கோர்ட் – போக்சோ வழக்கில் சிக்கும் அப்பாவியின் கதை!

எண்பதுகளில் நீதிமன்ற விசாரணை இடம்பெறாத திரைப்படங்களே இல்லை எனும் நிலை இருந்தது. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என்று பல மொழித் திரைப்படங்களிலும் அது ஒரு சம்பிரதாயமாகப் பின்பற்றப்பட்டது. கௌரவம் தொடங்கி விதி, பாசப்பறவைகள், கனம் கோட்டார் அவர்களே என்று பெரும்பட்டியலே இடும் அளவுக்குத் தமிழில் நீதிமன்றத்தைக் காட்டிய திரைப்படங்கள் பல.

ஆனால், பின்னர் வந்த விருமாண்டி, பருத்தி வீரன், வழக்கு எண் 18/9 போன்ற படங்களில் இடம்பெற்ற நீதிமன்றங்களும் சரி, அங்கு நடைபெறுவதாகக் காட்டப்பட்ட விசாரணையும் சரி, திரையில் நமக்கு வேறாகத் தெரிந்தன. மேற்சொன்ன படங்களைப் பார்த்தால் அந்த வித்தியாசத்தைத் தெரிந்து கொள்ளலாம்.

அவற்றுக்கு இடையே உள்ள வேறுபாட்டை அகற்றி, நீதிமன்ற விசாரணையை மையப்படுத்தி கமர்ஷியலாக ஒரு திரைப்படத்தை உருவாக்கினால் எப்படி இருக்கும்? அந்த வகையில் அமைந்திருக்கிறது தற்போது தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் தெலுங்கு படமான ‘கோர்ட்’.

புதுமுக இயக்குனர் ராம் ஜகதீஷ் இயக்கியுள்ள இப்படத்தில் சாய்குமார், பிரியதர்ஷி புலிகொண்டா, ரோகிணி, சுபலேக சுதாகர், சிவாஜி, விசிகா, புதுமுகங்கள் ஹர்ஷ் ரோஷன், ஸ்ரீதேவி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

எப்படியிருக்கிறது ‘கோர்ட்’ தரும் திரையனுபவம்?

தீர்ப்பை நோக்கி..!

விசாகப்பட்டினம் பகுதியைச் சேர்ந்தவர் சந்திரசேகர் (ஹர்ஷ் ரோஷன்). பத்தொன்பது வயது இளைஞர். தாய், தந்தை, தங்கையுடன் வசித்து வருகிறார். தந்தை இஸ்திரி இடும் தொழிலாளி. படிப்பில் ஆர்வமில்லாத சந்திரசேகர், பணம் சம்பாதிக்கும்விதமாக மொபைல் போன் விற்பனை, விளம்பரப் பணிகள், மதுபான விடுதியில் பரிமாறுவது என்று பல வேலைகளைப் பார்க்கிறார்.

சந்திரசேகர் வசிக்கும் வீட்டின் அருகே உள்ள ஒரு அபார்ட்மெண்டுக்கு ஜாப்லி (ஸ்ரீதேவி) தனது தோழியைக் காண வருகிறார். வந்த இடத்தில் அவர் சந்திரசேகரைக் காண்கிறார். தோழியிடம் மொபைல் எண் வாங்கி, அவரைச் சீண்டும் வகையில் பேசுகிறார். தொடக்கத்தில் அவரது பேச்சு சந்திரசேகரைக் கோபப்படுத்துகிறது. மெல்ல அது ஈர்ப்பாக மாறுகிறது.

ஒருகட்டத்தில் எதிர்முனையில் பேசுவது ஜாப்லி என்பதை சந்திரசேகர் அறிகிறார். இருவரும் ஒருவரையொருவர் காதலிப்பதை உணர்கின்றனர்.

இந்த நிலையில், ஜாப்லியின் காதல் விவகாரம் அவரது உறவினர் மங்கபதிக்கு (சிவாஜி) தெரிய வருகிறது.

தனது பத்து வயது மகளிடம் சக மாணவர் ஒருவர் ஒரு காகிதத்தைக் கொடுத்த காரணத்திற்காக, அவரது தந்தை மீது கஞ்சா வழக்கு பாயக் காரணமாக இருப்பவர் மங்கபதி. சாதீய வன்மமும் செல்வச் செருக்கும் கொண்ட அவரால், உறவினர் பெண்ணான ஜாப்லியின் காதலை ஏற்க முடியவில்லை. அதனால், சந்திரசேகரைச் சிறையில் தள்ள முடிவு செய்கிறார்.

ஒருநாள் சந்திரசேகரின் வீட்டில் ஜாப்லி இருக்கும்போது, அங்கு ஜாப்லியின் தாய், தாத்தா சகிதம் அங்கு செல்கிறார் மங்கபதி. கூடவே அருகிலுள்ள காவல்நிலைய ஆய்வாளரையும் கூட்டிச் செல்கிறார்.

சந்திரசேகரைக் கைது செய்து காவல்நிலையம் அழைத்துச் செல்கின்றனர் போலீசார். அவர் மீது ஜாமீனில் வெளிவர முடியாதபடி போக்சோ வழக்கு பதிவு செய்யப்படுகிறது.

நீதிமன்ற விசாரணையின்போதும், சந்திரசேகருக்கு ஆதரவாக வாதாடும் வழக்கறிஞரை மங்கபதி தரப்பு விலைக்கு வாங்குகிறது. இதன் காரணமாக, வழக்கு விசாரணை ஒருதலைபட்சமாக நடந்து முடிந்து தீர்ப்பு வழங்கும் நாளும் முடிவாகிறது.

இந்த நிலையிலேயே, ஹைதராபாதில் இருக்கும் வழக்கறிஞர் மோகன் ராவை தேடி சந்திரசேகரின் நண்பர்கள் இரண்டு பேர் வருகின்றனர். அந்த அலுவலகத்தில் ஜுனியர் வழக்கறிஞரான சூர்ய தேஜாவை (பிரியதர்ஷி) சந்திக்கின்றனர்.

அவர்களிடத்தில் ‘மோகன் ராவ் உங்களது வழக்கில் நிச்சயம் ஆஜராவார்’ என்று சொல்கிறார் தேஜா. ஆனால், அந்த வழக்கை எடுத்துக்கொள்ள மறுக்கிறார் மோகன் ராவ். அதனால், வேறு வழியில்லாமல் அவரது பெயரைத் தவறாகப் பயன்படுத்தி அந்த வழக்கில் ஆஜராகிறார்.

சந்திரசேகர் நீதிமன்றத்தில் தீர்ப்பை எதிர்நோக்கி இருக்க, அன்றைய தினம் ’இந்த வழக்கு மீண்டும் விசாரிக்கப்பட வேண்டும்’ என்று வேண்டுகோள் விடுக்கிறார் தேஜா.

நீதிபதி அதனை ஏற்றாரா? வழக்கு விசாரணை முழுமையாக நடந்ததா? போக்சோ குற்றச்சாட்டு உண்மையல்ல என்பதை சந்திரசேகர் நிரூபித்தாரா என்பது உள்ளிட்ட பல கேள்விகளுக்குப் பதிலளிக்கிறது ‘கோர்ட்’ படத்தின் மீதி.

இந்தப் படத்தின் டைட்டிலில் ‘STATE vs A NOBODY’ எனும் டேக்லைன் உள்ளது. அதற்கேற்ப, காவல் துறை தொடுத்த வழக்குக்கு எதிராகச் சாமானியர் ஒருவர் போராடுவதாகக் கதை சொல்கிறது இப்படம். அதுவே இதன் யுஎஸ்பி.

பழைய ‘நெடி’!

‘கோர்ட்’ படத்தின் முன்பாதி முழுக்க ஒரு இளம் ஜோடியின் காதல் சொல்லப்பட்டிருக்கிறது. இரண்டாம் பாதியில், போக்சோ குற்றச்சாட்டுக்கு ஆளான அந்தக் காதலனின் பக்கம் நியாயம் இருக்கிறதா என்பதைச் சொல்லும் நீதிமன்ற விசாரணை காட்டப்படுகிறது.

மேற்சொன்ன விஷயங்கள் திரைக்கதையில் இப்படித்தான் இடம்பெறும் என்ற நமது எதிர்பார்ப்புக்கு ஏற்ப அமைந்துள்ளது ‘கோர்ட்’. அதேநேரத்தில், திரைக்கதை போரடிக்கும் வகையில் இல்லை. அதுவே இதன் சிறப்பம்சம்.

இரண்டாம் பாதியில் உள்ள நீதிமன்ற விசாரணை காட்சிகள் நமக்கு பழைய திரைப்படங்களை நிச்சயம் நினைவுபடுத்தும். அந்த நெடி நம்மைக் கொஞ்சம் எரிச்சல்படுத்தும். அதேநேரத்தில், அந்தக் காட்சிகள் ‘வறட்சியானதாக’ அமைந்திருந்தால் மொத்தப் படமும் ‘பணால்’ ஆகிவிடும் என்பதையும் ஏற்கத்தான் வேண்டியிருக்கிறது.

அதனால், திரைக்கதையாக்கத்தில் ஈடுபட்ட இயக்குனர் ராம் ஜெகதீஷ், கார்த்திகேயா ஸ்ரீனிவாஸ், வம்சிதர் ஸ்ரீகிரியைப் பாராட்டத்தான் வேண்டும்.

இப்படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் புதுமுகமான ராம் ஜெகதீஷ். அவரால் சிறப்பான ‘காதல் படைப்புகள்’ தர முடியும் என்பதை இப்படத்தின் முன்பாதி காட்டிவிடுகிறது. போலவே, நல்லதொரு ஆக்‌ஷன் படம் உருவாக்க முடியும் என்பதைப் பின்பாதி சொல்கிறது.

இயக்குனர் இந்தக் கதையை ‘படு கமர்ஷியலாக’ அணுகியிருக்கிறார். அதனை உணர்ந்து அவருக்குத் தோள் கொடுத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் தினேஷ் புருஷோத்தமன். நீதிமன்றக் காட்சிகளில் எந்தவொரு ஷாட்டும் நகர்வு இல்லாமல் அமைந்துவிடக் கூடாது என்பதில் கவனம் செலுத்தியிருக்கிறார்.

பிளாஷ்பேக்குகள் வந்து போனாலும், கதையை உள்வாங்குவதில் பார்வையாளர்களுக்குச் சிரமம் இருக்கக் கூடாது என்பதற்காக மெனக்கெட்டிருக்கிறார் படத்தொகுப்பாளர் கார்த்திகா ஸ்ரீனிவாஸ்.

கதை நிகழும் சிறு நகரச் சூழல், கிராமத்து வீடு, பெருநகரப் பரபரப்பு ஆகியவற்றைத் திரையில் காட்ட உதவியிருக்கிறார் கலை இயக்குனர் விதல் கோசணம்.

இசையமைப்பாளர் விஜய் புல்கன் பாடல்கள், பின்னணி இசை இரண்டையும் சிறப்பாகத் தந்திருக்கிறார்.

நடிப்பைப் பொறுத்தவரை பிரியதர்ஷி புலிகொண்டா, சாய்குமார், விசிகா, ரோகிணி, சுபலேக சுதாகர், ஹர்ஷ வர்தன் என்று சுமார் இரண்டு டஜன் நடிப்புக் கலைஞர்கள் இதில் தலைகாட்டியிருக்கின்றனர். அனைவரும் சிறப்பான பங்களிப்பைத் தந்திருக்கின்றனர்.

அவர்களில் வில்லனாக நடித்துள்ள சிவாஜியின் நடிப்பு நம்மை மிரட்டுகிறது. அதுவே இப்படத்தின் பலமாகவும் உள்ளது.

இதில் இளம் காதல் ஜோடியாக வரும் புதுமுகங்கள் ஹர்ஷ் ரோஷன், ஸ்ரீதேவி இருவருமே சிறப்பான நடிப்பைத் தந்திருக்கின்றனர். நடிப்புக்கு முக்கியத்துவமுள்ள கதைகள் கிடைக்கும் பட்சத்தில் இருவருமே அடுத்தடுத்த படிகளைத் தொடுவது உறுதி என்றெண்ணும்படியாக இதில் வந்து போயிருக்கின்றனர்.

‘கோர்ட்’ திரைப்படத்தின் ட்ரெய்லரே காதலில் விழும் ஒரு அப்பாவி இளைஞன் மீது போக்சோ குற்றச்சாட்டு சுமத்தப்படுவதைச் சொன்னது. குயுக்தியுடன் சுமத்தப்பட்ட அந்த குற்றச்சாட்டுகளில் இருந்து அந்த நபர் விடுவிக்கப்படுவதை ‘சினிமாதனத்துடன்’ சொல்கிறது இப்படம். கதையோ, கதாபாத்திரங்களோ, களங்களோ அவ்வாறில்லாமல் ‘யதார்த்தம்’ தொனிக்கத் திரையில் தெரிகின்றன. அதற்கு மாறான காட்சியமைப்பு உள்ளது சிலருக்கு முரணாகத் தெரியலாம். ஆனால், அவ்விரண்டையும் சரியாக ஒன்றிணைத்துக் குழைத்து இப்படத்தை ஆக்கியிருக்கிறது ராம் ஜெகதீஷ் & டீம்.

நடிகர் நானி இப்படத்தை வழங்கியிருப்பது, இதன் மீதான கவனத்தை எகிற வைத்திருக்கிறது. இப்போது வரை உலகளவில் 50 கோடி ரூபாய் வரை வசூலித்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. ஆனால், சிறிய பட்ஜெட்டில் அமைந்த படம் என்று சொல்ல முடியாத வகையில் செறிவான உள்ளடக்கத்தைக் கொண்டிருக்கிறது ‘கோர்ட்’. அதுவே வெற்றிக்கான காரணம் என்பதைப் படம் பார்த்து முடிந்ததும் நம்மால் நிச்சயம் உணர முடியும்!

  • உதயசங்கரன் பாடகலிங்கம்
You might also like