ஆபிசர் ஆன் ட்யூட்டி – நிறைவு தரும் ‘த்ரில்லரா’?!

ஒரு த்ரில்லர் திரைப்படம் என்ன செய்ய வேண்டும்? பரபரப்பூட்டுகிற வகையில் காட்சிகள் இருக்க வேண்டும். கதாபாத்திரங்கள் எத்தகைய பாதிப்புக்கு உள்ளாகுமோ என்று நாம் பதைபதைக்க வேண்டும். திரைக்கதை தொடங்கிய மிகச்சில நிமிடங்களிலேயே கதையோடு நாம் ஒன்றிவிட வேண்டும். இவற்றைத்தாண்டி, அப்படத்தில் தென்படும் வில்லத்தனம் படுபயங்கரமானதாக இருக்க வேண்டும். திரைக்கதையில் ஒளிந்திருக்கும் அது மெல்லத் தலை நீட்டுமாறு காட்சிகள் அமைய வேண்டும். மிக முக்கியமாக, படம் பார்க்கையில் அடிவயிற்றில் பயம் ஒரு ‘பந்து’ போல உருள வேண்டும்.

மேற்சொன்னவற்றைப் பூர்த்தி செய்யும் வகையில் அமைந்திருக்கிறது ஜித்து அஷ்ரஃப் இயக்கியுள்ள ‘ஆபிசர் ஆன் ட்யூட்டி’ திரைப்படம். குஞ்சாக்கோ போபன், பிரியாமணி, ஜெகதீஷ், விஷாக் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்திற்கு ஜேக்ஸ் பிஜோய் இசையமைத்திருக்கிறார். ஷாஹி கபீர் எழுத்தாக்கம் செய்திருக்கிறார்.

எப்படிப்பட்ட திரையனுபவத்தைத் தருகிறது ‘ஆபிசர் ஆன் ட்யூட்டி’?

‘த்ரில்’ ஊட்டும் கதை!

சில மாத இடைவெளிக்குப் பிறகு, ஒரு காவல்நிலையத்தில் இன்ஸ்பெக்டர் ஆக ஜாய்ன் செய்கிறார் ஹரிசங்கர் (குஞ்சாக்கோ போபன்). அதற்கு முன்னர், அவர் ஒரு டெபுடி சூப்பரிண்டண்ட் ஆக பணியாற்றியவர்.

அவர் ஏன் பதவி இறக்கம் செய்யப்பட்டார்? அதன் பின்னணி எப்படிப்பட்டது?

இந்த கேள்விக்குப் பதில் சொல்லும்விதமாக, அவர் பணியில் சேர்ந்த முதல்நாளே சில வழக்குகள் அவரைப் பிடித்தாட்டுகின்றன.

பேருந்தில் ஒரு மூதாட்டியிடம் இருந்து செயின் திருடிய வழக்கில் ஒரு பெண்ணின் வயிற்றில் எட்டி உதைத்து, அவர்தான் அதனைத் திருடியது என்பதை சக போலீஸ்காரர்களுக்கு அம்பலப்படுத்துகிறார். ஆனால், அப்பெண் கர்ப்பிணியாக இருப்பதாக உடன் வந்தவர் சொல்வதால் சக போலீஸ்காரர்கள் வயிற்றில் புளியைக் கரைக்கிறது.

ஆனால், ஹரிசங்கரோ எந்த ரியாக்‌ஷனும் காட்டுவதில்லை. அதுவே, அவரது மனநிலை குறித்து நாம் அச்சம் கொள்ளப் போதுமானதாக உள்ளது.

இந்த நிலையில், ஆஸ்பத்திரியில் இருக்கும் மனைவியின் ஆபரேஷனுக்காக நகையை அடகு வைக்கச் செல்கிறார் சந்திரபாபு (ஜகதீஷ்). ‘அது போலி நகை’ என்ற குற்றச்சாட்டின் பெயரில் நகைக்கடைக்காரர்களால் அவர் காவல்நிலையத்திற்கு அழைத்து வரப்படுகிறார்.

அரசுப் போக்குவரத்துக்கழகப் பேருந்தில் நடத்துனராக இருப்பவர் சந்திரபாபு.

அந்த வழக்கைத் தானே நேரடியாக இறங்கி விசாரிக்கத் தொடங்கும் ஹரிசங்கர், சந்திரபாபுவின் மகளே உண்மையான நகையை மாற்றி வைத்ததை அறிகிறார். அந்தப் பெண்ணை யாரோ ஒரு நபர் போதை மருந்து கொடுத்து பாலியல் அத்துமீறலுக்கு ஆளாக்கியதையும், அப்போது உண்மையான நகை காணாமல்போனதையும் தெரிந்துகொள்கிறார்.

அடுத்த நாள் காலையில், அப்பெண்ணை காவல் நிலையத்திற்கு அழைத்து வருமாறு சந்திரபாபுவிடம் கூறுகிறார். அவரோ, “என் பொண்ணை ஸ்டேஷனுக்கு கூட்டிட்டு வரமாட்டேன்” என்று சொல்லி ஹரிசங்கரோடு சண்டையிடுகிறார்.

அன்றிரவு, அந்தப் பெண் தூக்கிலிட்டுத் தற்கொலை செய்துகொள்கிறார். தகவல் அறிந்து அங்கு செல்லும் ஹரிசங்கருக்கு, அந்த காட்சியைக் கண்டதும் தலை சுற்றுகிறது. அவரது இதயத்துடிப்பே நின்றுவிடுவது போலிருக்கிறது.

அதேநேரத்தில், ’என் பொண்ணு செத்ததுக்கு, இவன் சொன்ன தவறான வார்த்தைகளே காரணம்’ என்று ஹரிசங்கரிடம் சண்டையிடுகிறார் சந்திரபாபு.

இதற்கிடையே, சந்திரபாபு வாங்கிய அசல் சங்கிலி எந்த இடத்தில் அடகு வைக்கப்பட்டுள்ளது என்று கண்டறியுமாறு கான்ஸ்டபிள்களிடம் சொல்கிறார் அந்த இன்ஸ்பெக்டர். அவர்களும் அவ்வாறே செய்கின்றனர்.

ஒரு அடகு கடையில் அந்த சங்கிலி இருப்பதை அறிகின்றனர். அதோடு இன்னும் இரண்டு சங்கிலிகள் அடகு வைக்கப்பட்டிருக்கின்றன.

அவற்றை அடகு வைத்தவர் ஒரு பெண்மணி. அவர் ஊரில் இல்லை.

அவற்றின் வடிவத்தைக் கொண்டு, அவை எந்தக் கடையில் வாங்கப்பட்டன என்பதை கான்ஸ்டபிள்கள் அறிகின்றனர்.

அதிலொன்று, பெங்களூருவில் சுமார் எட்டு மாதங்களுக்கு முன்னர் தற்கொலை செய்துகொண்ட ஒரு இன்ஸ்பெக்டரின் மகளுடையது. அவரிடம் சென்று ஹரிசங்கர் விசாரிக்கிறார். அப்போது, தான் எங்கு தவறவிட்டேன் என்று தெரியவில்லை என்கிறார் அப்பெண். அவர் சொல்லும்விதமே, ‘பொய் சொல்கிறார்’ என்பதை உணர்த்துகிறது.

அதன்பின்னர் இன்னொரு சங்கிலி யாருடையது என்றறிய முயற்சிக்கிறார். ஆனால், உண்மையை அறியும் கான்ஸ்டபிள்கள் அதிர்கின்றனர். காரணம், அந்த செயின் ஹரிசங்கர் பெயரில் வாங்கப்பட்டிருக்கிறது.

அது, சில மாதங்களுக்கு முன்னர்தான் தற்கொலை செய்து அகால மரணமடைந்த அவரது மகள் நிலாவினுடையது.

அந்த சம்பவத்தை நேரில் கண்ட அதிர்ச்சியில் சில நாட்கள் மனநல பாதிப்பை எதிர்கொண்டவர் ஹரிசங்கர்.

தன் மகளை போதை மருந்து கொடுத்துப் பாலியல் பலாத்காரம் செய்த நபர் தனது கஸ்டடியில் இருப்பது தெரிந்ததும், அவரை அடித்து துவைக்கிறார். அதில், ஷ்யாம் எனும் அந்த நபர் உயிரிழக்கிறார்.

அந்த கொலை வழக்கில், தானே அந்த குற்றத்தைச் செய்ததாகச் சொல்லி ஓய்வு பெற்ற இன்ஸ்பெக்டர் ஒருவர் ‘சரண்டர்’ ஆகிறார். அதனால், ஹரிசங்கர்  கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்கிறார்.

சந்திரபாபுவின் மகள் தற்கொலையான பின்னரே, தன் மகளைச் சீரழித்தவனின் பின்னால் ஒரு கும்பல் இருப்பதாக உணர்கிறார் ஹரிசங்கர்.

நிறைய இளம்பெண்களின் செயின்களை அவர்கள் பறித்திருக்கின்றனர் என்றால், இதன் பின்னிருக்கும் குற்றம் எத்தகையது? குற்றவாளிகள் எப்படிப்பட்டவர்கள்?

அவர்களைத் தேடிச் செல்கிறார் அந்த இன்ஸ்பெக்டர்.

அதே நேரத்தில், தங்களது நண்பன் ஷ்யாமைக் கொன்ற நபரைப் பழி வாங்கும் வேட்கையோடு பெங்களூருவில் இருந்து கேரளம் வந்திறங்குகிறது அந்த கும்பல்.

இந்த தேடுதல் வேட்டையில் முந்தியது யார்? அதன்பிறகு என்னவானது என்று சொல்கிறது ‘ஆபிசர் ஆன் ட்யூட்டி’யின் மீதிப்பாதி.

முதல் காட்சியிலேயே அந்த குற்றவாளிகள் எத்தனை கோரமானவர்கள் என்று உணர்த்திவிடுகிறது திரைக்கதை. அதனால், அதன்பிறகான காட்சிகள் நகர நகர நம் அடிவயிற்றில் பயம் ‘பந்தாக’ உருளத் தொடங்குகிறது.

இரண்டாம் பாதியில் அந்த பயத்தின் பின்னிருக்கும் நபர்கள் யாரென்று தெரிய வருகிறது. அவர்களது பின்னணியைச் சொல்வதில் பல திருப்பங்கள் புகுத்தப்பட்டிருப்பது, இப்படத்தினை சுவாரஸ்யம் மிக்கதாக மாற்றுகிறது. அதுவே இப்படத்தின் யுஎஸ்பி.

’கம்பீரமாய்’ குஞ்சாக்கோ போபன்!

’போலீஸ்கட்’ ஹேர்ஸ்டைலில் பின்புறமாக குஞ்சாக்கோ போபன் அறிமுகம் செய்யப்படும்போதே, இப்படத்தில் அவரது கதாபாத்திரம் எப்படிப்பட்டது என்று தெரிந்துவிடுகிறது.

அதில் வெளிப்படும் ‘அதிகார வன்முறை’யை மீறி அப்பாத்திரத்தின் தன்மையைக் கொஞ்சம் கொஞ்சமாகக் காட்சிகளில் நகர்வுகளூடே வெளிப்படுத்தியிருப்பது போபனின் நடிப்புத்திறனுக்கான சான்று. அதுவே ‘கம்பீரமிக்கதாக’ அவரது தோற்றத்தை மாற்றிவிடுகிறது.

பிரியாமணி, ஜகதீஷ், ஜெயா குரூப், வைஷாக் சங்கர் உள்ளிட்ட சிலர் இப்படத்தில் நடித்திருக்கின்றனர். அவர்களது பாத்திரங்களுக்கும் ஓரளவு முக்கியத்துவம் தரப்பட்டிருக்கிறது.

இன்னும் போலீசாராக, உயரதிகாரிகளாக, பாதிக்கப்பட்ட குடும்பத்தினராகச் சிலர் வந்து போயிருக்கின்றனர்.

அவர்களைத் தாண்டி வில்லத்தனம் செய்யும் கும்பலைச் சேர்ந்த விஷாக் நாயர், விஷ்ணு வாரியர், லேயா மம்மென், ஐஸ்வர்யா ராஜ், ரம்ஜான் முகம்மது மற்றும் அமித் ஈபன் ஆகியோர் நம்மை மிரட்சிக்கு உள்ளாக்குகின்றனர்.

இந்தப் படத்தின் எழுத்தாக்கத்தைக் கையாண்டிருக்கிறார் ஷஹி கபீர். தொடக்கத்தில் வரும் காட்சிகளின் வழியே குஞ்சாக்கோ போபன் பாத்திரத்தின் வாழ்வில் என்ன நிகழ்ந்தது என்றறிவதில் சிறிதாகக் குழப்பம் தென்படுகிறது. அதனைக் கடந்துவிட்டால், திரைக்கதை ‘ஜெட்’ வேகத்தில் நகர்கிறது.

முதல் பாதி முடியும்போது, ‘வாட் எ பிலிம்’ என்று சொல்ல வைத்திருக்கிறார் ஷஹி. இரண்டாம் பாதி அதற்கேற்ற வகையில் இல்லை.

என்றபோதும், ‘மொக்கை’யாக அமைந்து நம்மைச் சோதிக்கவில்லை. பின்பாதியில் வரும் சம்பவங்கள் அனைத்தையும் ஒரு புள்ளியில் கோர்க்கச் சிரமப்பட்டிருக்கிறது ஷஹி – இயக்குனர் ஜித்து அஷ்ரஃப் கூட்டணி.

ரோபி வர்கீஸ் ராஜின் ஒளிப்பதிவு, சமன் சாக்கோவின் படத்தொகுப்பு அதனை மறைத்து நேர்த்தியைக் கூட்ட உதவி புரிந்திருக்கிறது.

இதில் திலீப் நாத் தயாரிப்பு வடிவமைப்பைக் கையாண்டிருக்கிறார். மருத்துவமனை காட்சிகள் மற்றும் கிளைமேக்ஸ் காட்சிகள் நடைபெறும் இடத்தைத் தயார்படுத்தியதில் அவரது குழுவினரின் பங்களிப்பு அபாரம்.

ஜேக்ஸ் பிஜோயின் பின்னணி இசை காட்சிகளில் நிறைந்திருக்கும் உணர்வெழுச்சியை மேலேற்றுவதில் முக்கியப் பங்கு வகித்திருக்கிறது.

இது போக டிஐ, விஎஃப்எக்ஸ் ஆகியன ’வாவ்’ தரத்தில் கையாளப்பட்டிருக்கின்றன.

முதல் காட்சியிலேயே வில்லன் கூட்டம் எத்தனை கொடூரமானது என்று காட்டிவிட்டதால், நாயகனும் அவரது குடும்பத்தினரும் என்ன ஆவார்களோ என்ற பதைபதைப்பு நம்மைப் பிறாண்டுகிறது.

இரண்டாம் பாதியில் வரும் சில திருப்பங்கள் நமது கணிப்புகளைப் பொடிப்பொடியாக்கும்போது, ’ஆஹா’ என்றிருக்கிறது.

அதையும் மீறி, கடைசி அரை மணி நேரக் காட்சிகளில் சில ‘டீட்டெய்லிங்’ விடுபட்டுப் போயிருப்பதாகத் தோன்றுகிறது. அந்த குழப்பம் ஏற்படாதவாறு இருக்க, திரைக்கதையில் கொஞ்சமாய் நிதானத்தைக் கடைப்பிடித்திருக்கலாம்.

ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், தமிழில் நாம் கண்ட ‘வேட்டையாடு விளையாடு’, ‘நான் மகான் அல்ல’, ‘100’ உள்ளிட்ட சில ‘க்ரைம் த்ரில்லர்’களின் சாயல் தெரிந்தாலும், படத்தின் பெரும்பாலான காட்சிகளில் பரபரப்பை நிறைத்து ’ஒரு நிறைவான த்ரில்லர்’ பார்த்த திருப்தியை ஏற்படுத்துகிறார் ஜித்து அஷ்ரஃப்.

இதே திரைப்படத்தைத் தமிழிலோ, தெலுங்கிலோ எடுத்திருந்தால் என்ன பட்ஜெட் ஆகும்? தயாரிப்பு நிறுவனங்கள் அந்த வித்தியாசத்தைக் கணக்கிட வேண்டும்.

திரையில் தெரியும் உள்ளடக்கத்திற்காகச் செலவழிக்கும் போக்கு குறைந்து வருவதாகச் சொல்லப்படும் காலகட்டத்தில், ‘ஆபிசர் ஆன் ட்யூட்டி’ போன்ற படங்கள் நடுத்தர பட்ஜெட்டில் பிரமாண்ட அனுபவத்தைத் தருவது சாதாரண விஷயமில்லை. அதற்காகவாவது, நாம் இந்த படத்தைக் காண வேண்டும்..!

  • உதயசங்கரன் பாடகலிங்கம்

 

You might also like