ஒரு நட்சத்திர நடிகர் திரைப்படம் இயக்க முடிவெடுத்தால், அதில் தானே நாயகனாக நடிக்க எண்ணுவது இயல்பு. அவ்வாறில்லாமல் இன்னொரு நட்சத்திர நடிகரை அதில் நாயகனாக்குவது அரிது. மேற்கத்திய நாடுகளில் அந்த வழக்கம் பரவலாக உள்ளது. அந்த வரிசையில் இடம்பெறும் வகையில், மோகன்லாலை நாயகனாகக் கொண்டு ‘லூசிஃபர்’ தந்தார் மலையாள நடிகர் பிருத்விராஜ். தற்போது அந்தப் படத்தின் இரண்டாம் பாகமான ‘எல்2: எம்புரான்’ படத்தை இயக்கியிருக்கிறார்.
மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் மலையாளம் மட்டுமல்லாமல் தமிழ், தெலுங்கு, இந்தியிலும் ஒரே நேரத்தில் வெளியாகியிருக்கிறது ‘எம்புரான்’.
எப்படி இருக்கிறது இப்படம் தரும் காட்சியனுபவம்?
எங்கிருக்கிறார் நாயகன்?
கேரளாவில் நெடும்பள்ளி எனும் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஸ்டீபன் (மோகன்லால்), முதலமைச்சர் ராம்தாஸ் (சச்சின் கடேகர்) மறைவுக்குப் பிறகு நிகழும் அரசியல் குழப்பங்களைத் தீர்க்கும் வகையில் அவரது மகன் ஜதினைக் (டொவினோ தாமஸ்) கொண்டு வருகிறார். அவரை முதலமைச்சர் ஆக்கிய கையோடு, ஸ்டீபன் கேரளாவை விட்டு வெளியேறுவதாக முடிவடைந்தது ‘லூசிஃபர்’.
அதன் முடிவில், அவர்தான் உலகை உலுக்குகிற கேங்க்ஸ்டர்களில் ஒருவரான குரேஷி ஆப்ஃராம் என்பது சொல்லப்பட்டிருந்தது.
இரண்டாம் பாதியானது, ஐந்தாண்டுகள் கழித்து கேரள அரசியல் களம் எப்படியிருக்கிறது என்பதைச் சொல்வதில் இருந்து தொடங்குகிறது.
ஜதின் ராம்தாஸ் முதலமைச்சரான பிறகு, ஐயுஎஃப் கட்சியின் மூத்த தலைவர்களுக்கான முக்கியத்துவம் குறைகிறது. அது கட்சியில் குழப்பங்களை அதிகப்படுத்துகிறது. அது மட்டுமல்லாமல், கட்சிக்கும் தனக்குமான இடைவெளியை ஜதின் அதிகப்படுத்திக் கொள்கிறார்.
இதற்கிடையே, பத்திரிகையாளர் கோவர்தன் (இந்திரஜித்) டார்க்வெப்பில் இருக்கும் சில தகவல்களைக் கொண்டு அதிர்கிறார். இந்துத்துவ சார்பு கொண்ட பாபா பஜ்ரங்கியின் (அபிமான் சிங்) கவனம் கேரளா மீது திரும்பியிருப்பதாக உணர்கிறார். அது பற்றி உளவுத்துறை அதிகாரியான கார்த்திக்கிடம் (கிஷோர்) கேள்வி எழுப்புகிறார். ஆனால், கோவர்தனுக்குப் பதிலளிப்பதைச் சிறுமையாகக் கருதுகிறார் கார்த்திக். காரணம், அவர் வேறொரு திட்டத்தில் இறங்கியிருக்கிறார்.
இந்த நிலையில், ஐயுஎஃப் மேடையில் பாபா பஜ்ரங்கி உடன் கைகோர்த்து நின்று கேரளாவிலுள்ள பெரும்பாலான கட்சிகளுக்கு அதிர்ச்சி தருகிறார் ஜதின். ஐயுஎஃப் (பிகேஆர்) எனும் புதிய கட்சியைத் தொடங்கி, பஜ்ரங்கி சார்ந்த கட்சியுடன் கூட்டணி வைத்து, விரைவில் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளவிருப்பதாக அறிவிக்கிறார். அவ்வளவுதான். அதனைக் கேட்டதும் ஐயுஎஃப் மட்டுமல்லாமல் அதன் எதிர்க்கட்சியான ஆர்பிஐ (எம்)மும் கூட அதிர்ந்து போகிறது.
ஜதின் சகோதரியான பிரியதர்ஷினி (மஞ்சு வாரியர்), இந்த முடிவு தந்தை பின்பற்றி வந்த கொள்கைகளுக்கு எதிரானது என்று மனம் உடைகிறார்.
வரவிருக்கும் குழப்பங்கள் எத்தகையது என்கிற கவலை பெருக, ஸ்டீபனுக்கு கேரள நிலைமையைத் தெரிவிக்க வேண்டுமென்று எண்ணுகிறார் கோவர்தன். அதனை எப்படிச் சாத்தியப்படுத்துவது என்று தெரியாமல் முழிக்கிறார்.
திடீரென்று ஒருநாள் நேரடியாக ஸ்டீபனை சந்திக்கிற வாய்ப்பு கிடைக்கிறது. அப்போது, அவரை ‘குரேஷி ஆஃப்ராம்’ ஆகக் காண்கிறார்.
நீங்கள் யாரை எதிர்க்கிறீர்களோ, அவர்களே கருவியாகப் பயன்படுத்துகிற அளவுக்கு உங்கள் செயல்பாடு ‘இருக்கிறது’ என்று கோவர்தனிடம் சொல்லும் ஸ்டீபன், ஏற்கனவே இது போலத் தான் அப்படியொரு செயலைச் செய்ததாகக் கூறுகிறார். ‘இன்னொரு முறை உங்களுக்குத் தெரிந்தே உங்களைப் பயன்படுத்திக் கொள்ளப் போகிறேன்’ என்கிறார்.
அதனைத் தொடர்ந்து, ஈராக்கில் நிகழ்ந்த கேங்க்ஸ்டர் குழுக்கள் மோதலில் குரேஷி ஆஃப்ராம் எனும் ஸ்டீபன் நெடும்பள்ளி கொல்லப்பட்டதாகச் செய்திகள் வெளியாகின்றன. பஜ்ரங்கி உடன் கைகோர்க்கும் ஜதினை அச்செய்தி ஆற்றுப்படுத்துகிறது. ஆனால், அந்த மகிழ்ச்சியை வெகுநாட்கள் நீடிக்கவில்லை.
‘ஸ்டீபன் உயிரோடுதான் இருக்கிறார்’ என்ற தகவலை வெளியிடுகிறார் கோவர்தன்.
அதற்கிடையே கேரள அரசியல் களத்திலும் சில மாற்றங்கள் நிகழ்கின்றன. அந்த மாற்றங்கள் எத்தகையவை? பிகே ராமதாஸ் உருவாக்கிய ஐயுஎஃப் கட்சி என்னவானது? ஸ்டீபன் கேரளாவுக்குத் திரும்பினாரா? பஜ்ரங்கி ஏன் கேரளாவைக் குறி வைக்கிறார் என்பது உட்படப் பல கேள்விகளுக்குப் பதிலளிக்கிறது ‘எம்புரான்’ படத்தின் மீதி.
எம்புரான் படத்தின் முன்பாதி முழுக்க அந்த ஸ்டீபன் இப்போது எங்கிருக்கிறார் என்று தேடுவதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இரண்டாம் பாதியானது அவர் என்னவானார் என்று சொல்கிறது.
ஒரு ‘பொலிடிகல் ட்ராமா’!
மேற்சொன்ன கதையில் இருந்தே, இப்படத்தின் ஹீரோயிசம் எத்தனை சதவிகிதம் என்பதை உணர்ந்து கொள்ளலாம். அதனிடையே கேரள அரசியல் சூழல், அங்கிருக்கும் தலைவர்களின் தனிப்பட்ட அபிப்ராயங்கள், அந்நிய சக்திகளின் ஆதிக்கம் ஆகியவற்றைப் புகுத்தியிருக்கிறார் எழுத்தாக்கத்தைக் கையாண்டிருக்கும் முரளி கோபி. அதேநேரத்தில், அதனால் சாதாரண மக்களிடையே ஏற்படும் தாக்கத்தை மட்டும் இன்னும் விரிவாகச் சொல்லாமல் தவிர்த்திருக்கிறார்.
முதல் பாகம் போலவே ‘எம்புரான்’ திரைப்படமும் முழுக்க அரசியல் மட்டுமே பேசுகிறது. ஒரு ‘பொலிடிகல் ட்ராமா’ ஆக அமைந்துள்ள இப்படத்தில் ஸ்டீபனின் ‘கே.ஏ’ குழுவின் செயல்பாடுகள் ஆக்ஷன் எபிசோடுகளாக இடம்பெற்றிருக்கின்றன. அவை சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்தவையாகக் காட்டப்படுவதால் திரைக்கதையானது கேரளம், காஷ்மீர், டெல்லி, மும்பை, லண்டன், செனகல், ஈராக் என்று உலகின் பல்வேறு இடங்களுக்குப் பயணிக்கிறது.
இப்படத்தில் சில காட்சிகள் வேகமாக நகர்கின்றன; சில காட்சிகள் மெதுவாக நகர்கின்றன. பரபரவென்று தீப்பற்றியது போன்ற திரைக்கதை நகர்வு இதிலில்லை. நிறைய நட்சத்திரங்கள் இடம்பெற்றிருக்கும் ஒரு திரைப்படத்தில் அவரவர்க்கு முக்கியத்துவம் தர வேண்டிய தேவை உள்ளதால், அதனை நிகழ்த்துவது கடினம் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.
திரைக்கதையின் வேகம் ஏற்ற இறக்கங்களோடு இருப்பதைப் போலவே, உலகின் பல்வேறு இடங்களைக் காட்டுவதாக அமைந்த காட்சிகளும் சிலருக்கு அயர்ச்சி தரலாம். ஆங்கிலம், இந்தி, செனகல், மாண்டரின் உட்படப் பிற மொழிகள் இதில் இடம்பெற்றிருக்கின்றன. அவற்றைத் தமிழில் மொழிபெயர்க்காமல் விட்டிருப்பது சிலருக்குப் பிடிக்கலாம்; சிலருக்குப் பிடிக்காமல் போகலாம்.
அக்குறைகளைப் புறந்தள்ளத் தயாராக இருந்தால், ‘எல்2: எம்புரான்’ தரும் திரையனுபவம் நிச்சயம் வேறாகத் தெரியும்.
காட்சிகளில், வசனங்களில் சொல்லப்பட்டிருக்கிற சில விஷயங்கள் ஏற்கனவே செய்திகளில் இடம்பெற்றவையாக உள்ளன; மிகச்சில விஷயங்கள் செய்திகளை உருவாக்கும் வகையில் சர்ச்சைக்குரியதாக இருக்கின்றன. அப்படியிருந்தும், அதனை முரளி கோபி – இயக்குநர் பிருத்விராஜ் கூட்டணி முயற்சித்திருப்பது சிந்தனையைக் கிளறுகிறது.
‘ஆக்ஷன்’ வகைமையில் அமைந்த மலையாளத் திரைப்படங்களின் உருவாக்கம் இப்படித்தான் இருக்கும் என்ற கணிப்பைச் சுக்குநூறாக உடைத்து வருகின்றன சமீபகாலப் படைப்புகள். அவற்றிலொன்றாக உள்ளது ‘எம்புரான்’. அதற்கான முக்கியக் காரணம், வேறுபட்ட களங்களை அப்பரப்பின் விசாலத்தோடு திரையில் காட்ட முயன்றிருக்கும் சுஜித் வாசுதேவின் ஒளிப்பதிவு.
அகிலேஷ் மோகனின் படத்தொகுப்பு குழப்பமின்றிக் கதை சொல்ல உதவியிருக்கிறது. சில பாத்திரங்கள், சில காட்சிகளின் பின்னணி சொல்லப்படாமல் தவிர்க்கப்பட்டிருப்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.
மஞ்சு வாரியர் ஒரு அரசியல் கட்சித் தலைவராக உருவெடுப்பதாகச் சில காட்சிகள் இதிலுள்ளன. அக்காட்சிகளில் படத்தொகுப்பு பிரமாதம். பெண் அரசியல் தலைவர்கள் இருக்கிற எந்தவொரு மாநிலத்தோடும் அதனைத் தொடர்புபடுத்திக்கொள்ள முடியும் என்பதால், அக்காட்சிகளே ‘எம்புரான்’னின் யுஎஸ்பி என்றும் கூடச் சொல்லலாம்.
தீபக் தேவின் பின்னணி இசை பழைய மலையாள ஆக்ஷன் படங்களை நினைவூட்டுகிறது. பாடல்களும் கூட ஆக்ஷன் காட்சிகளுக்கே பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.
மோகன்தாஸின் கலை வடிவமைப்பு, இக்கதை வெவ்வேறு நாடுகளில் நிகழ்வதாக நம்மை நம்ப வைக்கிறது.
இது போக எம்.ஆர்.ராதாகிருஷ்ணனின் ஒலி வடிவமைப்பு, ஸ்டண்ட் சில்வாவின் ஸ்டண்ட் கொரியோகிராஃபி, சுஜித் சுதாகரனின் ஆடை வடிவமைப்பு மற்றும் விஎஃப்எக்ஸ், டிஐ என்று இதிலுள்ள தொழில்நுட்ப அம்சங்கள் படத்தின் தரத்தைத் தாங்கிப் பிடிக்கிற வகையில் அமைந்திருக்கின்றன.
உண்மையைச் சொன்னால், சமீப ஆண்டுகளில் வந்த பிரமாண்ட திரைப்படங்களைக் காட்டிலும் இப்படத்தின் பட்ஜெட் குறைவு என்பதை உணர முடியும். ஆனால், அவ்வாறு சிந்திக்கவிடாமல் தடுக்கின்றன படத்தின் பெரும்பாலான பிரேம்கள். அதன் பின்னிருக்கும் திட்டமிடல் நிச்சயம் பாராட்டுக்குரியது.
இப்படத்தில் மோகன்லால், மஞ்சு வாரியர், டொவினோ தாமஸ், அபிமன்யூ சிங், கிஷோர் தொடங்கி இந்திரஜித், சுகந்த் கோயல், சூரஜ் வெஞ்சாரமூடு, பாசில், சச்சின் கடேகர், சாய்குமார், பைஜு சந்தோஷ், நந்து, சானியா அய்யப்பன், நைலா உஷா, ஷிவதா என்று சுமார் மூன்று டஜன் கலைஞர்களாவது இதில் நடித்திருப்பார்கள். ஆண்ட்ரியா திவதார், ஜெரோம் பிளின் உள்ளிட்ட வெளிநாட்டுக் கலைஞர்களும் அதில் அடக்கம்.
முதல் பாகத்தில் சிறியளவில் தலைகாட்டிய பிருத்விராஜ் பாத்திரம், இதில் பிளாஷ்பேக் உடன் கொஞ்சம் பெரியளவில் இடம்பெற்றிருக்கிறது.
அனைத்து நடிகர்களும் காட்சியின் தன்மையைத் தாங்கிப் பிடிக்கிற வகையில் நடித்திருக்கின்றனர் என்பதைத் தனியே சொல்ல வேண்டியதில்லை.
மோகன்லாலின் நடிப்பைக் கண்டு பிரமித்தவர்களுக்கோ, மீசையை நீவிக்கொண்டு அவர் பேசுகிற ‘மோனே தினேஷா’ ரக பஞ்ச் வசனங்களைக் கேட்டு புல்லரித்தவர்களுக்கோ, இப்படத்தில் அவரது நடிப்பு பெரிய விருந்தை அளிக்காது. அதற்குப் பதிலாக, ஸ்லோமோஷனில் மோகன்லால் நடந்துவரும் ஷாட்களை கண்டு ஆறுதல்பட்டுக் கொள்ளலாம்.
தொண்ணூறுகளில் மலையாளத் திரையுலகில் ஆக்ஷன் படங்களுக்குப் பெயர் போனவராகத் திகழ்ந்தார் இயக்குநர் ஜோஷி. இப்போதும் படங்கள் இயக்கி வருகிறார். ‘எம்புரான்’னில் கிட்டத்தட்ட அவரது வழியில் சென்றிருக்கும் பிருத்விராஜ், குறிப்பிட்ட பட்ஜெட்டில் பிரமாண்டமான காட்சியாக்கம் செய்யும் திறனைக் கைவரப் பெற்றிருக்கிறார்.
‘ஷோலே’, ‘ஊமை விழிகள்’ மாதிரியான திரைப்படங்களில் பல பாத்திரங்களுக்கான கிளைக்கதைகள், அவற்றிலுள்ள பிரச்சனைகள், இறுதியில் தீர்வு என்று கதை நகரும். கிட்டத்தட்ட அந்த பாணியில் அமைந்திருக்கும் ‘எம்புரான்’ திரைப்படம் குறிப்பிட்ட ரசிகர்கள் கொண்டாடுகிற வகையில் நிச்சயம் இருக்கும்.
போலவே, இப்படத்தில் குறியீடுகளாகச் சொல்லப்பட்டிருக்கிற விஷயங்களை ‘டீகோட்’ செய்து விவாதிக்கவும் வழி அமைத்து தந்திருக்கிறார் பிருத்விராஜ். ஆக, ஓடிடி வெளியீடு வரை வசூலை அள்ள விரும்பியிருக்கிறார். அது நிகழ்ந்தாலும் நிகழாவிட்டாலும் இப்படம் கல்லா கட்டப்போவதில் எந்த மாற்றமும் இருக்கப் போவதில்லை.
– உதயசங்கரன் பாடகலிங்கம்