உலகறிந்த பண்டையத் தமிழரின் தொன்மை!

- அமைச்சர் தங்கம் தென்னரசு

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே வைப்பாற்றின் வடக்கு கரையோரத்தில் கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்பிருந்து மேற்கொள்ளப்பட்ட அகழாய்வின் மூலம் இந்த தொல்லியல் மேட்டில் முன்கற்காலம் முதல் இடைக்காலம் வரை தொடர்ந்து மனிதர்கள் வாழ்ந்ததற்கான பல்வேறு அடையாளங்கள் வெளிப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து இங்கு அகழாய்வு மேற்கொள்ள வேண்டும் என தொல்லியல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து வைப்பற்றின் வடகரையில் அமைந்துள்ள உச்சிமேட்டில் 25 ஏக்கர் பரப்பளவிலான தொல்லியல் மேட்டில் கடந்த 2022ஆம் ஆண்டு மார்ச் 16ம் தேதி முதல் முதல் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் தொடங்கின.

இந்த அகழாய்வு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நிறைவுற்ற நிலையில், அங்கு பல்வேறு வகையான தொல் பொருட்கள் குறிப்பாக, அதிக அளவிலான பானை ஓடுகள் கண்டறியப்பட்டன.

இந்த நிலையில், அங்கு நடைபெற்று வரும் மூன்றாம் கட்ட அகழாய்வுப் பணிகள் குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டையில் நடைபெற்று வரும் மூன்றாம்கட்ட அகழாய்வில், 13 சென்டிமீட்டர் ஆழத்தில் 29.5 மில்லி மீட்டர் நீளமும், 6.6 மில்லி மீட்டர் சுற்றளவும், 2.64 மில்லி கிராம் எடையும் கொண்ட செம்பினால் செய்யப்பட்ட ‘அஞ்சன கோல்’ கிடைக்கப்பெற்றுள்ளது.

பண்டையத் தமிழரின் செழிப்பான வாழ்க்கை முறையையும், அவர்கள் அன்றாடம் வேலைப்பாடுகளுடன் கூடிய பொருட்களைப் பயன்படுத்தியதையும் இக்கண்டுபிடிப்புகள் உலகிற்குப் பறைசாற்றுகின்றன” என்று பதிவிட்டுள்ளார்.

You might also like