தயாராகிறது ‘த்ரிஷ்யம்‘ மூன்றாம் பாகம்!

தொடரும் மோகன்லால் கூட்டணி

எப்போதுமே மெச்சத்தகுந்த படைப்புகளைக் கொடுத்துக் கொண்டிருப்பது – மலையாள சினிமா உலகம். கதையின் களம் எதுவாக இருந்தாலும், அதனை நகர்த்திச் செல்லும் நேர்த்தி, மலையாள இயக்குநர்களுக்கு கை வந்த கலை.

7 ஆண்டுகளுக்கு முன் வெளியான ‘த்ரிஷ்யம்’ ஓர் ஆகச்சிறந்த உதாரணம். புதிய உயரங்களை எட்டிய அந்த படம், ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மலையாளத்தில் 2013-ம் ஆண்டு வெளியானது. மோகன்லாலும் மீனாவும் பிரதான வேடங்களில் நடித்திருந்தனர்.

ஜார்ஜ் குட்டி எனும் சராசரி மனிதன் தனது குடும்பத்தைப் பாதுகாக்க எதிர்கொள்ளும் சவால்களே த்ரிஷ்யம் படத்தின் மூலக்கரு. ஆசிர்வாத் சினிமாஸ் சார்பில், அந்தோணி பெரும்பாவூர் தயாரித்திருந்தார். மலையாளத்தில் 150 நாட்களைக் கடந்து ஓடியது. அரபு நாடுகளில் 125 நாள் ஓடியது.

தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, சிங்களம், உள்ளிட்ட மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. சீன மொழியில் ரீமேக் செய்யப்பட்ட முதல் இந்தியப் படம் இது.

தமிழில் ‘பாபநாசம்’ என்ற பெயரில் தயாரான இந்த படத்தில் கமல்ஹாசன், ஹீரோவாக நடித்தார். அவரது கேரக்டர் பெயர் சுயம்புலிங்கம். ஆம்.. மலையாளத்து ஜார்ஜ் குட்டி, தமிழில் ‘சுயம்புலிங்கம்’ என பெயர் மாற்றிக்கொண்டு நெல்லை தமிழ் பேசினார். 2015-ம் ஆண்டு வெளியான ‘பாபநாசம்’ பெரிய வெற்றியை அடைந்தது.

கேரள தேசத்தில் ‘த்ரிஷ்யம்‘ படத்தின் வசூலை எந்த மலையாளப் படமும், இதுவரை முறியடிக்கவில்லை. இதற்கு முன் வசூலில் ‘ரிகார்ட் பிரேக்’ செய்திருந்த படம், மோகன்லாலின் ‘புலி முருகன்’. அதனை மிஞ்சியது த்ரிஷ்யம்’.

முதல் பாகத்தின் தொடர்ச்சியாக, ‘த்ரிஷ்யம் 2’ உருவாகி அதுவும் வரவேற்பைப் பெற்றது. 2021-ம் ஆண்டு வெளியான இரண்டாம் பாகம் தியேட்டர்களில் ரிலீஸ் ஆகவில்லை. அமேசான் ஓடிடி தளத்தில் வெளியானது. இரண்டாம் பாகத்தை கன்னடத்தில் நம்ம ஊர் இயக்குநர் பி.வாசு டைரக்ட் செய்தார்.

தெலுங்கில் ஜீத்து ஜோசப்பே இயக்கினார். இந்த கதையின் இறுதி பாகமாக ‘த்ரிஷ்யம் 3’ வெளிவரும் என சில மாதங்களுக்கு முன்பு ஜீத்து ஜோசப் அறிவித்திருந்தார்.

இதனால், ‘த்ரிஷ்யம் 3’ எப்போது தொடங்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இருந்து வந்தது. இதற்கு மோகன்லால் பதில் அளித்துள்ளார். மோகன்லால் தனது எக்ஸ் தளத்தில் ‘த்ரிஷ்யம் 3’ படம் உருவாவதை உறுதி செய்துள்ளார்.

“கடந்தவை எதுவும் அமைதியாக இருக்காது. ‘திரிஷ்யம் 3’ உறுதி” என்று பதிவிட்டு ஜீத்து ஜோசப், ஆண்டனி பெரும்பாவூர் ஆகியோருடன், தான் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.

மூன்றாம் பாகத்திலும் ஜீத்து ஜோசப்–மோகன்லால்–அந்தோணி கூட்டணி இணைகிறது.

இந்த மூவர் அணி தவிர, படத்தின் மற்ற நடிகர்-நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் விவரம் தெரியவில்லை.

– பாப்பாங்குளம் பாரதி

You might also like