மார்ச் 20: உலக சிட்டுக்குருவிகள் தினம்
ஊர்க் குருவி, அடைக்கலான் குருவி என்றழைக்கப்படும் சிட்டுக் குருவிகளைப் பார்ப்பதென்பது இன்று அரிதான விஷயம்.
ஆனாலும், ஒரு ஆண்டின் மிகச்சில மாதங்களில் மட்டும் அவை நமக்குக் காட்சி தருகின்றன. அதன்பிறகு காணாமல் போகின்றன. அவற்றைக் காண்பது ஒரு சுகானுபவம்.
ஒரு சிட்டுக்குருவியின் சிறகசைப்பை, தாவலை, பறப்பதற்கான எத்தனிப்பை உற்றுக்கவனிக்கும் போதெல்லாம் குழந்தையாகிவிடுவதே மனித இயல்பு. அது பறந்துபோனபிறகு நாம் பறக்கிற வானங்கள் வெவ்வேறாக இருக்கும்.
அதனை உணர்ந்தே என்னவோ, திரையிசையிலும் நிலா, மழை, வானம், மலர், காதல் என்ற வார்த்தைகளைப் போலவே சிட்டுக்குருவியும் ‘பாடுபொருளாக’ப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
பாடல் வரிகளில் ‘சிட்டுக்குருவி’!
ஏ.பி. நாகராஜன் கதை வசனத்தில் கே.சோமு இயக்கிய திரைப்படம் ‘டவுன்பஸ்’. 1955ஆம் ஆண்டு வெளியானது.
கே.வி.மகாதேவன் இசையமைத்த இப்படத்தில் ‘சிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா’ என்ற பாடலை எம்.எஸ். ராஜேஸ்வரி பாடியிருப்பார்.
குழந்தையின் மழலைத் தன்மை தெறிக்கும் அவரது குரலில் பல பாடல்களைக் கேட்டிருந்தாலும் இந்தப் பாடல் அவற்றில் இருந்து தனித்து நிற்கக்கூடியது.
இப்பாடலை எழுதியவர் கவிஞர் கா.மு.ஷெரீஃப். இது மகிழ்ச்சியாகவும் சோகமாகவும் பாடுகிற மாதிரி தனித்தனியாகப் படத்தில் இடம்பெற்றது.
1964ஆம் ஆண்டு வெளியானது ‘புதிய பறவை’. தாதாமிராசி இயக்கிய இந்தப் படத்திற்கு எம்.எஸ். விஸ்வநாதன் – டி.கே. ராமமூர்த்தி இணை இசையமைத்தது.
இதில் பி.சுசீலா பாடிய ‘சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து சேர்ந்திடக் கண்டேனே’ பாடல் இன்றும் டிஜேக்களால் ‘ரீமிக்ஸ்’ செய்யப்பட்டு இளைய தலைமுறையை ஆட்டுவிக்கிறது.
மல்லியம் ராஜகோபால் இயக்கிய ‘சவாலே சமாளி’ படத்தில் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் ‘சிட்டுக் குருவிக்கென்ன கட்டுப்பாடு’ பாடலை பி.சுசீலா பாடியிருந்தார்.
இவ்விரு பாடல்களையும் எழுதியவர் கவிஞர் கண்ணதாசன்.
எஸ்.பி. முத்துராமன் இயக்கத்தில் 1984ஆம் ஆண்டு வெளியானது ‘நல்லவனுக்கு நல்லவன்’. இதில் இளையராஜா இசையமைப்பில், கே.ஜே.ஜேசுதாஸ் பாடிய பாடல் ‘சிட்டுக்கு செல்ல சிட்டுக்கு சிறகு முளைத்தது’. இதனை எழுதியவர் நா.காமராசன்.
பாரதிராஜா இயக்கிய ‘முதல் மரியாதை’ படத்தில் திரைக்கதையின் ஒரு அங்கமாக ஒரு சிட்டுக்குருவியைக் காட்டி, ‘ஏ குருவி.. சிட்டுக்குருவி ஒஞ்சோடி எங்கே’ பாடலைத் தந்திருந்தார்.
இளையராஜா இசையமைப்பில் வைரமுத்து எழுதிய இப்பாடலை மலேசியா வாசுதேவன், எஸ்.ஜானகி பாடியிருந்தனர். இப்படம் 1985இல் வெளியானது.
அதே ஆண்டில் கே.பாக்யராஜ் இயக்கத்தில் இளையராஜா இசையமைப்பில் வெளியானது ‘சின்னவீடு’ திரைப்படம்.
அதில் ‘சிட்டுக்குருவி வெட்கப்படுது பெட்டைக்குருவி கத்துத் தருது’ பாடலை எழுதியிருந்தார் வைரமுத்து. எஸ்.பி.பாலசுப்பிரமணியம், எஸ்.ஜானகி பாடிய இப்பாடல் காதல் சுவை ததும்ப அமைந்திருந்தது.
1987ஆம் ஆண்டு வெளியானது ‘வீரபாண்டியன்’ திரைப்படம். சிவாஜி கணேசன், விஜயகாந்த், ஜெய்சங்கர், ராதிகா உள்ளிட்டோர் நடித்த இப்படத்தை கார்த்திக் ரகுநாத் இயக்கியிருந்தார்.
சங்கர் கணேஷ் இசையமைப்பில், வைரமுத்து எழுதிய ‘சிட்டுக்குருவி தொட்டுத் தழுவி’ பாடல் அக்காலகட்டத்தில் கவனிப்பைக் குவித்தது. மலேசியா வாசுதேவன் மற்றும் சித்ரா இதனைப் பாடியிருந்தனர்.
பாரதிராஜா இயக்கத்தில் இளையராஜா இசையமைப்பில், 1991ஆம் ஆண்டு வெளியானது ‘புது நெல்லு புது நாத்து’. இதில் ‘சிட்டான் சிட்டான் குருவி உனக்குத்தானே’ பாடலை எஸ்.ஜானகி, மனோ பாடியிருந்தனர். இதனை எழுதியவர் கங்கை அமரன்.
சுந்தர்.சி இயக்கிய ‘உள்ளத்தை அள்ளித்தா’ படத்தில் ‘சிட்டுச் சிட்டுக்குருவிக்கு கூடு எதுக்கு’ என்ற பாடலைத் தந்திருந்தார் இசையமைப்பாளர் சிற்பி. பழனி பாரதி எழுதிய இப்பாடலை மனோவும் சுஜாதாவும் பாடியிருந்தனர். 1996இல் இப்படம் வெளியானது.
அர்ஜுன் இயக்கத்தில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில், பாடலாசிரியர் பழனி பாரதி எழுதிய பாடல் ‘சிட்டுக்குருவி அருவியை குடிக்கப் பார்க்குது’. இதனை ஸ்வர்ணலதா, ஸ்ரீராம் பார்த்தசாரதி உடன் இணைந்து அர்ஜுனும் பாடியிருந்தார். இப்படம் 2003இல் வெளியானது.
தொடர்ந்த சிறகசைப்புகள்!
ஊர்குருவி போன்ற வேறு பெயர்களிலும் கூட சிட்டுக்குருவியை நினைவூட்டும் பாடல்கள் தமிழ் திரைப்படங்களில் இடம்பெற்றிருக்கின்றன.
சிட்டுக்குருவியை வைத்தே ‘பூஞ்சிட்டு குருவிகளா’ என்றொரு பாடலை ‘ஒரு தொட்டில் சபதம்’ படத்தில் தந்தார் இசையமைப்பாளர் சந்திரபோஸ். அவரே பாடிய இப்பாடலை எழுதியவர் கவிஞர் காமகோடியன்.
எடிட்டர் மோகன் கதை, தயாரிப்பில், பாரதி மோகன் இயக்கிய இப்படம் 1989ல் வெளியானது.
விஜய் கிருஷ்ணராஜ் இயக்கிய ‘வாழ்க வளர்க’ எனும் திரைப்படத்தில் ‘சிட்டுக்குருவி பாரு’ பாடலை எழுதி, பாடி, இசையமைத்திருந்தார் இசைஞானி இளையராஜா.
1987ஆம் ஆண்டு வெளியான இப்படத்தில் ராதாரவி, சரிதா, தீபா உடன் பாண்டியராஜன் முக்கிய பாத்திரத்தில் நடித்திருந்தார்.
பாசில் இயக்கத்தில் சத்யராஜ், சுஹாசினி, ரகுவரன், ரேகா நடித்த திரைப்படம் ‘என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு’.
இது 1988ஆம் ஆண்டு வெளியானது. இளையராஜா இசையமைத்த இத்திரைப்படத்தில் ‘ஏ சித்திர சிட்டுக்கள் சிவந்த மொட்டுக்கள் சிரிக்க கண்டேனே’ பாடலைப் பாடியிருந்தார் சித்ரா.
இது போக ‘சிட்டுக்குருவி’ என்றொரு திரைப்படம் 1978இல் வெளியானது. சிவகுமார் இரட்டை வேடத்தில் நடித்த இப்படத்தில் ஜெயசித்ரா, உமா, சுருளிராஜன், செந்தாமரை, எஸ்.என்.லட்சுமி உட்படப் பலர் நடித்தனர்.
இதில் வரும் ‘அடடடா மாமரக்கிளியே’ பாடலின் தொடக்கத்தில் சிட்டுக்குருவிகளின் கீச்சுக் குரலை ஒலிக்க விட்டிருப்பார் இளையராஜா.
இது போக ‘என்னைவிட்டுப் போகாதே’ படத்தில் ‘வாலாட்டும் ஊர்க்குருவி சின்ன தாலாட்டு சேர்த்திடுது’ எனும் பாடலைத் தந்திருந்தார் இளையராஜா. இதனை எழுதியதும் அவரே.
மனோ, சித்ரா இருவரும் பாடியிருந்தனர். ராமராஜன், சபீதா இதில் நாயகன் நாயகியாக நடித்தபோதும், அப்படத்தில் திலீப், ராசி இருவரும் பாடுகிற ‘டூயட்’டாகவே இது அமைந்தது.
இப்போது ஜென்ஸீ தலைமுறை ரசிக்கிற வகையில், தனுஷ் இயக்கிய ‘நிலவுக்கு என்னடி என்மேல் கோபம்’ படத்தில் ‘கோல்டன் ஸ்பாரோ’ பாடலைத் தந்திருக்கிறார் ஜி.வி.பிரகாஷ்குமார். அறிவு இந்தப் பாடலை எழுதியிருந்தார்.
இப்படி தமிழ் திரையுலகில் சிட்டுக்குருவி பல பாடல்களுக்கு முதல் வரியை அல்லது இடையே ஒரு உவமையாய் இருந்திருக்கிறது.
சரி, சிட்டுக்குருவியைப் பற்றி என்ன திடீர் நினைப்பு என்கிறீர்களா? வேறொன்றுமில்லை, மார்ச் 20ஆம் தேதியான இன்று ‘உலக சிட்டுக்குருவிகள் தினம்’ ஆகக் கடைபிடிக்கப்படுகிறது.
– மாபா