சில திரைப்படங்களில் கதை எனும் அம்சம் சட்டென்று நம்மை ஈர்க்கும். அதேநேரத்தில், அதற்குத் திரைக்கதை அமைத்து காட்சியாக்கம் செய்த விதம் சலிப்படைய வைக்கும்.
குறிப்பாக, காமெடி திரைப்படங்கள் இந்த சிக்கலை அதிகம் சந்திக்கும். ஏனென்றால், ‘டைமிங்’ தவறிய காமெடிகள் ரசிகர்களைக் கடுப்பேற்றும். சிறப்பான நடிப்புக் கலைஞர்களைக் கொண்டிருந்தும், சில படங்கள் அப்படி மண்ணைக் கவ்வியிருக்கின்றன.
சரி, ‘பேபி & பேபி’ விமர்சனத்தில் மேற்சொன்ன கருத்துக்கு என்ன தேவை இருக்கிறது?
இந்த கேள்விக்குப் பதில் தெரிய வேண்டுமா?
’பேபி & பேபி’ கதை!
பழனி வட்டாரத்திலுள்ள ஒரு ஜமீன் குடும்பத்தைச் சேர்ந்தவர் மகாலிங்கம் (சத்யராஜ்). அவரது மகன் சிவா (ஜெய்). தந்தையின் எதிர்ப்பை மீறி, பிரியா (பிரக்யா நக்ரா) எனும் பெண்ணைக் காதல் திருமணம் செய்கிறார்.
மகாலிங்கம் தன் பரம்பரைக்கு ஒரு ஆண் வாரிசு வேண்டும் என்று விருப்பப்படுகிறார். அவரது மகளுக்கு (பாப்ரி கோஷ்) அடுத்தடுத்து பெண் குழந்தைகள் பிறக்கின்றன. அதனால் வீட்டிலேயே இருக்கும் மகளுக்கோ, மருமகனுக்கோ (ஸ்ரீமன்) அவர் முக்கியத்துவம் கொடுப்பதில்லை. பேத்திகளுக்கும் அதே கதைதான்.
ஓரிரு ஆண்டுகள் கழித்து, சிவாவுக்கு ஆண் குழந்தை பிறந்ததை அறிகிறார் மகாலிங்கம். மனைவி குழந்தையை அழைத்துக்கொண்டு வீட்டுக்கு வருமாறு அழைப்பு விடுக்கிறார். ஊரே திரண்டு கொண்டாடும் அளவுக்கு விழாவொன்றுக்கு ஏற்பாடு செய்கிறார்.
மதுரை பகுதியைச் சேர்ந்தவர் முத்தையா (இளவரசு). அவரது இரண்டாவது மகன் குணா (யோகிபாபு) மலர் (சாய் தன்யா) என்ற பெண்ணைக் காதல் திருமணம் செய்துகொள்கிறார். அவர்களுக்குப் பெண் குழந்தை பிறக்கிறது.
ஜோதிடத்தில் அதிக ஆர்வமுள்ள முத்தையா, ‘பெண் குழந்தை பிறந்தால் தனது குடும்பம் மேன்மை அடையும்’ என்று நம்புகிறார். மூத்த மகனுக்கு இரண்டு ஆண் குழந்தைகள். அதனால், துபாயில் இருக்கும் குணாவுக்குப் பெண் குழந்தை பிறந்தது அறிந்து, அவரை வீட்டுக்கு வருமாறு அழைக்கிறார்.
விமானத்தில் ஊர் திரும்பும் சிவா – பிரியா, குணா – மலர் தம்பதியர் தத்தமது குழந்தைகளுக்கு ‘ஸ்வெட்டர்’ அணிந்து அழைத்து வருகின்றனர். இரண்டும் ஒரே மாதிரியாக இருக்கின்றன.
அப்புறமென்ன, விமான நிலையத்தில் இருந்து கிளம்பும்போது இரண்டு குழந்தைகளும் இடம் மாறுகின்றன. அதனை இரு ஜோடிகளும் உணரும்போது, நிலைமை கைமீறிப் போகிறது.
உடனடியாக ஊர் திரும்ப வேண்டிய சூழல். முதலில் நடந்ததை எண்ணி ஆத்திரமடைபவர்கள் ஒருவழியாகச் சமாதானமாகின்றனர். நடுவே ஓரிடத்தில் சந்தித்து குழந்தைகளை மாற்றிக் கொள்வதாகத் திட்டமிடுகின்றனர். அது கைகூடாமல் போகிறது.
அதனால், சிவா பெற்றெடுத்த ஆண் குழந்தையைத் தூக்கிக்கொண்டு குணாவும், குணாவின் பெண் குழந்தையைச் சிவாவும் தூக்கிக்கொண்டு அவரவர் வீடுகளுக்குச் செல்கின்றனர்.
எவ்வளவு முயற்சி செய்தும், அவர்களால் தங்களது வீடுகளை விட்டு வெளியே வர முடியாத சூழல். அதன்பிறகு என்னவானது?
யாருக்கும் தெரியாமல் குழந்தைகளை இடம் மாற்றம் செய்ய அவர்களால் முடிந்ததா? அவர்கள் வீட்டில் இருப்பவர்கள் இந்த உண்மையை அறிந்தார்களா? இதற்கு நடுவே, வேறு நபர்களால் இருவரது குடும்பத்திலும் குழப்பம் ஏற்பட்டதா என்பது போன்ற கேள்விகளுக்குப் பதிலளிக்கிறது ‘பேபி & பேபி’யின் மீதிப்பாதி.
உண்மையைச் சொன்னால், ஆள் மாறாட்டம் எனும் விஷயத்தை வைத்துக்கொண்டு திரையில் நகைச்சுவையை அள்ளித் தெளித்திருக்கலாம். ரசிகர்களை வாய்விட்டுச் சிரிக்க வைத்திருக்கலாம். ’அதெப்படிங்க சிரிக்கறப்போ வாயை விட்டுர முடியும்’ என்று கவுண்டமணி பாணியில் ‘கவுண்டர்’ தரும் அளவுக்குத் தெனாவெட்டான ஒரு கதை இப்படத்தில் இருக்கிறது. ஆனால், ‘அதை எதுக்கு நாங்க செய்யணும்’ என்பது போன்று ’பேபி & பேபி’யின் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது.
வீணான வாய்ப்பு!
இந்த படத்தில் ஜெய், சத்யராஜ், யோகிபாபு, இளவரசு, ஸ்ரீமன், ஆனந்தராஜ், நிழல்கள் ரவி, சிங்கம்புலி, மொட்டை ராஜேந்திரன், ரெடின் கிங்ஸ்லி, ஆர்ஜே விக்னேஷ்காந்த், தங்கதுரை, கேபிஒய் ராமர், மறைந்த காமெடி நடிகர் சேஷு, கல்கி ராஜா என்று பல நடிகர்கள் இருக்கின்றனர். இவர்களில் பலர் நகைச்சுவை நடிப்பில் தோரணம் கட்டி தியேட்டரை விழாக்கோலம் பூண வைப்பவர்கள். ஆனால், அவர்களுக்கான வாய்ப்புகள் திரைக்கதையில் சரிவரத் தரப்படவில்லை. அந்த வகையில், மிகப்பெரிய வாய்ப்பொன்று வீணடிக்கப்பட்டிருக்கிறது.
பிரக்யா நக்ரா, சாய் தன்யா என்று இரண்டு நாயகிகள். ஆனால், அவர்கள் குழந்தைகளைத் தூக்கிக்கொண்டு வந்து சென்றிருக்கின்றனர். அவர்களுக்கு முக்கியத்துவம் தருவதாக அமைக்கப்பட்ட காட்சிகளோ ‘க்ளிஷே’வாக தெரிகின்றன.
சத்யராஜின் மனைவியாக வரும் கீர்த்தனாவுக்கோ, அவர்களது மகளாக வரும் பாப்ரிக்கோ தனியாக ‘ஸ்கோர்’ செய்யக் காட்சிகள் இல்லை. குறைந்தபட்சமாகச் சில வசனங்கள், ஷாட்கள் கூட ஒதுக்கப்படவில்லை. ஆனாலும், இப்படம் இரண்டரை மணி நேரம் ஓடுகிறது. அதுவே இப்படத்தின் பலவீனம்.
ஒளிப்பதிவாளர் சாரதி, படத்தொகுப்பாளர் ஆனந்தலிங்ககுமார், கலை இயக்குனர் விஜய் ஐயப்பன் உட்படப் பல தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பு இப்படத்தில் அடங்கியிருக்கிறது.
டி.இமான் இசையில் ‘தென்பாண்டி முத்துப் போல’ பாடல் தியேட்டரில் ஓங்கி ஒலிக்கிறது.
’ஆரா அமுதே’, ’என்ன தவம் செய்தேனோ’ பாடல்கள் மெலடி மெட்டுகளாக இருக்கின்றன. ’கிங்கினி கிங்கினி’ பாடல் சட்டென்று ஈர்க்கிறது.
காட்சிகளில் பெரிதாக நகைச்சுவை இல்லாமல் இருக்கும் நிலையில், பின்னணி இசையால் அதனைச் சரிப்படுத்த முயன்றிருக்கிறார்.
சில பாடல்களில் நாயகிகள், குடும்ப உறுப்பினர்கள் நடனமாடுவதாகக் காட்சியாக்கம் செய்யப்பட்டிருக்கிறது. என்னதான் நகைச்சுவை படமென்றாலும், ‘குழந்தை இடம் மாறிப்போன அல்லது காணாமல்போன துக்கம்’ அப்பாத்திரங்களைக் காட்டுவதுதான் பொருத்தமானதாக இருக்க முடியும். அதுபோன்ற குறைகள் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை குலைத்துச் சரிக்கின்றன.
பிரதாப் இப்படத்தை எழுத்தாக்கம் செய்து இயக்கியிருக்கிறார். பெரிய நட்சத்திரப் பட்டாளத்தை அழைத்து வருவதற்கு ஏற்ற கதையொன்றை யோசித்திருக்கிறார். சில திரைக்கதை எழுத்தாளர்களை அழைத்து வந்து காட்சிகளில் சிற்சில மாற்றங்களைச் செய்திருந்தாலே, இப்படம் இன்னொரு உயரத்தைத் தொட்டிருக்கும். இப்போது, சிறு குன்றின் மீது தத்தித் தத்தி ஏற முயற்சித்திருக்கிறது.
குடும்பம் குடும்பமாக தியேட்டருக்கு மக்களை அழைத்து வருகிற ஒரு வாய்ப்பு நழுவிப்போன சித்திரம் மட்டுமே ‘பேபி & பேபி’ பார்த்து முடித்ததும் மிஞ்சுகிறது.
- உதயசங்கரன் பாடகலிங்கம்