நூல் அறிமுகம்: முரட்டு இளைஞன் மார்க்ஸ், ‘மூலதன’ அறிஞனான கதை
என்று நூலைத் ‘தீக்கதிர்’ நாளிதழின் முன்னாள் ஆசிரியர் தோழர் வே. மீனாட்சி சுந்தரம் அவர்கள் எழுதியுள்ளார்.
இப்புத்தகத்தின் வெளியீட்டு விழா, அண்மையில் சென்னை ‘கேரள சமாஜம்’ அரங்கத்தில் நடைபெற்றது.
இதில் இந்திய மார்க்சிஸ்டுக் கம்யூனிஸ்டுக்கட்சியின் வடசென்னை, தென் சென்னை, மத்திய சென்னை ஆகிய மூன்று மாவட்டச் செயலாளர்களும் கலந்து கொண்டு தத்தம் கருத்துக்களை முன் வைத்தது மிகச் சிறப்பானதாகும்.
இந்த நூலிற்கான ‘ஆசிரியரின் விளக்கம்’ பகுதியில் மோடியைக் கடவுளின் அவதாரம் எனச் சங்கிகள் சித்தரிப்பது போல், நாமும் “மார்க்சிய மாமேதைகள் பிறக்கிறார்கள், உருவாவதில்லை; என்று நம்பிவிடக் கூடாது” என்று ஆசிரியர் கூறுகிறார்.
இந்தநூல் அறிமுகக் கூட்டத்தில் இந்தப் புத்தகத்தை அறிமுகம் செய்து வைத்த தோழர்களில் இந்திய மாணவர் சங்கத்தின் (SFI) வடசென்னை மாவட்டத்தலைவர் தோழர்.
அகல்யா, மத்திய சென்னை மாவட்டத்தலைவர் தோழர். எஸ். மிருதுளா, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் (DYFI) தென் சென்னை மாவட்டத்தலைவர் என்.குமரன் ஆகிய அனைவரும் மிகவும் படித்த – வயது முதிர்ந்த – தோழர்களுக்கான அனுபவத்துடன் இந்தப் புத்தகத்தை அறிமுகம் செய்து வைத்துப்பேசியபோது நான் உண்மையில் அசந்துபோனேன்.
20, 25 வயதிலேயே இத்தகைய முதிர்ந்த அனுபவம் இவர்களுக்கு எவ்வாறு கிடைத்தது என்று பார்க்கும்போது பிரமிப்பாக உள்ளது. எல்லாம் மார்க்சியம் கற்றுத்தந்த பாடம் தான்.
அந்த நூலில் கிட்டத்தட்ட 34 பக்கங்கள் மார்க்ஸ் – ஜென்னியின் காதலைப் பற்றி மிக அருமையாக விவரிக்கிறார் இந்நூலாசிரியர்.
இவருக்கு இப்போது கிட்டத்தட்ட 90 வயதாகிறது. இந்த நூலாசிரியருக்குத் தமது இளமைப்பருவ அனுபவங்கள் கை கொடுத்தன போலும்.
அவ்வளவு அழகாக மார்க்சுக்கும் ஜென்னிக்கும் இருந்த காதல் பற்றி அவர் விவரிப்பது உண்மையில் இந்த நூலாசிரியர் அந்த காலக்கட்டத்தில் மார்க்ஸ் – ஜென்னியுடன் இருந்தவர் போன்று அவ்வளவு சிறப்பாக வர்ணிக்கிறார்.
உண்மையில் ஜென்னி, பேரழகி- வயதில் மூத்தவர் – மிகவும் பெரிய பணக்காரக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்து வந்தவர் – காதல் என்று வந்தபோது தன்னிலும் இளைய ஒருவருக்காக அவர் செய்த தியாகங்கள் அனைத்தும் வீண் போகவில்லை என்றே இந்த உலகம் பறைசாற்றிக் கொண்டிருக்கிறது.
ஒருவர் இந்தப் புத்தகத்தைப் படித்தால்தான் அந்த மென்மையான காதல் உணர்வுகளைப் பற்றிப் புரிந்து கொள்ள முடியும்.
அதேபோல் காதல் வயப்பட்ட மார்க்ஸ் மற்ற இளைஞர்கள் போல் அல்லாது அன்றைய காலக்கட்டத்தில் தோன்றிய தத்துவங்கள், நடைமுறைப் பிரச்சனைகள், ஆளும் வர்க்கங்கள் ஆகிய அனைத்தையும் பற்றி எவ்வளவு கவலையோடு சிந்தித்து, பல்வேறு நால்களைத் தேடி, அலைந்து படித்து மிகச்சிறந்த மார்க்சியத் தத்துவத்தை நமக்கு அளித்துச் சென்று உள்ளார் என்பதைப் பார்க்க முடிகிறது.
மார்க்சுக்குக்கிடைத்த மிகப்பெரிய சொத்து என்பது எங்கல்ஸ் தான்.
கண்டிப்பாக எங்கல்ஸ் என்ற ஒரு நண்பனை மார்க்ஸ் பெற்றிருக்காவிட்டால் அவரது புத்தகங்கள் எவற்றையும் படிக்கும் வாய்ப்பு நமக்கு கிடைத்திருக்காது.
அதேபோல் ஜென்னி மட்டும் அவருக்குத் துணைவியராகக் கிடைக்காது போயிருந்தால் அவருடைய அரிய புத்தகங்களை நாம் கண்ணுற்றே இருக்க முடியாது.
மார்க்ஸின் கிறுக்கலான எழுத்துக்கள் அனைத்தையும் குறிப்பெடுத்து எழுதியவர் ஜென்னி என்பதை நாம் மறக்க முடியாது.
இந்த நூலைப்படிக்கும் போது அந்தக் காலத்தில் பரவலாக நடைமுறையில் இருந்த (அவருக்கு முந்தியக்காலங்களில் வாழ்ந்துவந்த பல்வேறு தத்துவமேதைகளின்) முக்கியக் கருத்துக்களை -தத்துவங்களை – ‘ஏற்றுக் கொண்டது; அல்லது அவற்றுடன் முரண்பட்டது’
என்ற வகையில் அதாவது மார்க்ஸ் தமது சுயசிந்தனை மற்றும் சொந்த அனுபவங்களின் அடிப்படையில் நன்றாகப் புரிந்து கொண்டு பல்வேறு விளக்கங்களை அளித்து உள்ளது நமக்குப் புலப்படுகிறது.
இவரது தத்துவத்தைப் பின்பற்றி ஜார்ஜ் லூகாஸ், பிரேட்ரிக் ஜேம்ஸன், பிரான்சிஸ் ஈகிள்டன், லுடோவிகோ சில்வா, பாலோ ப்ரைரே, வில்ஹல்ம் லீப் நெக்ட், போன்ற பல அறிஞர்கள், உலகம் முழுவதும் இவரது தத்துவத்தை எடுத்துச் சென்றனர் என்ற விவரத்தையும் பதிவு செய்திருக்கிறார்.
21-ம் நூற்றாண்டின் மிகச்சிறந்த முதலாளித்துவப் பொருளாதார நிபுணர்கள்கூட, குறிப்பாக ஜான் பெர்கின்ஸ், ஜேம்ஸ் ரிச்சர்ட், பேராசிரியர் ஜோஷ்னா சுபாப் போன்ற பல பொருளாதார வல்லுனர்கள், மார்க்சின் கருத்து மிகச் சரியானது என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டியது ஆயிற்று.
தாமஸ் பிக்கட்டி, ‘மூலதனம்: இருபதாம் நூற்றாண்டு’ என்ற ஒரு நூலை எழுதி இருக்கிறார்.
இதில் ‘கடந்த இருநூறு ஆண்டுகளில் நடந்த நிகழ்ச்சிகள், மார்க்ஸ் கூறிய கருத்துகள் மிகச் சரியானவை என்பதை நிரூபித்து வருகின்றன’ என்று கூறுகிறார்.
மார்க்ஸைப் பரம எதிரியாகப் பார்த்த முதலாளித்துவ அறிவுலகம் கூட அவரைச் சமூக விஞ்ஞானியாகப் பார்க்கத் துவங்கியதைப்பற்றி இப்புத்தகம் குறிப்பிடுகிறது.
இது மிகச் சிறிய நூலாக இருந்தாலும், மிகப்பெரிய விஷயங்களை உள்ளடக்கி உள்ளது.
இந்நூல் ஆசிரியர் கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக மார்க்சியத் தத்துவத்தில் ஊறிப்போனவர், மற்றும் களப்பணியாளர் என்பதை இந்த நூல் எடுத்துக்காட்டுகிறது.
இந்த நூலைச் செம்மைப்படுத்தியதில் தோழர் ‘மயிலை பாலு’வின் பங்கு மிகவும் குறிப்பிடத்தக்கது. அனைவரும் வாங்கிப் படிக்க வேண்டிய நூல் இது.
– க. உதயகுமார்,
ஒருங்கிணைப்பாளர்,
தமிழ்நாடு மக்கள் ஒற்றுமை மேடை
*****
நூல்: முரட்டு இளைஞன் மார்க்ஸ், ‘மூலதன’ அறிஞனான கதை
ஆசிரியர்: வே. மீனாட்சி சுந்தரம்
பாரதி புத்தகாலயம்
விலை: ரூ.63/-
#இந்திய_மார்க்சிஸ்டுக்_கம்யூனிஸ்டு #SFI #DYFI #மார்க்சியம் #மார்க்ஸ் #ஜென்னி #Marxist #marx #jenni #india #Communist_Party_Of_India #Marxist #முரட்டு_இளைஞன்_மார்க்ஸ்_மூலதன_அறிஞனான_கதை_நூல்