தமிழ் திரையுலகில் மிகச்சில சாதனையாளர்கள் மட்டும் எப்போதும் பேசுபொருளாக இருந்து வருகின்றனர். அதற்காகத் தனியாக அவர்கள் மெனக்கெடுவது கூட கிடையாது. ஆனாலும், தங்களது உழைப்பின் மூலமாக அதனை நிகழ்த்தி வருகின்றனர்.
அந்த உழைப்பு கவனம் பெறாமல் போனால்கூட, வரும் நாட்களில் அதற்குரிய மரியாதை கிடைக்கும் என்று கடந்து செல்கிற வழக்கம் அவர்களிடம் இருக்கும். அப்படியொருவராக இருந்து வருபவர் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா.
‘அரவிந்தன்’ படத்தின் வழியே யுவன் இசையமைப்பாளராக அறிமுகமாகி, இன்றோடு 28 ஆண்டுகள் ஆகின்றன. அப்படம் 1997, பிப்ரவரி 28 அன்று வெளியானது.
பிரமாண்டமான தொடக்கம்!
இசையமைப்பாளர் இளையராஜாவின் இளைய மகனான யுவன், சென்னை சாந்தோமில் உள்ள செயிண்ட் பேட் ஆங்கிலோ இந்தியன் உயர்நிலைப்பள்ளியில் படித்தவர். பத்தாம் வகுப்போடு பள்ளிக்கல்விக்கு ‘பை’ சொல்லிவிட்டு வீட்டில் இருந்தவரைத் தற்செயலாக ஒருநாள் சந்தித்திருக்கிறார் தயாரிப்பாளர் டி.சிவா. இளையராஜா, கார்த்திக் ராஜா உடன் அவர் பணிபுரிந்த காலமது.
அப்போது, விளையாட்டாக ‘என்ன யுவன் ஸ்கூல் போகலையா’ என்று தொடங்கிய சிவாவின் உரையாடல், ‘நீங்க படம் கொடுங்க நான் மியூசிக் பண்றேன்’ என்று யுவன் சொல்வதாக முடிவடைந்திருக்கிறது. அதற்கு இளையராஜாவும் பச்சைக்கொடி காட்ட, யுவனிசை சாம்ராஜ்யம் தொடங்கியது.
‘அரவிந்தன்’ படத்தின் தொடக்கமே பிரமாண்டமானதாக அமைந்தது. 1995-ம் ஆண்டு அதற்கான பூஜை நிகழ்ந்தது.
சரத்குமார், நக்மா, ஊர்வசி, பார்த்திபன், விசு, பிரகாஷ்ராஜ், ஆனந்தராஜ், திலகன், தலைவாசல் விஜய், டெல்லிகணேஷ், ஹேமந்த் ராவன், விஜய் கிருஷ்ணராஜ், பொன்னம்பலம், லியாகத் அலிகான் என்று மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளம் அதில் இடம்பெற்றிருந்தது.
அதுவரை விளம்பரப்படங்களில் பணியாற்றிய ரத்னவேலு, அப்படத்தின் வழியே பெரியதிரையில் ஒளிப்பதிவாளராக அறிமுகமானார். அப்படம் தமிழ், தெலுங்கு, இந்தியில் தயாராவதாக அறிவிக்கப்பட்டது. அந்த அளவுக்கு அறிமுக இயக்குனர் டி.நாகராஜன் சொன்ன கதை தயாரிப்பு தரப்பை திருப்திப்படுத்தியிருந்தது.
அதனால் மூன்று மொழிகளிலும் ‘அரவிந்தன்’ படத்திற்கு ஒரு ட்ரெய்லர் உருவாக்கப்பட்டு, அதற்குப் பின்னணி இசை அமைத்திருந்தார் யுவன். அது, அந்த விழாவில் காட்டப்பட்டது. மேலும் ‘ஆல் தி பெஸ்ட்’, ‘பூவாட்டம் காயாட்டம்’ பாடல்களைப் படபூஜைக்கு முன்னதாகவே தந்திருக்கிறார். அப்போது யுவனின் வயது 16.
பிரமாண்டமானத் தொடங்கப்பட்டாலும், ‘அரவிந்தன்’ வளர்வதில் கால தாமதம் ஏற்பட்டது. கிட்டத்தட்ட இரண்டாண்டு காலத்திற்குப் பிறகு திரையரங்குகளில் வெளியானது.
அந்த காலகட்டத்தில், ஒரு பதின்ம வயது நிரம்பிய சிறுவனாக யுவன் மனது என்ன யோசித்திருக்கும் என்று கற்பனை செய்து பார்க்கவே அச்சமாக இருக்கிறது. ’நம் திறமை உடனடியாக அங்கீகரிக்கப்பட வேண்டும்’ என்கிற வேட்கையைக் கட்டுக்குள் வைப்பது சாதாரண விஷயமில்லை. ’அரவிந்தன்’ வெளியானபோது, அவரது உழைப்புக்குத் தக்க பலன் கிடைக்கவில்லை.
முத்தான பாடல்கள்!
தஞ்சாவூர் மாவட்டத்தில் 1968-ல் நிகழ்ந்த ‘கீழ்வெண்மணி சம்பவத்தை’ அடிப்படையாகக் கொண்டது ‘அரவிந்தன்’ படக் கதை.
ஐபிஎஸ் அதிகாரியாக விரும்பும் நாயகன், தன்னைச் சுற்றியிருக்கும் ஏழை மக்கள் படும் துயரங்களைக் கண்டு அதிகார வர்க்கத்தை எதிர்த்துக் கேள்வி எழுப்புவராக மாறுவதுதான் அப்படத்தின் அடிப்படைக் கதை.
அதனை, அக்காலகட்டத்தில் இருந்த ‘கமர்ஷியல் பட கதை சொல்லலுக்கு’ ஏற்பத் திரையில் வடித்திருந்தார் இயக்குனர் நாகராஜ். திரைக்கதை ட்ரீட்மெண்டில் ‘கிளாசிக்’ படம் பார்க்கும் ‘டச்’ இருந்தாலும், அதற்கு நேரெதிரான இளமைக் கொண்டாட்டமாகப் பாடல்களை உணர்ந்தனர் ரசிகர்கள். அந்த முரண் இரண்டையுமே பாதிப்புக்கு உள்ளாக்கியது. படம் வெளியாவதற்கு முன்னர் கொண்டாடப்பட்ட பாடல்கள், அதன்பிறகு பெரிதாகக் கவனிக்கப்படாமல் போனது.
ஆனாலும் வேலை, கல்யாண கலாட்டா, பூவெல்லாம் கேட்டுப்பார் என்று அடுத்தடுத்த படங்களில் தன்னை நிரூபிக்க முயன்றார் யுவன். அதற்கான பலன் மிக மெதுவாகத் தெரியத் தொடங்கியது. 2001-க்குப் பிறகு அவரது ‘கேரியர்’ சிகரம் ஏறத் தொடங்கியபிறகு ‘அரவிந்தன்’ படப் பாடல்களைச் சிலாகிக்கும் ரசிகர்கள் பெருகத் தொடங்கினர்.
‘அரவிந்தன்’ படத்தில் ‘எவர்க்ரீன் ஹிட்’ ஆக இருப்பது ’ஈரநிலா’ பாடல். அதனைத் தொடர்ந்து இளமைத் துள்ளலைத் தருவதாக ‘ஆல் தி பெஸ்ட்’, ‘ஹேய் பொன்னம்மா’, ‘பூவாட்டம் காயாட்டம்’ பாடல்கள் இருந்தன. ‘தங்க சூரியன்’ பாடலும் தனக்கென்று சில ரசிகர்களைக் கொண்டிருந்தது. பழனி பாரதியோடு இணைந்து காதல் மதி, பார்த்தி பாஸ்கர் இதில் பாடல்கள் எழுதியிருந்தனர். இந்த ஆல்பத்திலுள்ள 7 பாடல்களை இன்று கேட்டால் முத்துகளாகத் தோற்றம் தரும்.
யுவனிசை என்றும் மலரும்!
2000-வது ஆண்டுக்குப் பிறகு துள்ளுவதோ இளமை, ஏப்ரல் மாதத்தில், காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, மன்மதன், கண்டநாள் முதல், கள்வனின் காதலி, பட்டியல், வல்லவன், தீபாவளி, பருத்திவீரன், சென்னை 28, கற்றது தமிழ், பில்லா, பையா, காதல் சொல்ல வந்தேன், பாஸ் என்கிற பாஸ்கரன், மங்காத்தா என்று யுவன் தந்த ஹிட் ஆல்பங்களின் எண்ணிக்கை மிக அதிகம்.
‘அரவிந்தன்’ டி.நாகராஜ், ‘வேலை’ ஜே.சுரேஷ் தொடங்கி சுமார் இரண்டு டஜனுக்கும் மேற்பட்ட அறிமுக இயக்குனர்களுடன் யுவன் கைகோர்த்திருக்கிறார். அவரால் கே.எஸ்.ரவிக்குமார், சுந்தர்.சி, ஹரி, லிங்குசாமி என்று நன்கு பிரபலமான ‘கமர்ஷியல்’ பட இயக்குனர்களோடும் கூட்டணி அமைக்க முடியும். சீனு ராமசாமி, சுசீந்திரன், சத்யசிவா, பாலாஜி மோகன் என்று வேறுபட்ட கதை சொல்லலைக் கொண்டவர்களோடும் இணைந்து பணியாற்ற முடியும்.
யுவனுக்குப் பெருமளவில் புகழைத் தந்திருக்க வேண்டிய காதல் சாம்ராஜ்யம், உள்ளம், பேசு, காதல் டூ கல்யாணம், பேய்பசி உள்ளிட்ட சில படங்களின் இசை திரையரங்குகளை எட்டவே இல்லை. அதுவே, ஒரு படத்தின் பட்ஜெட், நட்சத்திரக் கூட்டணி, புரோமோஷன் உத்திகளில் அவர் கவனம் செலுத்தவில்லை என்பதைச் சொல்லிவிடும்.
தனக்குப் போட்டியாக விளங்கும் சக இசையமைப்பாளர்களின் இசையில் பாடவும், அவர்களைத் தன்னிசையில் பாட வைக்கவும் யுவன் என்றுமே தயங்கியதில்லை.
இப்படி யுவனிடம் இருக்கிற நிறைகளைப் பட்டியல் இட்டுக்கொண்டே இருக்கலாம்.
கடந்த காலத்தில் யுவனுக்கு உறுதுணையாக இருந்த சிலர் இன்று காற்றில் கலந்துவிட்டனர். திரையிசையை ரசிக்கும் ‘ஜென்ஸீ’ தலைமுறையின் எதிர்பார்ப்புகள் வேறாக இருக்கிறது. இன்னும் சொல்ல ஏராளம் இருக்கிறது.
அவற்றைப் பின்னடைவுகளாகக் கருத முடியாது. அனைத்தையும் கடந்து ‘நான் வருகிறேன்’ என்று அவரது இசை நம்மை வந்தடைவது தொடர்ந்து கொண்டிருக்கிறது.
‘பட்டியல்’ படத்தில் அவர் தந்த பொக்கிஷம் ‘போகப் போக பூமி விரிகிறதே’ பாடல். அதனைக் கேட்கும்போதெல்லாம், எதிர்வீசும் காற்றை முகத்தில் ஏந்தியவாறே நில்லாமல் தொடர்கிற பயணமொன்றுக்கு மனம் தயாராகும். அப்படியொரு அனுபவத்தை யுவனிசை இனி வரும் நாட்களிலும் நமக்குப் பரிசளிக்கட்டும்..!
– மாபா