தமிழர் நிதி நிர்வாகம்: நூல் வடிவில் ஓர் ஆவணக் காப்பகம்!

“தமிழ்நாட்டில் நிலவும் உலகளாவிய சமூகக் கொள்கைகளின் தோற்றம் குறித்தும், அதன் ஒருங்கிணைப்பு குறித்தும் மிகக் குறைவாகவே அறியப்படுகிறது. ஆனால் அதன் முக்கியத்துவம் குறைவானதன்று”
                           – பொருளாதார அறிஞர்கள் அமர்த்திய சென், ழீன் தெரெசெ

சமீபத்தில் என் பார்வைக்குக் கிடைத்த தமிழ்நாடு அரசின் நிதித் துறை பிரம்மாண்டமாக வெளியிட்டுள்ள ‘தமிழர் நிதி நிர்வாகம்: தொன்மையும் தொடர்ச்சியும்’ என்ற தொகுப்பு நூல் பற்றி அறிமுகமாக சில வார்த்தைகள் சொல்ல வேண்டும் என விரும்புகிறேன்.

சங்க காலம் முதல் சமூக நீதிக்காலம் வரையிலான தமிழர்களின் வரலாற்றுச் சிறப்புமிக்க நிதி நிர்வாகச் சித்திரத்தைத் தீட்டும் நூலாக வெளிவந்திருக்கிறது.

பண்டைய வணிகம், வரிவிதிப்பு முறைகள், நிதிக் கொள்கைகள், காலனியக் கால நிதி நிர்வாக நடைமுறைகள், நவீனத் தமிழ்நாட்டின் நிதிநிலை அறிக்கைகள் ஆழமாக ஆராயப்பட்டுள்ளன.

மிக நேர்த்தியான வடிவமைப்பு, மாறுபட்ட அழகிய எழுத்துருக்கள், உயர்தர தாளில் செழுமையான அச்சு என இதுவொரு நூல் வடிவில் உருவாகி வந்துள்ள ஆவணக் காப்பகமாகத் திகழ்கிறது.

பல்வேறு நூற்றாண்டுகளாகத் தமிழர் நிதி நிர்வாகம் உருவாகி வளர்ந்த வரலாற்றையும், தமிழ் நிலத்தின் பொருளாதார அடையாளம் வடிவமைக்கப்பட்ட விதத்தையும் பற்றிய ஆழமான கண்ணோட்டத்தை நூலில் இடம்பெற்றுள்ள ஆய்வுக்கட்டுரைகள் வழங்குகின்றன.

நிதித்துறை முதன்மைச் செயலாளர் த. உதயச்சந்திரன் ஐஏஎஸ் வழிகாட்டுதலில் இந்த நிதி நிர்வாக ஆவணம் உருவாக்கப்பட்டுள்ளது. மிகப்பெரிய உழைப்பில் விளைந்த நல் விளைச்சலாக இந்த நூல் பிரமிக்க வைக்கிறது.

“இந்த புத்தகம் ஒரு கூட்டு உழைப்பு” என்று நூலுக்கான அணிந்துரையில் குறிப்பிடுகிறார் உதயச்சந்திரன்.

மேட்டூர் அணை குறித்த கட்டுரையில், மேட்டூர் அணைth திறப்பு விழா புகைப்படம் பார்த்து நெகிழ்ந்துபோனேன். தஞ்சாவூருக்கு நீர் அளக்கும் அன்னையல்லவா அது.

இன்னொரு புகைப்படம்: அண்ணா பல்கலைக் கழகத்தில் வா.செ. குழந்தைசாமியிடம் கம்ப்யூட்டர் பற்றி கேட்டறியும் பெரியார். இன்னும் எத்தனையோ ஆச்சரியங்கள் நூலின் பக்கங்களில் விரவிக்கிடக்கின்றன.

தாமஸ் மன்றோ: விவசாயிகளின் நண்பன் என்ற கட்டுரை எனக்கு மிகவும் பிடித்த வரலாற்றுத் தகவலாக இருக்கிறது.

அவர்தான் முதன்முதலில் விவசாயிகளுக்கான வரியை முறைப்படுத்தியதுடன் அதனை எளிமைப்படுத்தியுள்ளார்.

நாணயங்கள் எப்படி உருமாறி வந்திருக்கின்றன என்பதை விளக்கும் புகைப்படங்களைப் பார்க்கும்போது வரலாற்றுத் தொன்மங்களில் மறைந்துள்ள காலங்கள் கண்களில் மிதக்கின்றன.

இந்த நூலின் ஒவ்வொரு பக்கத்திலும் கூட்டுழைப்பு மிளிர்கிறது. இத்தொகுப்பின் வழியாக நூற்றாண்டுகால நிதிநிலை அறிக்கைகள் தமிழ்கூரும் நல்லுலகின் பார்வைக்கு வைக்கப்படுகின்றன.

384 பக்கங்கள், 54 கட்டுரைகள், அரிய புகைப்படங்கள் அடங்கிய தொகுப்பு. முன்தோன்றிய மூத்த குடி என்பது வெறும் சொல் அல்ல – செயல், ஒரு வரலாறு என்பதை நிதி நிர்வாகம் தொடர்பான வரலாற்றுச் சான்றுகளுடன் நிறுவுகிறது தமிழர் நிதி நிர்வாகம் என்ற இந்த அழகிய தொகுப்பு நூல்.

நூலாக்கக் குழுமை நாம் மனதாரப் பாராட்ட வேண்டும். பொறுப்பாசிரியர் ரெ. கோமகன், தொகுப்பாசிரியர்கள்: எம். ரமேஷ், ந. செல்லையா, செல்வ புவியரசன், த. ராஜன். உள்ளடக்க ஆய்வுகள் ஒருங்கிணைப்பு: இரா. சித்தானை வடிவமைப்பு: PAAR CREATIVE… இவர்களது பலநாள் உழைப்பின் வெற்றியை இப்பெருநூலில் பார்க்கமுடிகிறது.

வாழ்த்துகள்…

நூலை வாசிக்க:
https://www.tamildigitallibrary.in/book-detail.php…
ஆவணத் தொகுப்புக்கு:
https://www.tamildigitallibrary.in/budget

You might also like