ஊர் சுற்றி குறிப்புகள்:
சென்னை பிரஸ் கிளப்பில் விகடன் இணையதள முடக்கத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கான பத்திரிகையாளர்கள் கலந்து கொண்டார்கள்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்களை கை, கால்கள் விலங்கிட்டு அமெரிக்க அரசு இந்தியாவிற்கு அனுப்பி வைத்ததைக் கண்டிக்கும் விதத்தில் ஒரு கார்ட்டூனை ஆனந்த விகடன் இணையதளம் வெளியிட்டிருந்தது. வெளியிட்ட சில மணி நேரங்களுக்குள் ஒட்டுமொத்த விகடன் இணையதளமே முடக்கப்பட்டது.
முடக்கப்பட்ட மறுநாள், “ஏன் முடக்கக் கூடாது” என்கின்ற ஒரு நோட்டீஸ் விகடன் நிறுவனத்திற்கு விடப்பட்டிருந்தது. இதைக் கண்டிக்கும் விதத்தில், அரசியல் சார்பற்ற முறையில், பலவிதமான எதிர்ப்புக் குரல்கள் ஒன்றிய அரசுக்கு எதிராக எழுந்தன.
இந்த நிலையில்தான் சென்னை பிரஸ் கிளப்பில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் அச்சு மற்றும் காட்சி ஊடகங்கள், இணைதள ஊடகங்களைச் சார்ந்த நூற்றுக்கணக்கான ஊடகவியலாளர்கள் கலந்துகொண்டு ஒன்றிய அரசின் முடக்கத்திற்கு எதிரான கண்டன முழக்கங்களை எழுப்பினார்கள்.
பிரஸ் கிளப் நிர்வாகிகள் கண்டித்து பேசினார்கள். தொடர்ந்து இந்து ராம், சன் டிவி குணசேகரன், புதிய தலைமுறை கார்த்திகைச் செல்வன் உள்ளிட்ட சிலரும் ஒன்றிய அரசுக்கு கண்டித்துப் பேசினார்கள்.
நீண்ட காலத்திற்கு பிறகு சென்னை பிரஸ் கிளப்புக்கு முறைப்படியான கண்காணிப்புடன் கூடிய தேர்தல் நடந்து முடிந்து புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, இரண்டாவது முறையாக இத்தகைய கண்டன ஆர்ப்பாட்டம் இவ்வளவு திரளான பத்திரிகையாளர்களின் பங்கேற்புடன் நடந்திருப்பது ஜனநாயகத்திற்கு ஆரோக்கியமானதொரு அம்சம்.
இனி எந்த ஊடகவியலாளருக்கோ, அல்லது எந்த ஊடகத்திற்கோ எவ்வகையான அச்சுறுத்தலோ, அடக்குமுறையோ, நிகழ்த்தப்பட்டாலும் இத்தகைய ஒருங்கிணைப்பும் ஒற்றுமையும் தொடர்ந்து நிகழ்ந்தால், அரசின் அத்துமீறல்கள் குறைவதற்கான வாய்ப்புகளை உருவாக்கும்.
ஊடகவியலாளர்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்வதில் தொடர்ந்து ஒன்றிணையட்டும்.