’காதல்னா என்னன்னு தெரியுமா’ என்று ‘பாடம்’ எடுக்கும் படங்கள் பலவற்றை நாம் கண்டிருப்போம். தமிழ் சினிமாவில் அப்படிப்பட்ட படங்களுக்கென்று தனி வகைமையே பிரிக்கலாம். அவற்றில் இரண்டு படங்கள் விஜய்யின் திரை வாழ்க்கையில் ஒளி கூட்டின. ‘பூவே உனக்காக’, ‘காதலுக்கு மரியாதை’ ஆகிய படங்களே அவை. கிட்டத்தட்ட இவை இரண்டையும் குறிப்பிட்ட விகிதத்தில் ஒன்றிணைத்து, ’காதல் என்பது பொதுவுடைமை’ என்று சொல்ல முயன்றிருக்கிறார் இயக்குனர் ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன்.
இந்த படத்தில் லிஜோமோள் ஜோஸ், அனுஷா பிரபு, கலேஷ் ராமனாந்த், ரோகிணி, தீபா சங்கர், வினீத் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
‘காதல் என்பது பொதுவுடைமை’ திரைப்படம் தருகிற காட்சியனுபவம் எத்தகையது?
கா.எ.பொ. கதை!
தாய் லட்சுமி (ரோகிணி) உடன் வசித்து வருகிறார் இளம்பெண் சாம் (லிஜோமோள் ஜோஸ்). தந்தை தேவராஜ் (வினீத்) அவர்களுடன் இல்லை. லட்சுமியை விவாகரத்து செய்த அவருக்கு வேறொரு பெண்ணுடன் திருமணமாகிவிட்டது.
ஒருநாள் தனது தாயிடம் ‘நான் காதலிக்கிறேன்’ என்கிறார் சாம். ‘அந்த நபரை ஞாயிற்றுக்கிழமையன்று லஞ்சுக்கு அழைத்து வா’ என்கிறார் லட்சுமி.
ஞாயிற்றுக்கிழமை வருகிறது.
அன்றைய தினம் லட்சுமி பரபரப்பாக இருக்கிறார். ‘மாப்பிள்ளை எப்படி இருப்பாரோ’ என்ற எதிர்பார்ப்பைச் சுமந்து நிற்கிறார். அதேநேரத்தில், அவர் எப்படிப்பட்டவராக இருந்தாலும் மகளின் விருப்பத்திற்குக் குறுக்கே நிற்கக் கூடாது என்றெண்ணுகிறார்.
தேவராஜை அழைத்து, மகளின் காதல் விஷயத்தைச் சொல்கிறார். ‘திடீர்னு சொன்னா என்னால வர முடியாது’ என்கிறார் தேவராஜ். ‘என்னோட வாழ்த்துகளை சொல்லிடு, இன்னொரு நாள் அவங்களை மீட் பண்றேன்’ என்கிறார்.
வழக்கமாகச் சரியான நேரத்திற்கு வேலைக்கு வரும் வேலைக்காரப் பெண் மேரி (தீபா சங்கர்) அன்றைய தினம் தாமதமாக வருகிறார். ‘மகளை அடிச்சுட்டான்னு மருமகன் பேர்ல போலீஸ் ஸ்டேஷன்ல புகார் கொடுத்துட்டு வர்றேன்’ என்கிறார். இனிமேல் மகளையும் அவளது குழந்தைகளையும் தானே வளர்க்கப் போவதாகச் சொல்கிறார்.
மேரி மீது கோபமாக இருக்கும் லட்சுமி, விஷயம் அறிந்ததும் அவரைச் சமாதானப்படுத்துகிறார்.
சில நிமிடங்கள் கழித்து, ரவீந்திராவும் (கலேஷ் ராமானந்த்) நந்தினியும் (அனுஷா பிரபு) அவ்வீட்டுக்குள் நுழைகின்றனர்.
‘ரவீந்திரா தான் மாப்பிள்ளை’ என்றெண்ணி அவரை விழுந்து விழுந்து கவனிக்கிறார் லட்சுமி. ஆனால் சாமின் கவனமெல்லாம் நந்தினியின் மீதிருக்கிறது. அடுத்த சில நொடிகளில் அதற்கான காரணத்தை அவர் சொல்கிறார்.
‘அம்மா நான் நந்தினியை லவ் பண்றேன்’ என்று லட்சுமியிடம் சொல்கிறார். அப்போதுதான், ரவீந்திரா இரண்டு பெண்களுக்கும் நண்பர் என்பது தெரிகிறது.
மகள் சாம் சொல்வதைத் தாய் லட்சுமி ஏற்றுக்கொண்டாரா? அதன்பின் என்னவானது என்று சொல்கிறது ‘காதல் என்பது பொதுவுடைமை’ படத்தின் மீதி.
மரியாதை தரும் ‘ட்ரீட்மெண்ட்’!
’காதல் என்பது பொதுவுடைமை’ திரைப்படம் தன்பாலின ஈர்ப்பைப் பேசுகிறது என்பதை ‘ட்ரெய்லர்’ வழியே முன்கூட்டியே உணர்த்தியது படக்குழு.
ஒரு தாயிடம் மகள் அந்த விஷயத்தை முதன்முறையாக எப்படித் தெரிவிக்கிறார் என்பதுவே இப்படத்தின் அடிப்படை. அதற்கேற்றவாறு, முன்பாதி முழுக்க அதனை நோக்கியே நகர்கிறது. அதுவே இப்படத்தின் யுஎஸ்பி.
பின்பாதியில், அதனைச் சில கதாபாத்திரங்கள் எப்படி எதிர்கொள்கின்றன என்பது சொல்லப்படுகிறது. அது நேர்த்தியாகவும் எதிர்மறை கருத்துகளுக்கு இடமில்லாத வகையிலும் சொல்லப்பட்டிருக்கிறதா என்றால், ‘ஆம்’ என்றே சொல்ல வேண்டும்.
அந்த வகையில், இயக்குனர் ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன் அவ்விஷயத்தைக் கவனமாகக் கையாண்டிருக்கிறார். படம் பார்க்க வருபவர்கள் கிண்டலடித்துவிடக் கூடாது என்பதில் சிரத்தை காட்டியிருப்பதோடு, தன்பாலின ஈர்ப்பை வெறுப்பவர்கள் அருவெருப்பாக உணராத வண்ணம் திரைக்கதையின் ஒவ்வொரு அசைவிலும் கவனத்தைக் கொட்டியிருக்கிறார்.
அதுவே ‘நாடக பாணி’ காட்சிகளால் மனம் அயர்ச்சியுறாதபடி நம்மைக் காப்பாற்றுகிறது.
’பீல்குட் பிரேம்’களை வடித்து திரையில் இருந்து கவனம் திரும்பாதவண்ணம் பார்த்துக் கொள்கிறார் ஒளிப்பதிவாளர் ஸ்ரீ சரவணன்.
கலை இயக்குனர் ஆறுச்சாமி, இப்படத்தில் உயர் நடுத்தர வர்க்கத்து குடும்பத்தின் சூழலைத் திரையில் பிரதிபலித்திருக்கிறார்.
குறிப்பிட்ட தருணத்தை மட்டுமே மையப்படுத்திய கதையில் சொல்லப்படாத விஷயங்கள் குறித்து குழப்பங்கள் ஏற்படாதவண்ணம் காட்சிகளைத் தொகுத்திருக்கிறார் படத்தொகுப்பாளர் டேனி சார்லஸ்.
கண்ணன் நாராயணனின் இசையில் ‘தீயாய் மோதும் கண்கள்’ பாடல் சட்டென்று ஈர்ப்பைத் தருகிறது. அதில் வரும் தொடக்க இசைத்துணுக்கைப் பின்னணியிலும் அவர் பயன்படுத்தியிருக்கிறார். அது பழைய பாடலொன்றைக் கேட்ட உணர்வைத் தருகிறது.
இவை தவிர்த்து இதர தொழில்நுட்ப உழைப்பையும் சரியாக ஒருங்கிணைத்து, ஒரு ‘பீல்குட் ரொமான்ஸ் மூவி’ தருகிற அனுபவத்தைத் திரையில் ஆக்க முயன்றிருக்கிறார் இயக்குனர் ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன்.
நாயகியாக நடித்துள்ள லிஜோமோள் ஜோஸ், இதற்கு முன் நடித்த திரைப்படங்களைப் போலவே இதிலும் பாந்தமாக வந்து போயிருக்கிறார். ‘சாம்’ எனும் கதாபாத்திரமாகவே உணர வைக்கிறார். இப்படத்தில் அப்பாத்திரத்தின் முழுப்பெயர் என்ன என்று நாம் தெரிந்துகொள்ள முயலாதவாறு, அப்பாத்திரம் எதிர்கொள்ளும் உணர்வெழுச்சியை மட்டுமே நம்மில் நிறைக்கிறார்.
ரோகிணியின் திரை வாழ்வில் இது இன்னொரு படம். ஆனால், எங்குமே அதன் சாயல் தெரிந்துவிடாதவாறு லட்சுமி எனும் பாத்திரமாகவே தெரிகிறார்.
வினீத், அவரது மனைவியாக வருபவர் இருவரும் திரையில் செயற்கையாகத் தெரிகின்றனர். அதற்கு இயக்குனரின் பாத்திர வார்ப்பை மட்டுமே நாம் குறை சொல்ல வேண்டும்.
கலேஷ் ராமானந்த், இதில் நாயகியின் நண்பனாக வந்து போயிருக்கிறார். அனுஷா பிரபுவின் நடிப்பு, ‘இவர்தான் நந்தினி பாத்திரத்திற்குப் பொருத்தமானவர்’ என்று சொல்லும் வகையில் அமைந்திருக்கிறது. அடுத்த படங்களில் வேறுமாதிரியான பாத்திரங்களில் இவரைக் காண வேண்டும் என்றெண்ணச் செய்கிறது அவரது நடிப்பு.
தீபா சங்கர் வழக்கம்போலத் திரையில் ‘நெல்லை பாஷை’ பேசி, நம் மனதோடு உரையாடவல்ல நடிப்பைத் தந்திருக்கிறார்.
இந்த படத்தில் வினீத் – ரோகிணி பிரிவை வசனங்களின் வழியே விளக்கியிருக்கிறார் இயக்குனர். அதேநேரத்தில், நந்தினி பாத்திரத்தின் பின்னணியைச் சொல்ல ‘பிளாஷ்பேக்’ உத்தியைப் பயன்படுத்தியிருக்கிறார். அதுதான் பார்வையாளர்களுக்குப் பிரச்சனையின் அழுத்தத்தை உணர வைக்கும் என்று அவர் எண்ணியிருக்கலாம்.
அவரவர் விருப்பங்களைப் பொறுத்து, இப்படத்தில் குறைகளைப் பட்டியலிட முடியும்.
மிகச்சில பாத்திரங்கள், குறைவான லொகேஷன்கள், ஒரேயொரு விஷயத்தைச் சுற்றி வருகிற திரைக்கதை என்று படத்தை ‘ஸ்லோமோஷனில்’ பார்க்கிற உணர்வைத் தருகிற விஷயங்கள் இதில் கணிசம். ஆனாலும், இயக்குனர் ஒரு புதிய உலகத்தை இதில் காட்டியிருக்கிறார் அல்லது பொதுவெளியில் அங்கொன்றும் இங்கொன்றுமாய் நிகழ்கிற விஷயத்தை நம் முன்னே வைத்திருக்கிறார்.
’தன்பாலின ஈர்ப்பைப் பேசுகிறேன் பேர்வழி’ என்று எல்லை மீறுகிற காட்சியாக்கத்தை இப்படம் கொண்டிருக்க முடியும். இதிலும் அந்த எல்லைகளை நோக்கிப் பயணிக்கிற இடங்கள் இருக்கின்றன. ஆனாலும், தன்பாலின ஈர்ப்பைக் கொஞ்சமும் விரும்பாத ஒருவரும் காணும் வகையிலேயே மொத்தப் படத்தையும் ஆக்கியிருக்கிறார் இயக்குனர் ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன். அதுவே இப்படத்தின் சிறப்பு.
இது போன்ற திரைப்படங்கள் இதுநாள்வரை திரைப்பட விழாக்களை மட்டுமே அலங்கரித்திருக்கின்றன. தியேட்டரில் வெளியாகி மக்களின் பார்வைக்கு இது போன்ற படங்கள் முன்வைக்கப்படும் கலாசாரத்தைத் தொடங்கி வைத்திருக்கிறது இப்படம்.
அந்த வகையில், ‘காதல் என்பது பொதுவுடைமை’ ஒரு சிறப்பான முயற்சி.
ஏற்கனவே சொன்னது போல, இந்த படத்தில் ‘பூவே உனக்காக’, ‘காதலுக்கு மரியாதை’ இரு படங்களின் சாயல் நன்றாகவே தெரியும். ’பூவே உனக்காக’ விஜய்யின் பாத்திரத்தில் கலேஷையும், ‘காதலுக்கு மரியாதை’ நாயகன் நாயகியாக லிஜோமோள் – அனுஷா ஜோடியையும் பொருத்திப் பார்த்தால், ‘தன்பாலின காதலுக்கு அனுமதி’ எனும் வேண்டுகோளை முன்வைப்பதாகத் தோற்றம் தரும் இந்த ‘காதல் என்பது பொதுவுடைமை’.
தமிழ் திரையில் காதலைக் காட்டும் விதம் எப்படியெல்லாம் மாற்றம் கண்டிருக்கிறது என்று ஆராய்ந்து நோக்கினால், அந்த வரிசையில் இப்படைப்பையும் சேர்க்கலாம்..!
– உதயசங்கரன் பாடகலிங்கம்