காமமே இல்லாத காதலும் உண்டு!

Swathi Mutthina Male Haniye (முத்துவைப் பிறப்பிக்கும் மழைத் துளி) கன்னடப் பட விமர்சனம்:

கல்லிலும் ஈரம் கசியச் செய்யும் காவியத்தைப் பார்த்தபின் எதிலிருந்து தொடங்குவதெனத் தெரியாமல் எழுதி எழுதி அழித்துக் கொண்டிருக்கிறேன்.

இரண்டே இரண்டு முக்கிய கதாபாத்திரங்கள்! ஐந்தாறு துணைக் கதாபாத்திரங்கள்! ஒரு வீடு, ஒரு மருத்துவமனை, ஒரு ஏரி இவற்றை மட்டுமே வைத்துக் கொண்டு இரண்டு மணி நேர படத்தை – கண்ணிறைந்த பசுமைக் காட்சிகளோடு – காலத்தால் அழியாத காவியமாகக் கொடுக்க முடியுமா? முடியும் என்று நிரூபித்திருக்கிறது இப்படம்!

கண்டதும் காதல், கடிதக் காதல், சொல்லாமலே காதல் என்று எத்தனையோ காதல்களைப் பார்த்த திரை உலகுக்கு, “இம்மியளவும் காமம் இல்லாத ஒரு காதலும் இங்கே இருக்குடா” – என்று பொட்டில் அடித்தாற்போல் சொல்லி இருக்கும் இப்படத்தின் கதாநாயகனும் இயக்குனருமான ராஜ் பி செட்டி (Raj.B. Shetty)-யை எவ்வளவு பாராட்டினாலும் தகும்!

‘ஆண்-பெண் நட்பிலேயே மெல்லிய கோடளவாவது காமம் இருக்கும்’ என்று வாதிடுபவர்கள் அவசியம் இந்தப் படத்தைப் பார்க்க வேண்டும்!

வட்டிலிலும் தொட்டிலிலும் மார் மேலும் தோள் மேலும் கட்டிலிலும் வைத்தென்னைக் காதலித்து – என்றெனக்கு பட்டினத்தாரின் பாடலை பிஞ்சு வயதில் சொல்லிக் கொடுத்த என் (தந்தை) லட்சுமணன் “காதல் என்றால் அன்பின் அதீதம்!” என்றே பொருள் சொன்னார்!

அதற்கு இலக்கணம் வகுப்பது போல, கொடிய நோயின் பிடியில் சிக்கி வலியால் துடித்துக் கொண்டிருக்கும் ஒருவனுக்கும் – மரணம் நிச்சயிக்கப்பட்ட அவனிடமிருந்து தனக்கு ஒரு முத்தம் கூட கிடைக்காது என்று தெரிந்த ஒருத்திக்கும் அதாவது, காமம் என்ற எதிர்பார்ப்புக்கு இடமே இல்லாமல் – தாய்மை உணர்வுடன் உன்னதமான ஒரு காதல் மலரும் என்பதை பறைசாற்றியிருக்கிறது இப்படம்!

இந்த நேரத்தில்,
“காமம் இல்லாமல்
காதலே இல்லை என்கிறாய்!
கண்களில் நிழலாடுகிறது
கழுத்துக்குக் கீழே
உணர்வற்றுப்போன ஒருத்தியை
கால் நூற்றாண்டாக
முதுகில் சுமந்தபடி வாழும்
பிச்சைக்காரரின் முகம்!”
– என்று, எப்போதோ நான் எழுதிய கவிதை ஒன்று நினைவில் வருகிறது!

குடும்ப அமைப்பு, உறவுகளின் துரோகம், குடும்பப் பெண்களின் அவல நிலை, வாழ்க்கையின் நிலையாமை, எப்படி வாழ வேண்டும் என்ற தத்துவம், ஒரு நாட்டு நாயை வளர்ப்பதை ஒப்பிட்டு படத்தின் மையக் கருவை விவரித்த விதம் என – Swathi Mutthina Male Haniye (சுவாதி முத்து மழைத் துளிகள்) என்ற இந்தச் சிப்பிக்குள் தான் எத்தனை எத்தனை முத்துக்கள்?!

இப்படத்தின் நாயகனும் இயக்குனருமான அந்த மனிதனைப் பேட்டியெடுக்க வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது! அதற்கு வாய்ப்புக் கிடைக்குமா தெரியவில்லை! 

நன்றி: வாசுகி லட்சுமணன் முகநூல் பதிவு

You might also like