முல்லைப் பெரியாறு அணைக்கு நாமே எஜமானர்கள்!

எழுத்தாளர் அ. வெண்ணிலா

கட்டத் தொடங்கிய காலம் முதல் கேரளாவின் கொடுமைகளை, அடக்குமுறைகளைத் தாங்கிவருகிறது முல்லைப் பெரியாறு அணை.

பெரியாறு அணையின் கர்த்தா கர்னல் ஜான் பென்னிகுக், பத்துக்கும் மேற்பட்ட கடிதங்களை அன்றைய பிரிட்டீஷ் அதிகாரிகளுக்கு எழுதியிருக்கிறார்.

‘நாங்கள் பிரிட்டீஷ் சர்க்காரின் பிரஜைகள். மேல்மலையில் அணை கட்டுவதற்காக நடுக்காட்டில் தங்கியிருக்கும் எங்களுக்கான பாதுகாப்பைத் தரவேண்டியது சர்க்காரின் கடமை.

நாங்களும் பிரிட்டீஷ் அரசிக்கு வரி செலுத்தும் பிரஜைகள்தான். எங்களின் சொந்த வேலைக்காக நாங்கள் இவ்விடத்தில் இருக்கவில்லை’ என கோபம் கொண்டு எழுதிய கடிதங்களின் பின்னணியில் இருந்தது அன்றைய திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் நெருக்கடிதான்.

அணை கட்டுவதற்கான இடத்தைக் கொடுத்த நல்லெண்ணம் மகாராஜா விசாகம் திருநாளுக்கு உரியது. பிறகு வந்தவர்கள் எல்லாரின் நடவடிக்கைகளிலும் இடம் கொடுத்ததற்கான கசப்பே மிஞ்சியிருக்கிறது.

விடுதலைக்குப் பிறகு பிரிட்டீஷ் சர்க்கார் உள்ளூர் சமஸ்தானங்களுடன் செய்துகொண்ட ஒப்பந்தங்கள் காலாவதியாயின.

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பினால் மட்டுமே நீர்நிலை சார்ந்த ஒப்பந்தங்கள் இன்னும் உயிரோடு இருக்கின்றன. 999 ஆண்டு குத்தகை ஒப்பந்தம் மட்டும் இல்லையென்றால், கேரளா முல்லை பெரியாறு அணையை என்ன செய்திருக்கும் என்று பெரிதாக கற்பனை செய்ய வேண்டியிருக்காது.

எத்தனை அரசியல்வாதிகள், திரைப்பட வியாபாரிகள், பத்திரிகையாளர்கள் முல்லை பெரியாறு அணைக்கு எதிராகப் பேசினாலும், அணை தன் வலிமையினால் கம்பீரமாக எதிர்கொள்ளும்.

வதந்திகள், துர்ப்பிரச்சாரங்களை முறியடிக்க நாம் எப்போதும் முன்னிறுத்த வேண்டியது கம்பம் பள்ளத்தாக்கு மக்களின் போராட்டத்தையும் தென் தமிழக மக்களின் தியாகத்தையும் முல்லை பெரியாறு கட்டப்பட்ட போராட்ட வரலாற்றையும் நம் ஒற்றுமையையும் தான்.

முல்லை பெரியாறு அணைக்கு நாமே எஜமானர்கள்.

நன்றி: முகநூல் பதிவு

You might also like