம்முயற்சி பலனற்றுப் போகிறது.

இன்னொரு புறம், சென்னை – திண்டிவனம் சாலையிலோ செல்லும் ஒரு ஆம்னி பேருந்தில் ஒரு இளம்பெண்ணைச் சிலர் கடத்திச் செல்வதாகக் கட்டுப்பாட்டு அறைக்கு ஒரு நபர் தகவல் சொல்கிறார். அது கேஸ்ட்ரோவுக்குச் சொல்லப்பட, போலீசாரை சுங்கச்சாவடிக்கு அனுப்பி வைக்கிறார்.

அந்தப் பேருந்தில் போலீசார் சோதனை மேற்கொள்ளும்போது, ஒரு இளைஞர் குத்திக் கொலை செய்யப்பட்டிருப்பதைக் காண்கின்றனர். அதற்கடுத்த நொடியே, அந்த பேருந்தில் இருப்பவர்கள் அனைவரும் காவல்நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்து வரப்படுகின்றனர்.

ஒவ்வொருவராக விசாரிக்கும் கேஸ்ட்ரோ, யார் குற்றவாளி என்று கண்டறிய முடியாமல் குழம்புகிறார். அப்போது, கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் சொன்னவர்தான் கொலையாகியிருக்கிற உண்மை தெரிய வருகிறது.

அந்தப் பேருந்தில் கண்டக்டர் மற்றும் டிரைவரை விசாரிக்கையில் சென்னை கே.கே.நகரில் ஏற வேண்டிய ஒரு இளம்பெண் வராதது தெரிய வருகிறது.

ஆனால், அடுத்த சில மணி நேரங்களில் ரோந்து பணியில் ஈடுபடும் போலீசார் ஒரு ரவுடி கும்பலைத் துரத்திச் செல்கின்றனர். அவர்களைப் பிடிக்கிறபோது, அந்தக் காரில் மேற்சொன்ன இளம்பெண்ணின் சடலம் கிடைக்கிறது. அவர்களிடம் விசாரிக்கையில், சென்னை – திண்டிவனம் நெடுஞ்சாலைக்கு அருகே அவரது பிணத்தை எடுத்துவருமாறு தங்களுக்குச் சொல்லப்பட்டதாகக் கூறுகின்றனர்.

ஆம்னி பேருந்தில் ஏறாத அந்தப் பெண் எப்படி நூறு கிலோமீட்டர் தொலைவிலுள்ள ஒரு இடத்திற்கு வந்தார்? பேருந்துக்குள் யாருக்கும் எந்தச் சந்தேகமும் வராமல் அந்த இளைஞர் கொல்லப்பட்டது எப்படி? தொடக்கத்தில் கூறப்பட்ட அந்த இளம்பெண் கடத்தல் சம்பவத்திற்குப் பின்னால் இருப்பது யார்?

இந்தக் கேள்விகளுக்கு இன்ஸ்பெக்டர் கேஸ்ட்ரோ பதில் கண்டுபிடித்தாரா இல்லையா என்கிறது இப்படத்தின் மீதி.

இந்தக் கதையிலுள்ள கேள்விகளும் அதன் பின்னிருக்கிற சந்தேகங்களும் நல்லதொரு ‘த்ரில்’ கதை இது என்ற எண்ணத்தை உண்டாக்கும். ஆனால், அதனைப் படுவேகமாகச் சொல்ல வேண்டுமென்ற வேட்கையோடு இப்படம் உருவாக்கப்பட்டிருக்கிறது. அதன் விளைவாக, கதையில் ‘த்ரில்’லோடுகிறது என்று சொல்வதே சரியாக இருக்கும்.

போதும்பா சாமி..!

’நாய்கள் ஜாக்கிரதை’, ‘ஜாக்சன் துரை’, ’வால்டர்’, ‘கபடதாரி’ போன்ற படங்களில் காவல் துறையைச் சேர்ந்தவராகத் தோன்றி, திரையில் விறைப்பு காட்டியவர் சிபிராஜ். இதிலும் அப்படியே வந்து போயிருக்கிறார். கொடுத்த பாத்திரத்தின் தன்மையை உணர்ந்து நன்றாகவே வெளிக்காட்டினாலும், ‘ஒரேமாதிரியாக’ திரையில் தெரிவதுதான் அவரிடத்தில் இருக்கிற பிரச்சனை.

சிபிராஜ் தாண்டி கஜராஜ், ஜீவா ரவி, ராஜ் அய்யப்பா, தங்கதுரை, ஆடுகளம் முருகதாஸ், சுஜாதா பாபு உள்ளிட்ட சிலர் இதில் நடித்திருக்கின்றனர்.

பேருந்தில் பயணிகளாக, காவல்நிலையத்தில் இருப்பவர்களாக, ரவுடிகளாக சில டஜன் பேர் இதில் இடம்பெற்றிருக்கின்றனர். அவர்களிலும் ஒரு சிலருக்கே முக்கியத்துவம் தரப்பட்டிருக்கிறது. இது போக, படத்தின் இறுதியில் திலீபன், சரவண சுப்பையா பாத்திரங்கள் வந்து போகின்றன. அவற்றைப் பற்றிய குறிப்புகள் முன்பாதி திரைக்கதையில் எங்குமே இல்லாதது பெருங்குறையே.

ஜெய் கார்த்திக்கின் ஒளிப்பதிவு தொடக்கம் முதல் இறுதி வரை திரையில் ‘அதீத’ வேகம் தெரிய வேண்டுமென்று மெனக்கெட்டிருக்கிறது. அதற்கேற்றாற் போல, படத்தைத் தொகுத்திருக்கிறார் லாரன்ஸ் கிஷோர்.

அருண் சங்கர் துரையின் கலை வடிவமைப்பில் காவல்நிலையம், ஆம்னி பேருந்து, சண்டைக்காட்சி நடக்குமிடங்களின் வடிவமைப்பு நம்மைத் திரைக்கதையோடு ஒன்ற வைக்கிறது.

இது போக சக்தி சரவணனின் சண்டைக்காட்சி வடிவமைப்பு உட்படத் தொழில்நுட்ப அம்சங்களில் சில ஈர்ப்பை உருவாக்குகிறது.

கே.எஸ்.சுந்தரமூர்த்தியின் பின்னணி இசை படத்திலுள்ள காட்சிகள் வேகமாக நகர்வது போன்ற உணர்வை ஊட்டுகிறது.

இந்தப் படத்தின் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் இளையராஜா கலியபெருமாள்.

சுமார் பத்து மணி நேரத்தில் நிகழ்கிற சம்பவங்களே திரைக்கதை என்று முடிவானபிறகு, அதற்கேற்ற காட்சிகளே படத்தில் இருக்க வேண்டும். அது ‘டென் ஹவர்ஸ்’ஸில் நிகழ்ந்திருக்கிறது.

அதேநேரத்தில், போலீசாரின் விசாரணை பத்து மணி நேரத்திற்கு நிகழ்ந்து முடிவது போலக் கதையை அமைத்துவிட்டு, அதற்குரிய காட்சிகளைச் சரிவர வடிவமைக்காமல் விட்டிருக்கிறார்.

இப்படத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட சில பிரச்சனைகள் போலீசின் கவனத்திற்கு வருவதாகச் சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால், திரைப்படத்தின் தொடக்கத்திலேயே அப்பிரச்சனைகள் அனைத்தும் ஒன்றுக்கொன்று சம்பந்தப்பட்டவை என்ற முடிவுக்கு வந்துவிடுகிறது நாயக பாத்திரம்.

அப்படியொரு முடிவுக்கு வருவதற்கு முன்னர், பார்வையாளர்களைக் கொக்கி போட்டு இழுப்பதாகச் சில காட்சிகள் இருக்க வேண்டும். இப்படத்தில் அது இல்லை.

விசாரணையின் போது உண்மையைக் கண்டறிவதாகச் சொல்லப்படுகிற விஷயங்கள் காதில் பூக்கூடையைத் தொடங்க விடுகிற ரகம். அதனால், அது பற்றி விமர்சிப்பது அர்த்தமற்றது.

‘டென் ஹவர்ஸ்’ படத்தில் ஒரு பெண் கடத்தப்படுவதும், ஓடும் ஆம்னி பேருந்தில் கொலை நிகழ்ந்திருப்பதும் திருப்புமுனையான விஷயங்கள். ஒரு முடிச்சு போன்றிருக்கும் அவற்றை மெதுவாக அவிழ்த்து, இடையே நிகழ்ந்தவற்றைத் திரையில் சொல்வதுதான் சரியாக இருக்கும். இயக்குனர் அதனை கோட்டை விட்டிருக்கிறார்.

‘கமர்ஷியல் படம்னா கொஞ்சம் அப்படி இப்படித்தான் இருக்கும்’ என்று சில இயக்குனர்கள் சுதந்திரம் எடுத்துக் கொள்வதுண்டு. இப்படத்தில் அதனை ‘ரொம்பவே’ அதீதமாக எடுத்துக் கொண்டிருக்கிறார் இளையராஜா கலியபெருமாள். அதற்காக, சில நாட்களில் நிகழ்கிற அலுவல்களை எல்லாம் சில நிமிடங்களில் நாயகன் முடித்துவிடுவதாகக் காட்டுவதெல்லாம் ரொம்பவே ‘ஓவர்’!

போலவே, திரைக்கதையின் தொடக்கத்திலேயே ‘பரபர’வென்ற வேகத்தைத் திரையில் காட்டியிருக்கத் தேவையில்லை. பார்வையாளர்கள் சாதாரணமாக நகர்கிற காட்சிகளில் அப்படியொரு வேகத்தை உணர்வது போன்று கதை சொன்ன பின்னரே, அதனைச் செயற்கையாகத் திரையில் நுழைத்திருக்க வேண்டும். அது நிகழாத காரணத்தால், ‘போதும்பா சாமி’ என்று பார்வையாளர்கள் ‘கும்பிடு’ போட வேண்டியிருக்கிறது.

இப்படிப் படத்தில் நிறைந்திருக்கிற சில ‘மைனஸ்’கள், பிரதான பெண் பாத்திரமே இல்லாமல் கதையை நகர்த்தியிருப்பது போன்ற சில தனித்துவமான அம்சங்களை மறைத்துவிடுகின்றன.

மொத்தத்தில், டைட்டில் முதல் ட்ரெய்லர் வரை பலகட்டமாக உருவாக்கிய கவன ஈர்ப்பைச் சிதறடித்திருக்கிறது இந்த ‘டென் ஹவர்ஸ்’.

  • உதயசங்கரன் பாடகலிங்கம்
You might also like