பொதுவாக புத்தாண்டு பிறக்கும் சமயங்களிலெல்லாம் ஜோதிடர்கள் சொல்லி வைத்ததைப் போல, வரும் ஆண்டுக்கான பலாபலன்களைப் பற்றி விவரித்துப் பேச, தொலைக்காட்சிகளுக்கு முன்னால், வெவ்வேறு ராசிக்காரர்கள் விரைத்துப் போய் உட்கார்ந்திருப்பார்கள்.
இதுபோதாதென்று அண்மையில், ராமேஸ்வரம் கோவிலில் தமிழ்ப் புத்தாண்டை ஒட்டி விசேஷ பஞ்சாங்கத்தை வாசித்திருக்கிறார்கள்.
அதில், இரண்டு வெடிகுண்டுகளைத் தூக்கிப் போட்டிருக்கிறார்கள்.
ஒன்று, ஏற்கனவே தமிழ்நாட்டில் சில பல மாதங்களுக்கு முன்பு மழை பெருமளவில் பெய்து படாதபாடு படுத்தியபோதும், மத்திய அரசு கொஞ்சம் கூட நிவாரண நிதி அளிக்காமல் புறக்கணித்தது.
அப்போதும் அமைதியாக இருந்த தமிழ்நாட்டில் வருமாண்டில் அதிகளவுக்கு பெருமழை இருக்கும் என்று ஒரு அதிர்ச்சியைக் கிளப்பி இருக்கிறார்கள்.
இரண்டு, ஏற்கனவே அண்மையில், கொரோனா இரண்டு தடவை வந்து பல்வேறு உயிர்களைப் பறித்து ஏகப்பட்ட பேரை தடுப்பூசி போட வைத்து, உடலின் எதிர்ப்பாற்றலையே கேள்விக்குறியாக்கி விட்டிருந்தது.
இந்நிலையில், தற்போது மீண்டும் புதிய நோய் வெளிநாடுகளிலிருந்து இந்தியாவுக்குப் பரவும் என்று புதிதுபுதிதாய் பீதியூட்டும் செய்தியை அதே பஞ்சாங்கத்தில் கூறியிருக்கிறார்கள்.
இதெல்லாம் போதாதென்று, மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் வாசிக்கப்பட்ட பஞ்சாங்கத்தில் ஒரு படி மேலே போய், தமிழகத்தில் ஆட்சி மாற்றமே ஏற்படும் என்று திமுகவுக்கு எதிர்தரப்பாக இயங்குபவர்கள் காதில், தீர்த்தத்தையே ஊற்றியிருக்கிறார்கள்.
இதையெல்லாம், ஊடகங்களில் தலைப்புச் செய்தியாகப் போட்டு, அந்த செய்தியைப் பார்ப்பவர்கள் வயிற்றிலேயும் கிளியைக் கிளப்பியிருக்கிறார்கள்.
என்னடா இது? பஞ்சாங்கங்களுக்கு வந்த சோதனை?