தெறிக்கவிட்ட வடிவேலு – சுந்தர்.சி ’காம்போ’!

‘வேணாம்.. வலிக்குது, அழுதுருவேன்..’ என்று ‘வின்னர்’ படத்தில் ’கைப்புள்ள’ கேரக்டரில் வரும் வடிவேலுவின் டயலாக் ரொம்பவே பிரபலம்.

வடிவேலு உடன் சுந்தர்.சி இணைந்த முதல் படமும் அதுவே. பிறகு கிரி, லண்டன், ரெண்டு, தலைநகரம், நகரம் மறுபக்கம் படங்களில் இவர்களது ‘காம்போ’ தியேட்டர்களில் ரசிகர்களை தெறிக்க விட்டது.

படம் சுமார் என்று சொன்னவர்கள் கூட, இவர்களது காமெடி அட்ராசிட்டியை தவறவிட விரும்பவில்லை. பின்னர் தொலைக்காட்சி ‘காமெடி ஷோக்கள்’ தொடங்கி யூடியூப், பேஸ்ஃபுக், ட்விட்டர் என்று டிஜிட்டல் ஊடகம் வரை ஆக்கிரமித்தது இந்தக் கூட்டணி.

‘மீண்டும் இவர்கள் இருவரும் இணைந்திட மாட்டார்களா’ என்று ரசிகர்கள் ஏங்கிய நிலையில், மீண்டும் ‘கேங்கர்ஸ்’ மூலமாக அது நிகழ்ந்திருக்கிறது. இந்தப் படத்தை இயக்கி தயாரித்திருப்பதோடு நாயகனாகவும் நடித்திருக்கிறார் சுந்தர்.சி.

‘வின்னர்’ மாயாஜாலம்!

‘வின்னர்’ படத்தில் முதலில் கைப்புள்ள பாத்திரத்தில் நடிப்பதாக இருந்தவர் விவேக்.

அதில் நடிக்க கருணாஸின் பெயரும் பரிசீலனையில் இருந்ததாகச் சொல்லப்படுகிறது.

‘நந்தா’ படத்திற்கு எகிறிய மார்கெட் வேல்யூவை தக்க வைத்துக்கொள்ள பல படங்களில் பகலிரவு பாராமல் நடித்த கருணாஸ் அப்போது நடித்து வந்தார்.

அந்தக் காலகட்டத்தில், ஷக்தி சிதம்பரத்தில் ‘இனிது இனிது காதல் இனிது’ படத்தில் வடிவேலு உடன் கருணாஸ் நடித்திருந்தார்.

அந்த நகைச்சுவை காட்சிகள் ரசிகர்களால் கொண்டாடப்பட்டன. அது போன்ற ஏதோ ஒரு விஷயம், ‘வின்னர்’ரில் வடிவேலு இடம்பெறக் காரணமானது.

படப்பிடிப்புக்கு முன்னதாக ஏற்பட்ட உடல்நலக் கோளாறு காரணமாக, வடிவேலுவால் அப்போது நேராக நடக்க இயலவில்லை.

அதனை இயக்குநர் சுந்தர்.சியிடம் அவர் தெரிவித்தார். பிறகு, அந்தப் பாத்திரத்தின் உடல்மொழியே அப்படி மாறிப்போவதாகக் காட்சியொன்றை இடம்பெறச் செய்தார் சுந்தர்.சி. அப்படம் செய்த மாயாஜாலம் நாம் அறிந்ததே.

‘ஏன்யா கத்துறே’, ‘கைப்புள்ள தூங்கு..’, ‘சண்டையில கிழியாத சட்டை எங்க இருக்கு’, ‘நல்லா கெளப்புறாங்கய்யா பீதிய..’, ‘நல்லா கேட்குறாய்ங்கய்யா டீட்டெய்லு’, ‘அட நாதாரிப் பயல இவ்ளோ நேரம் களவாணிப்பய சகவாசமா வச்சிருந்தோம்’,

’இவங்க எப்பவுமே இப்படித்தான் அடிச்சிட்டிருப்பாங்க, வாங்க பாஸ்’, ‘சங்கமே அபராதத்துலதான் ஓடிகிட்டு இருக்கு’, ‘உனக்கு வாய்ல வாஸ்து சரியில்ல’, ‘நாங்க அடி வாங்காத ஏரியாவே கிடையாது’ என்பது போன்ற ‘காமெடி ஒன்லைனர்’களை தந்தது இந்த ‘காம்போ’ தான்.

இன்று வரை ரசிகர்களின் தினசரி வாழ்வில் அவை எதிரொலித்துக் கொண்டிருக்கின்றன.

போலவே, பிரசாந்த் – வடிவேலு அடிக்கிற லூட்டிகளை ‘ரீல்ஸ்’களாக அள்ளி விட்டுக் கொண்டிருக்கிறது அடுத்த தலைமுறை.

‘அக்கா’ காமெடி!

‘கிரி’யில் வரும் ‘அக்கா காமெடி’யில் ஆபாசம் நிறையவே எட்டிப் பார்த்தது. ஆனாலும், வடிவேலுவின் உடல்மொழி ரசிகர்களை யோசிக்கவிடவில்லை. ஒரு திறமை வாய்ந்த கலைஞனின் சிறப்பே அதுதான்.

‘வின்னர்’ வெற்றிக்குப் பிறகு இயக்குர் சுந்தர்.சி உடன் கைகோர்த்த காரணத்தால், தனியாக ஒரு ‘டீம்’ அமைத்து இதில் களமிறங்கியிருந்தார் வடிவேலு. வீரபாகுவாக இப்படத்தில் தோன்றியிருந்தார்.

‘இவன் எவ்வளவு அடிச்சாலும் தாங்குறாண்டா, இவன் ரொம்ப நல்லவன்னு ஒரு வார்த்தை சொல்லிட்டாம்மா’ என்று வடிவேலு பீல் பண்ணும் இடம் நம்மைச் சிரித்து சிரித்து வயிற்று வலிக்கு ஆளாக்கும்.

‘கூழு குடிக்கறது வேணா வர்றேன் கொடுக்கறதுக்கு ஒண்ணுமில்ல’ என்பது போல இதிலும் ஏகப்பட்ட ‘காமெடி ஒன்லைனர்கள்’ இதில் உண்டு.

தொடர்ந்த பிணைப்பு!

‘லண்டன்’ படத்தில் பிரிட்டனைச் சேர்ந்த வழக்கறிஞர் வெடிமுத்துவாக நடித்தார் வடிவேலு. இதில் பிரசாந்த், பாண்டியராஜன் மட்டுமல்லாமல் நளினி, மும்தாஜ் உடன் சேர்ந்து நம்மைச் சிரிக்க வைத்திருப்பார்.

‘சின்னா’ படத்திலும் வடிவேலு நடித்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. ஆனால் அது குறித்த விவரங்கள் கிடைக்கப் பெறவில்லை.

‘ரெண்டு’ படத்தில் மேஜிக் நிபுணர் கிரிகாலனாக வடிவேலு தோன்றி நம் வயிற்றைப் புண்ணாக்கியிருப்பார். ஆனால், அதில் முதல் பாதியில் மட்டுமே அவர் வந்து போனார். இரண்டாம் பாதியில் அந்த இடத்தைச் சந்தானம் எடுத்துக் கொண்டார்.

இது போக ‘தலைநகரம்’ படத்தில் நாய் சேகராக, ‘நகரம் மறுபக்கம்’ படத்தில் ஸ்டைல் பாண்டியாகச் சுந்தர்.சி உடன் வடிவேலு நடித்த காட்சிகள் இன்று பார்த்தாலும் நம்மைச் சிரிப்பு மழையில் ஆழ்த்தும்.

அக்காட்சிகளில் யதார்த்தம் இல்லை எனினும், நாடகத்தனமான அந்த உரையாடல் நம்மை இவ்வுலக இன்ப துன்பங்களில் இருந்து சில நிமிடங்கள் விலக்கி வைக்கும்.

வேறொரு உலகத்திற்கு அழைத்துச் செல்லும் என்பதை மறுக்க முடியாது. மிகத்தேர்ந்த கலைஞர்களால் மட்டுமே அதனை நிகழ்த்த முடியும்.

அப்படி ஒரு நடிகனைத் திரையில் காட்டச் சிறந்த இயக்குநரால் மட்டுமே முடியும்.

அந்த வகையில் சுந்தர்.சி, வடிவேலு மீண்டும் ஒன்றிணையும் ‘கேங்கர்ஸ்’ நம்முள் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

வடிவேலு உடன் பிற காமெடி கலைஞர்கள் இணைவதென்பது வெகு அபூர்வமாகவே நிகழும். ஆனால், அப்படி அவர் நடித்த படங்கள் எல்லாமே சிறப்பானதாக அமைந்திருக்கின்றன.

கவுண்டமணி, செந்தில், விவேக், சார்லி, டெல்லி கணேஷ் உள்ளிட்ட சில நடிகர்களோடு அவர் இணைந்து நடித்த படங்கள் அதற்கான உதாரணங்கள்.

அதனாலேயே, ‘கேங்கர்ஸ்’ படத்தில் பக்ஸ், முனீஸ்காந்த், ரெடின் கிங்ஸ்லி, சிங்கம்புலி, ஜான் விஜய், தீபா சங்கர் உடன் அவர் நடிக்கிற காட்சிகள் எப்படியிருக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகமாகியிருக்கிறது.

இது போக விச்சு விஸ்வநாத், தளபதி தினேஷ், சித்ரா லட்சுமணன், வாணி போஜன், வெங்கல் ராவ், சௌந்தர், கேத்தரீன் ட்ரெசா, வாணி போஜன், ஹரீஷ் பேரடி, மைம் கோபி, இளவரசு, அருள்தாஸ் என்று பலர் இப்படத்தில் இருக்கின்றனர்.

இது போதாதென்று பல்வேறு கெட்டப்களில் பிடி மாஸ்டர் சிங்காரம் எனும் பாத்திரத்தில் தோன்றியிருக்கிறாராம் வடிவேலு.

சுந்தர்.சி உடன் அவரும் இன்னும் சிலரும் இணைந்து ஒரு ‘மெகா திருட்டில்’ ஈடுபடுவது தான் இத்திரைக்கதையின் சாராம்சம்.

சுந்தர்.சி, வடிவேலு ‘காம்போ’வின் ‘ஆபரேஷன் சிங்காரம்’ தியேட்டர்களை ரசிகர்களை தெறிக்கவிடுகிறதா என்று காண, வரும் 24ஆம் தேதி வரை காத்திருப்போம்..!

– மாபா

You might also like