மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில், நாடாளுமன்றத் தொகுதிகள் மறுவரையறை செய்யப்பட உள்ளது. இதனால் தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் எம்.பி.க்கள் எண்ணிக்கை குறையும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.
தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கையால், தமிழகத்துக்கு ஏற்படப்போகும் பேராபத்தைத் தடுத்து நிறுத்தும் நோக்கில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 5-ம் தேதி அனைத்துக்கட்சி கூட்டத்தைக் கூட்டி இருந்தார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. 63 அரசியல் கட்சிகள் அழைக்கப்பட்டிருந்த நிலையில் 58 அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். அனைத்துக் கட்சிக் கூட்டத்தை பாஜக, நாதக, தமாகா, புதிய தமிழகம், புதிய நீதிக்கட்சி ஆகிய 5 கட்சிகள் புறக்கணித்தன.
இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற தலைவர்களிடம், தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கையால் தமிழகத்துக்கு ஏற்படப்போகும் பேராபத்தை, விளக்கி அனைத்துக் கட்சிகளின் ஒருமித்த ஆதரவைக் கோரினார் முதலமைச்சர் ஸ்டாலின்.
தென்னிந்திய மாநில முதலமைச்சர்களை ஒருங்கிணைத்து, தென்னிந்திய மாநிலங்களின் உரிமை பறிப்பிற்கு எதிரான போராட்டத்தை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கி நடத்த வேண்டும் என அனைத்துக் கட்சிகளும் கேட்டுக்கொண்டன.
இந்த விவகாரம் குறித்து, விழிப்புணர்வை ஏற்படுத்தவும், தென்மாநிலங்களில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட கட்சிகளின் பிரதிநிதிகள் அடங்கிய ‘கூட்டு நடவடிக்கைக் குழு’ ஒன்றை அமைத்திட கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, வரும் 22-ம் தேதி கூட்டு நடவடிக்கை குழுக் கூட்டம் சென்னையில் நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்ளுமாறு 6 மாநில முதலமைச்சர்களுக்கு, நமது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
மம்தா பானர்ஜி (மேற்கு வங்கம் ), ரேவந்த் ரெட்டி (தெலுங்கானா), பினராயி விஜயன் (கேரளா), சித்தராமய்யா, (கர்நாடகம்), பகவந்த் மான் (பஞ்சாப்), சந்திரபாபு நாயுடு (ஆந்திரா) ஆகிய முதலமைச்சர்களுக்கு இந்த கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
6 மாநில முதலமைச்சர்களுக்கு மட்டுமின்றி, தொகுதி மறுசீரமைப்பில் பாதிப்படைய வாய்ப்பு உள்ள 7 மாநிலங்களில் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவம் உள்ள பாஜக, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், தெலுங்கு தேசம், ஜனசேனா, பாரத் ராஷ்டிர சமிதி, ஒவைசியின் ஏஐஎம்ஐஎம், மதச்சார்பற்ற ஜனதாதளம், ஆம் ஆத்மி, சிரோமணி அகாலி தளம் உட்பட 29 கட்சிகளின் தலைவர்களுக்கும் இந்த கடிதம் அனுப்பப்பட்டுள்ளது
– பாப்பாங்குளம் பாரதி.
#கூட்டு_நடவடிக்கை_குழுக்_கூட்டம் #பாஜக #நாதக #தமாகா #புதிய_தமிழகம் #புதிய_நீதிக்கட்சி #முதலமைச்சர் #ஸ்டாலின் #bjp #puthiya_tamizhagam #puthiya_neethikatchi #cm_stalin