ஊர் சுற்றிக் குறிப்புகள்:
அண்மையில் ஊடகங்களில் விலங்கினங்கள் பொதுமக்களைத் தொந்தரவு செய்வதாக செய்திகள் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன. பெரு நகரங்களில் தெருவில் நடந்துபோகும் முதியவர்களை திடீரென்று ஒரு பாய்ச்சல் பாய்ந்து ஒரு மாடு முட்டித்தள்ள தொலைக்காட்சிகளில் அந்தக் காட்சியையே அடிக்கடி ஒலிபரப்புவது வீடுகளில் பார்க்கிறவர்களுக்கெல்லாம் பீதியை கிளப்பிக் கொண்டிருக்கிறது.
சென்னை மட்டுமல்ல தமிழகத்தின் பிற நகரங்களிலும் தெரு நாய்கள் சிறு குழந்தைகளையும் பள்ளிக்குச் செல்லும் சிறுவர்களையும் விரட்டிக் குதறும் காட்சிகள் இதே மாதிரியாக தொலைக்காட்சிகளில் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
மிகச் சமீபத்தில், வெறிநாய் ஒன்று விரட்டி விரட்டிக் கடித்து சுமார் 70-பேர் வரை பாதிக்கப்பட்டதாக செய்திகள் வெளிவந்தன.
மலைப் பகுதிகளில் பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளுக்குள் யானை உள்ளிட்ட விலங்குகள் புகுந்து உணவைத் தேடுவது தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றது.
வனப்பகுதிகளில் எஸ்டேட் மயமாகவும் சொகுசு விடுதிகளாகவும் வணிக மயமாக பலர் மாற்றி விலங்கினங்கள் வழக்கமாகச் செல்லும் பாதையையே மறித்து சிலர் தொடர்ந்து செயல்பட்டதன் விளைவாக யானைகளும் விலங்கினங்களும் தன்னுடைய பாதையை மாற்றி வீடுகளுக்குள் நுழைவது சகஜமாகிக் கொண்டிருக்கிறது.
ஒவ்வொரு மாதத்திலும் நாய் மற்றும் மாடுகளினால், முதியவர்களும் சிறுவர்களும் பாதிக்கப்படுவதான செய்திகள் தொடர்ந்து கொண்டிருக்க தமிழகத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி.யான கார்த்திக் சிதம்பரம், நாய்த் தொல்லையை கட்டுப்படுத்தக் கோரி பிரதமரிடம் மனு கொடுத்திருக்கிறார்.
மாடுகளைக் கூட சற்றே அலட்சியமாக விட்டுவிடலாம். ஆனால், நாய்கள் விஷயத்தில் அப்படி அல்ல. நாய்க்கடி படுகிறவர்கள் படாதபாடு பட வேண்டியிருக்கிறது.
இதற்காக இந்த நாய்கள் ஏதோ சீசன் மாதிரி விரட்டிக் கடிக்கின்றன என்பதையெல்லாம் யாரும் கவனித்ததாகத் தெரியவில்லை. சென்னை மாதிரி பெரு நகரங்களிலிலேயே தெரு நாய்களின் எண்ணிக்கை பெருமளவுக்கு அதிகரித்துக் கொண்டிருக்கிறது.
நள்ளிரவு நேரத்தில் பெரு நகரத்தை இரு சக்கர வாகனங்களில் கடக்கிறவர்கள் பல தெருக்களிலும் சாலைகளிலும் தெரு நாய்கள் ஒரு கூட்டம் போட்டதைப் போல கூடியிருப்பதைக் கண்டு மிரண்டுபோகிறார்கள்.
பெரு நகராட்சி அமைப்புகளோ அல்லது உள்ளாட்சி அமைப்புகளோ இத்தகைய நாய்த் தொல்லையை கட்டுப்படுத்த என்ன செய்யப் போகின்றனர், வெறுமனே அவற்றுக்கு கருத்தடை செய்வதாக மட்டும் அறிவிப்புக் கொடுப்பதால் மட்டும் பிரச்சனை தீர்ந்து விடாது.
சென்னை போன்ற பெரு நகரங்களிலிலேயே மருத்துவமனைகளில் நாய்க்கடிபட்டு அதற்காக விசேஷ ஊசி போடுகிறவர்கள் அதிகப்பட்டிருக்கும் நிலையில், விலங்கினங்கள் மீது மிகவும் அக்கறை கொண்ட பீட்டா போன்ற அமைப்புகளோ அல்லது ஜீவகாருண்ய சங்கங்களோ இம்மாதிரியான விலங்கினங்களின் எதிர்வினையைப் பற்றி அவை நடத்தி வரும் தாக்குதல்களைப் பற்றியும் கவலைப்படுவார்களா?
நிறைவாக ரத்தக்கண்ணீர் படத்தில் எம்.ஆர்.ராதா கண்பார்வை பறிபோன நிலையில் உடன் நடிக்கும் எஸ்.எஸ்.ஆரிடம் இப்படிக் கேட்பார்.
“அட்ரா சக்க… உயிரினங்களை கொல்லக் கூடாதுன்றதுக்குக்கூட சங்கம் வச்சு இருக்கீங்களா” என்று கேட்க பதில் சொல்வார், “ஆமாம்.. எந்த உயிரினத்தையும் கொல்லக் கூடாதுன்றது தா எங்கள் நோக்கம்.”
பதிலுக்கு எம்.ஆர்.ராதா கேட்பார், “அப்போ… நீங்க மூட்டைப்பூச்சிக் கடிச்சா என்ன பண்ணுவீங்கப்பா…”
இப்போது நாமும் அந்தப் படத்தில் எம்.ஆர்.ராதா கேட்ட அதே கேள்வியை கேட்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுத்தியிருக்கிறது, “நாய்க்கடிச் சூழல்”.