தமிழ் திரையுலகில் மிக பிஸியான நடிகராக வலம் வருபவர் தனுஷ். தமிழ், தெலுங்கு, இந்தி என்று வெவ்வேறு மொழி, வெவ்வேறு வகைமைகளில் அமைந்த படங்களில் நடித்து வருபவர். ரசிகர்களை ஈர்க்கிற வசீகரிக்கிற வகையில் கனகச்சிதமாகத் தனது படங்களைத் தேர்ந்தெடுத்தவர். அப்படிப்பட்டவர் ப.பாண்டி, ராயன் படங்களுக்குப் பிறகு ஒரு படத்தை இயக்குகிறார்; அது காதல் வகைமையில் அமைந்த படம்.
அந்தப் படத்தில் தலைகாட்டாமல் வெறுமனே டைரக்ஷனை மட்டுமே கவனிக்கிறார் என்றால் எதிர்பார்ப்பு இன்னொரு திசையில் உயரும் தானே. அப்படியொரு எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிற வகையில், ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படத்தைத் தந்திருக்கிறார் தனுஷ்.
ஏற்கனவே பாடல்கள், ட்ரெய்லர் வெளியாகி ஹிட்டான காரணத்தால், இன்று வெளியான அப்படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. அதனைப் பூர்த்தி செய்திருக்கிறதா ‘நி.எ.எ.கோ’.
எப்படியிருக்கிறது இது தரும் திரையனுபவம்?
நி.எ.எ.கோ. கதை!
டைட்டிலில் ‘டேக்லைன்’ ஆகச் சொல்வது போல, இப்படம் ஒரு வழக்கமான காதல் கதை.
காதல் தோல்வியால் ஓராண்டுக்கும் மேலாக துவண்டு போயிருக்கும் பிரபுவிடம் (பவிஷ்), சீக்கிரம் திருமணம் செய்யுமாறு நச்சரிக்கின்றனர் அவரது பெற்றோர் (சரண்யா, ஆடுகளம் நரேன்). ஒருநாள் ப்ரீத்தி (பிரியா பிரகாஷ் வாரியர்) எனும் பெண்ணைக் காண்கின்றனர்.
பிரபுவைக் கண்டதும் ‘டேய் நீயா’ என்கிறார் ப்ரீத்தி. ‘ஸ்கூல்மேட்’ என்ற காரணத்தால் பிரபுவிடம் மனம் விட்டுப் பேசுகிறார். ஒரு வார காலத்திற்குப் பிறகு, இருவரும் ஒருவரையொருவர் புரிந்துகொண்டு, விட்டுக்கொடுத்து வாழ்ந்துவிட முடியும் என்று நம்புகின்றனர்.
அப்போது, தனக்கு ஒரு காதலன் இருந்ததாகப் ப்ரீத்தி சொல்ல, பதிலுக்கு தனக்கும் ஒரு காதலி இருந்ததாகக் கூறுகிறார் பிரபு. ‘இப்போது அந்தக் கதை வேண்டாம், என்றாவது ஒருநாள் பேசுவோம்’ என்று இருவருமே கூறுகின்றனர்.
ஆனால், பிரபு அதனை உடனடியாகச் சொல்ல வேண்டிய சூழல் உருவாகிறது.
நிலா (அனிகா சுரேந்திரன்) என்ற பெண் தான் பிரபுவின் முன்னாள் காதலி. இருவருக்கும் ‘பிரேக் – அப்’ ஆகி ஓராண்டு ஆகிறது.
அந்த நிலாவின் திருமண அழைப்பிதழைக் கண்டதும் மனமொடிந்து போகிறார் பிரபு. அதனை அறியும் ப்ரீத்தி, அவர்களது காதல் கதையைக் கேட்கிறார். இருவரது பிரிவுக்குப் பின் இருக்கும் உண்மையை அறிகிறார். அந்த உண்மை என்னவென்பது நிலாவுக்குத் தெரியாது.
அனைத்தும் தெரிந்தபிறகும், ’கோவாவில் நடக்கும் அந்த திருமணத்திற்குச் சென்றுவா’ என்று பிரபுவை அனுப்பி வைக்கிறார். அதன்பிறகு அவர் மீது காதல் இல்லை என்றால் நாம் திருமணம் செய்துகொள்ளலாம் என்கிறார் ப்ரீத்தி.
உயிர் நண்பன் ராஜேஷுடன் (மேத்யூ தாமஸ்) கோவா செல்கிறார் பிரபு. அதன்பிறகு என்னவானது? பிரபுவின் மீதான காதலை நிலாவால் முழுமையாகத் தூக்கியெறிய முடிந்ததா? ’காதல் நீதானா’ என்று அவர் யாரைப் பார்த்து சொன்னார்?
இது போன்ற பல கேள்விகளுக்குப் பதிலளிக்கிறது ‘நி.எ.எ.கோ.’ படத்தின் மீதி.
ஆங்காங்கே சிரிப்பு!
தனுஷின் சகோதரி மகன் பவிஷ், இதில் நாயகனாக அறிமுகம் ஆகியிருக்கிறார். நிச்சயமாக, ‘துள்ளுவதோ இளமை’யில் தனுஷ் அறிமுகமானதைவிடப் பல மடங்கு சிறப்பான ஈடுபாட்டையும் உழைப்பையும் கொட்டியிருக்கிறார்.
மீசையின்றி மழுமழு முகத்துடன் வந்து போயிருக்கிறார். நல்ல வசன உச்சரிப்பு, நடனமாடும் திறன், அழுகையை வெளிப்படுத்தும் நடிப்பு என்று பலவற்றில் ‘சிறப்பான’ வெளிப்பாட்டைக் கொண்டிருக்கிறார். அடுத்தடுத்த படங்களில் சிறப்பான கதைகளைத் தேர்வு செய்யும் பட்சத்தில் தொடர் வரவேற்பைப் பெற வாய்ப்பிருக்கிறது.
மலையாள நடிகர் மேத்யூ தாமஸ், இதில் காமெடியன் போல முதல் பாதியில் வந்து போயிருக்கிறார். ‘என்னடா இவரை வேஸ்ட் பண்ணிட்டாங்க’ என்று யோசித்தால், பின்பாதியை அவர்தான் தாங்கிப் பிடித்திருக்கிறார். அவரது ‘காமெடி டைமிங்’ அபாரம். குரல்தான் சற்று பிசிறடிக்கிறது.
பவிஷ் உடன் வரும் மேத்யூ வரும் காட்சிகள் குறிப்பிட்ட இடைவெளிகளில் நம்மைச் சிரிக்க வைக்கின்றன.
’விஸ்வாசம் படத்தில் அஜித்தின் குழந்தையாக நடித்தவரா இவர்’ என்று கேட்குமளவுக்கு இதில் வந்து போயிருக்கிறார். அனிகா சுரேந்திரன் கடைசி கட்ட காட்சிகளில் அவரது நடிப்பு பிரமாதம்.
பிரியா பிரகாஷ் வாரியருக்கு இதில் பெரிதாக வேலையில்லை. போலவே, ‘இன்ஸ்டா’ புகழ் ரம்யா ரங்கநாதனும் ‘ஜஸ்ட் லைக் தட்’ வந்து போயிருக்கிறார்.
வெங்கடேஷ் – ரபியா கதூன் ஜோடி இப்படத்தில் கலக்கியிருக்கிறது. அதுவும் மேத்யூ தாமஸ் அவர்களோடு வரும் காட்சிகளை மீண்டுமொரு முறை பார்க்க வேண்டும் என்கிற அளவுக்கு இருக்கிறது இருவரது நடிப்பு.
இது போக சரத்குமார், ஆடுகளம் நரேன், சரண்யா உடன் சித்தார்த்தா சங்கர் உள்ளிட்ட சிலர் இதில் நடித்துள்ளனர். அப்பாத்திரங்களாக மட்டுமே தென்படுகின்றனர்.
பிரியங்கா மோகன் ‘கோல்டன் ஸ்பாரோ’ பாடலுக்கு ஆடியிருக்கிறார்.
மீடியம் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம் என்பதைத் தொடக்கத்தில் வரும் சில காட்சிகள் நிரூபிக்கின்றன. பின்பாதியில் அது பற்றிய சிந்தனை எழாமல் பார்த்துக் கொள்கிறார் கலை இயக்குனர் ஜாக்கி.
லியோன் பிரிட்டோவின் ஒளிப்பதிவு, திரையில் ‘ரிச்’ லுக்கை உணர வைத்திருக்கிறது.
நீரோட்டம் போலச் செல்கிற கதையைத் திரையில் சரியாகக் கடத்தியிருக்கிறது ஜி.கே.பிரசன்னாவின் படத்தொகுப்பு.
முன்பாதியில் தனுஷின் பழைய படங்களைப் பார்த்த உணர்வைப் பின்னணி இசையில் தந்திருக்கிறார் ஜி.வி.பிரகாஷ்குமார். நல்லவேளையாகப் பின்பாதியில் அந்த அனுபவம் கிடைக்கவிடாமல் செய்திருக்கிறார்.
பாடல்கள் ஏற்கனவே ஹிட்டாகி விட்ட காரணத்தால், பாடல் காட்சிகளின்போது எவரும் ‘பாப்கார்ன்’ வாங்க எழுந்து செல்லவில்லை.
இந்தப் படத்தை எழுத்தாக்கம் செய்து இயக்கியிருக்கிறார் நடிகர் தனுஷ். ட்ரெய்லரில் வந்தது போன்று படத்தில் ஒரு காட்சியில் கூட அவர் இடம்பெறவில்லை.
தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் நடிப்புக் கலைஞர்களைச் சரியான முறையில் ஒருங்கிணைத்து, ஒரு ‘பீல்குட் ரொமாண்டிக் மூவி’ பார்த்த அனுபவத்தைத் தர முயற்சித்திருக்கிறார் தனுஷ். இதற்காகவே நிறைய ஹாலிவுட் படங்கள் பார்த்திருப்பாரோ என்றெண்ண வைத்திருக்கிறார்.
எழுத்தாக்கத்தைப் பொறுத்தவரை, முதல் 20 நிமிடக் காட்சிகள் மனதோடு ஒட்டப் படாத பாடு படுகின்றன. அதன்பிறகு, பிளாஷ்பேக் வந்ததும் ‘ஓகே’ என்று மனம் ஆசுவாசப்படுகிறது.
‘அரவிந்த் – நிலா’ பாத்திரங்களின் திருமணத்தில் ஏன் இருவரது நண்பர்கள் மட்டுமே இடம்பெறுகின்றனர் என்பதற்கு வசனத்தின் வழியே பதில் சொல்லியிருக்கிறார் தனுஷ். அது போன்று லாஜிக் மீறல்களைச் சரியாகக் கணித்து கையாண்டிருக்கிறார்.
அரவிந்த் பாத்திரம் குறித்து தியேட்டரில் எவரும் ‘கமெண்ட்’ அடித்துவிடாதபடி மேத்யூ தாமஸ், வெங்கடேஷ் பாத்திரங்களே கலாய்க்கும் வகையில் வசனம் அமைத்திருக்கிறார்.
இப்படிப் பல விஷயங்கள் செய்தவர், திரைக்கதையில் பவிஷ் பாத்திரத்தைப் பல பெண்கள் சுற்றி வருவது போன்று ஏன் வடிவமைத்தார்? தெரியவில்லை.
இதற்குப் பின் வருபவை ‘ஸ்பாய்லர் ரகம்’ என்பதால், ‘அது வேண்டாமே’ என்பவர்கள் தவிர்த்துவிடலாம்.
‘நி.எ.எ.கோ.’ படமானது இன்றைய இளைய தலைமுறையைக் குறிவைத்து எடுக்கப்பட்டிருக்கிறது. பல காட்சிகளில் பாத்திரங்கள் மது சாப்பிடுவது காட்டப்பட்டிருக்கிறது. ‘அது தேவையா’ என்ற கேள்வி எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.
அதேநேரத்தில், செக்ஸ் குறித்த கமெண்ட்கள் இதில் அதிகம் இடம்பெறவில்லை. அது நிச்சயம் குடும்பத்தோடு படம் பார்க்க வருபவர்களை இடையூறுக்கு உள்ளாக்காது.
இப்படத்தின் காட்சியமைப்பில், திரைக்கதை வார்ப்பில் பல இடங்கள் ’open ended’ ஆக இருக்கின்றன. அது, இப்படம் அடுத்தடுத்த பாகங்களைக் காணும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது. அதற்கு வாய்ப்பிருப்பதாக, படத்தின் இறுதியில் வரும் டைட்டில் காட்சியில் சொல்லிவிடுகிறார் தனுஷ்.
அந்த ஒரு விஷயம் மட்டும் இல்லை என்றால், இது முந்தைய தலைமுறைக்கான படமாக இருந்திருக்கும். மற்றபடி, இதில் ‘க்ரிஞ்ச்’ என்று சொல்லத்தக்க வகையில் சில விஷயங்கள் இருக்கின்றன.
’ஆண், பெண் என்று பெரிய நட்புக்கூட்டத்தைச் சுற்றி நடக்கும் இளமைத் துள்ளல் கதை’ என்று இப்படத்தின் ஸ்டில்கள், விளம்பரங்கள் பார்த்து ஒரு எதிர்பார்ப்பு மேலெழும். அதனைச் சுமந்துகொண்டு வந்தவர்களுக்கு இப்படம் ஏமாற்றம் தரும்.
‘பிரேமலு’ மாதிரி ’எவர்க்ரீன் காமெடி படமாக’ இருக்கும் என்றெண்ணியவர்களையும் இது ஏமாற்றிவிடும்.
அதேநேரத்தில், தனுஷ் சொன்ன அளவுக்கு இல்லாவிட்டாலும் ‘நி.எ.எ.கோ.’ படத்தை ஜாலியாக சென்று கண்டு வரலாம். ’அது போதும்’ என்பவர்களுக்கு, கூட்டமாகச் சேர்ந்து ஆரவாரத்துடன் படம் பார்க்க வேண்டும் என்பவர்களுக்கு ஏற்றது இப்படம்!
– உதயசங்கரன் பாடகலிங்கம்