டாஸ்மாக்கில் ரூ.1000 கோடிக்கு முறைகேடு!

அமலாக்கத்துறை அறிக்கையால் பரபரப்பு

தமிழநாட்டில் இதுவரை ரூ.45.000 கோடி அளவுக்கு வருமானத்தை ஈட்டித் தரும் துறைகளில் ஒன்றாக இருக்கிறது கலால் துறை. இதன் அடுத்த கட்ட இலக்கு ரூ.50,000 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
திமுக ஆட்சிக்கு வரும் முன்பே, அதிமுக ஆட்சியின்போதும் டாஸ்மாக் விற்பனை குறித்த சந்தேகம் தொடர்ந்தே கொண்டே இருக்கிறது.
கொள்முதல் செய்வதிலும் முறைகேடு இருந்ததாக அதிமுக ஆட்சியிலும் குற்றச்சாட்டு எழுந்தது. திமுக ஆட்சிக்கு வந்தபிறகு அந்தக் குற்றச்சாட்டு தொடர்ந்தது.
குறிப்பாக, செந்தில்பாலாஜி இந்தத் துறைக்கு அமைச்சராக பொறுப்பேற்ற நிலையில், பாட்டிலுக்கு 10 ரூபாய் அதிகமாக விற்கப்படுவதாக, குடிமகன்கள் குற்றம் சாட்டினர்.
அதைத் தொடர்ந்து மதுபான ஆலைகளில் இருந்து கொள்முதல் செய்யும்போது குறைந்த விலைக்குக் கொள்முதல் செய்து அதிக விலைக்குக் கணக்குக் காட்டப்படுவதாக குற்றம் சாட்டப்பட்டது. அதோடு, கொள்முதல் செய்யும் மதுபான வகைகள் கணக்குக் காட்டாமலே விற்கப்படுவதாகவும் கூறப்பட்டது.
மறைமுகமாக நடக்கும் விற்பனை, கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதன் மூலம் ஆண்டுக்கு சில ஆயிரம் கோடிக்கு மது விற்பனை நடப்பதாக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகின.

 

வேறு ஒரு வழக்கில் சிறை சென்று திரும்பிய அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மீண்டு அதே துறை வழங்கப்பட்டதும் மீண்டும் சர்ச்சையானது.

அதைத் தொடர்ந்து மது விற்பனைக் கூடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்றது.

தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனத்தில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அமலாக்கத்துறை சோதனை நடந்தினாலும் எதிர்க்கட்சிகளால் கேள்வி எழுப்ப முடியவில்லை. இந்த நிலையில்தான் சென்னை எழும்பூரில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகம் உள்ளிட்ட 7 இடங்களில் அமலாக்கத்துறை கடந்த வாரம் 3 நாட்களாக சோதனை நடத்தியது.

இந்தச் சோதனை குறித்து தற்போது அமலாக்கத்துறை தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “தமிழ்நாடு மாநில சந்தைப்படுத்தல் கழகம் லிமிடெட் (TASMAC) மற்றும் அதனுடன் தொடர்புடைய நிறுவனங்கள்/நபர்கள் தொடர்பான பல்வேறு குற்றங்களுக்காக,

PMLA, 2002-ன் விதிகளின் கீழ், தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் உள்ள பல்வேறு இடங்களில் 06.03.2025 அன்று முதல் அமலாக்கத்துறை சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டது என்றும் அப்போது, பல்வேறு குற்றவியல் ஆவணங்கள் மீட்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன” எனத் தெரிவித்துள்ளது.

தொடர்ந்து வெளியிட்டுள்ள அறிக்கையில், “மதுபான கொள்முதல் மூலம் தனியார் மதுபான நிறுவனங்கள் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளன என்றும் சோதனையில் கணக்கில் வராத ரூ. 1,000 கோடிக்கும் மேல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்றும் முறைகேடுகளில் பல்வேறு தனியார் நிறுவனங்கள் ஈடுபட்டது தெரியவந்துள்ளது என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

பார் உரிம டெண்டர்களை ஒதுக்கியதில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளன. டாஸ்மாக் அதிகாரிகளின் உறவினர்களுக்கு டெண்டர் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மதுபான ஆலைகள் – டாஸ்மாக் அதிகாரிகள் இடையே நேரடி தொடர்பு இருந்துள்ளது. டிஸ்டில்லரிகள் மற்றும் பாட்டிலிங் நிறுவன சோதனையில் நிதி மோசடி தெரியவந்துள்ளது” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like